Tuesday, 21st May 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

விமான நிலையங்களை தனியார்மயமாக்குவதை கண்டித்து 20-ம் தேதி முதல் ஊழியர்கள் ஸ்டிரைக்

பிப்ரவரி 18, 2019 05:37

திருவனந்தபுரம்: விமான நிலையங்களை தனியார்மயமாக்குவதை கண்டித்து 20-ம் தேதி முதல் ஊழியர்கள் ஸ்டிரைக் 
விமான நிலையங்களை தனியார் மயமாக்குவதை கண்டித்து நாடுமுழுவதும் விமான நிலைய ஊழியர்கள் வரும் 20-ம் தேதி முதல் காலவரையற்ற வேலைநிறுத்தத்தில் ஈடுபடப்போவதாக அறிவித்துள்ளனர்.  

இந்தியாவில் 125 விமான நிலையங்கள் உள்ளன. இதில் டெல்லி, மும்பை போன்ற விமான நிலையங்கள் 33 ஆண்டுகளுக்கு தனியாரிடம் ஒப்பந்த அடிப்படையில்  கொடுக்கப்பட்டன. இதேபோன்று  திருவனந்தபுரம், மங்களூரூ, கவுகாத்தி, லக்னோ, அகமதாபாத், ஜெய்ப்பூர் ஆகிய 6 விமான நிலையங்களை 50 ஆண்டுகளுக்கு தனியாரிடம் ஒப்படைக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது.  

இதற்கு நாடு முழுவதும் விமான நிலைய ஊழியர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். 20-ம் தேதி முதல் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்ட உள்ளனர். இது குறித்து விமான நிலைய ஊழியர்கள் சங்கத்தின் தென்மண்டல செயலாளர் வி.பாஸ்கரன் கூறியதாவது: 

மத்தியில் ஆட்சியில் இருந்த காங்கிரஸ் 2013-ம் ஆண்டு சென்னை, கொல்கத்தா, கவுகாத்தி, அகமதாபாத் விமான நிலையங்களை தனியாரிடம் ஒப்படைக்க முடிவு செய்தது. இதனை எதிர்த்து விமான நிலைய ஊழியர்கள் தொடர் போராட்டங்களை நடத்தினர். அதன்பின் வந்த பாஜக அரசு விமான நிலையங்கள் தனியார்மயமாக்கப்படாது என்று உறுதியளித்தது.  

ஆனால், கடந்த 2018-ம் ஆண்டு டிசம்பர் மாதம் திருவனந்தபுரம், மங்களூரூ, கவுகாத்தி, லக்னோ, அகமதாபாத், ஜெய்ப்பூர் ஆகிய 6 விமான நிலையங்களை தனியாரிடம் ஒப்படைக்க  முடிவு செய்தது. இந்த விமான நிலையங்கள் 28-ம் தேதி தனியாரிடம் ஒப்படைக்கப்பட உள்ளன. இதை எதிர்த்து விமான நிலைய ஊழியர்கள் போராட்டம் நடத்தியும் அவர்களின் கோரிக்கையை மத்திய அரசு ஏற்கவில்லை. 

இந்த 6 விமான நிலையங்களும் தற்போது அதிக லாபத்தில் இயங்கி வருகின்றன. இவை தனியாரிடம் ஒப்படைக்கப்பட்டால், அவற்றில் பணியாற்றும் ஊழியர்கள், ஒன்று தங்கள் பதவியை ராஜினாமா செய்துவிட்டு, தனியார் நிறுவனத்திடம் வேலைக்குச் சேர வேண்டும். இல்லாவிட்டால் வேறு விமான நிலையங்களுக்கு பணிமாறுதல் பெற்றுச் செல்ல வேண்டும். இதனால் ஊழியர்கள் பெருமளவில் பாதிக்கப்படுவார்கள்.  

மத்திய அரசின் திட்டமே படிப்படியாக அனைத்து விமான நிலையங்களையும் தனியார் மயமாக்குவதாகும். விமான நிலையங்களை தனியார் மயமாக்கும் முயற்சியை கண்டித்தும், அத்திட்டத்தை கைவிடக் கோரியும் வரும் 20-ம் தேதி முழுவதும் விமான நிலைய ஊழியர்கள் காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடஉள்ளனர்.  

இதில் 10 ஆயிரம் ஊழியர்கள் பங்கேற்க உள்ளனர். முன்னதாக 19-ம்தேதி டெல்லியில் மத்திய அரசு, அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்த உள்ளது. ஊழியர்களின் வேலை நிறுத்தப் போராட்டத்தால் விமான போக்குவரத்து, விமான நிலைய பராமரிப்பு, சரக்குகள் கையாள்வது உட்பட அனைத்து பணிகளும் பாதிக்கப்படும் சூழ்நிலை ஏற்படும். 
இவ்வாறு வி.பாஸ்கரன் கூறினார்.

தலைப்புச்செய்திகள்