Monday, 3rd June 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

லட்சக் கணக்கில் மாமுல் வசூல்: டிஎஸ்பி - இன்ஸ்பெக்டர் உள்பட 3 பேர் மீது வழக்கு

ஜுலை 23, 2019 04:13

சேலம்: நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு பகுதியை சேர்ந்தவர் குமார், கஞ்சா வியாபாரி. இவருடைய மனைவி ராணி. இவர் சேலம் லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் ஒன்று கொடுத்தார். அந்த மனுவில் கூறியிருப்பதாவது:-

என்னுடைய கணவரை கஞ்சா விற்றதாக போலீசார் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். இந்த நிலையில் என்னை கஞ்சா விற்பனை செய்யுமாறு சேலம் போதைபொருள் தடுப்பு பிரிவு துணை போலீஸ் சூப்பிரண்டு குமார் தொடர்ந்து வற்புறுத்தினார். இதையடுத்து நான் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டேன். இதற்காக அவர் என்னிடம் மாதந்தோறும் ரூ. 25 ஆயிரம் வரை மாமுல் பெற்று வந்தார். இதற்கிடையில் கூடுதல் மாமூல் என்னிடம் கேட்டதால் நான் ஆந்திராவுக்கு சென்று விட்டேன்.

குழந்தைகளை என்னுடைய தாய் கவனித்து வந்தார். ஆனால் அவர் மீது கஞ்சா விற்றதாக பொய் வழக்குப்பதிவு செய்து கைது செய்து விட்டனர். மேலும் என் மீதும் வழக்குப்பதிவு செய்யாமல் இருக்க போலீஸ் இன்ஸ்பெக்டர் சாந்தாவும் மாமுல் கேட்டு துன்புறுத்துகிறார். எனவே அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும்.

இவ்வாறு அதில் கூறி இருந்தார்.

அதன்பேரில் லஞ்ச ஒழிப்பு போலீஸ் கூடுதல் சூப்பிரண்டு சந்திரமவுலி மற்றும் போலீஸ்சார் விசாரணை நடத்தினர். இதில் ராணி உள்பட கஞ்சா வியாபாரிகளிடம் பல லட்சம் ரூபாய் துணை போலீஸ் சூப்பிரண்டு குமார் மற்றும் இன்ஸ்பெக்டர் சாந்தா ஆகியோர் வசூல் செய்தது தெரியவந்தது. கஞ்சா வியாபாரிகளிடம் பெற்ற லஞ்ச பணத்தை துணை போலீஸ் சூப்பிரண்டு குமார், தனது மனைவியின் சகோதரரும், தஞ்சாவூர் மாவட்ட கருவூல கண்காணிப்பாளராகவும் உள்ள சிபிசக்கரவர்த்தி வங்கி கணக்கில் செலுத்தியது கண்டுபிடிக்கப்பட்டது.

மேலும் கஞ்சா வியாபாரிகளே பல நேரங்களில் வங்கியில் பணம் செலுத்தி வந்ததும் தெரியவந்தது. இதனால் அவரின் வங்கி கணக்கை லஞ்ச ஒழிப்பு போலீசார் ஆய்வு செய்தனர். பின்னர் டி.எஸ்.பி.குமார், கருவூல கண்காணிப்பாளர் சிபிசக்கரவர்த்தி ஆகியோர் மீது ஊழல் தடுப்பு சட்டத்தில் அரசு பணியை தவறாக பயன்படுத்தி பணம் வசூலில் ஈடுபடுதல், தவறான செயல்களுக்கு பணம் வசூல் செய்தல், மிரட்டுதல் ஆகிய பிரிவுகளில் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

கடந்த 2018-ல் சேலம் போதைபொருள் தடுப்பு நுண்ணறிவுப் பிரிவில் பணிபுரிந்த இன்ஸ்பெக்டர் சாந்தா மீது லஞ்சம் வாங்கியதாக வழக்குப் பதிவு செய்யப்பட்டு உள்ளது. இவர் தற்போது திருநெல்வேலி மாவட்ட மத்திய குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டராக பணிபுரிந்து வருகிறார்.

தலைப்புச்செய்திகள்