Tuesday, 21st May 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

விருது பெற்ற பெண் அதிகாரி கைது: ரூ.93.5 லட்சம் பறிமுதல்

ஜுலை 12, 2019 10:58


ஐதராபாத்: தெலுங்கானா மாநிலத்தின் ரங்கா ரெட்டி மாவட்டத்தில் கேஷம்பேட்டை  தாசில்தாராக பணிபுரிபவர் வி. லாவண்யா. இவர் ஐதராபாத்தின் ஹயாத்நகரில்  சொகுசு வீடு ஒன்றில் வசித்து வருகிறார். லாவண்யா வேலை செய்யும் அலுவலகத்தில் அனந்தையா என்பவர் வி.ஆர்.ஓ.வாக  பணிபுரிகிறார். இவர் விவசாயி ஒருவரிடம் ரூ.4 லட்சம் லஞ்சம் பெற்றபோது சிக்கினார்.  

முன்னதாக இவர் ரூ.5 லட்சம் தாசில்தாருக்கும், ரூ.3 லட்சம் தனக்கும் கொடுக்க வேண்டும் என கூறி இருந்தார். இதனையடுத்து அந்த விவசாயி அனந்தையாவுக்கு ரூ.4 லட்சம் வழங்கியுள்ளார். பணம் தன் கைக்கு வந்துவிட்டதாக   லாவண்யாவுக்கு தெரிவித்துள்ளார் அனந்தையா.

விவசாயி பாஸ்கர், தனக்கு வழங்கப்பட்ட ஆவணங்களில் பிழை இருப்பதை பார்த்துள்ளார். இந்த பிழையை திருத்தி புதிய ஆவணங்கள் பெறுவதற்காக முறையிட்ட போதுதான், லஞ்சம் கேட்கப்பட்டுள்ளது. பாதி பணம் கொடுத்த நிலையில், ஊழல் தடுப்புப் பிரிவினரிடம் பாஸ்கர் புகார் தெரிவித்துள்ளார். இதையடுத்து தாசில்தார் லாவண்யாவிடம் ஊழல் தடுப்புப் பிரிவு அதிகாரிகள் விசாரணை நடத்தியுள்ளனர். 

இந்த குற்றச்சாட்டை லாவண்யா மறுத்து வந்துள்ளார். இதையடுத்து  அதிகாரிகள் லாவண்யா வீட்டில் சோதனையில் ஈடுபட்டனர். இதில் ரூ.93.5 லட்சம் ரொக்கமாகவும், 400 கிராம் தங்கமும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து லாவண்யா கைது செய்யப்பட்டார். 

இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர், தெலுங்கானாவின் சிறந்த தாசில்தார் என்ற விருதை, அம்மாநில அரசிடமிருந்து லாவண்யா பெற்றவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

தலைப்புச்செய்திகள்