Monday, 20th May 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

தொழில் தொடங்குவதற்கான இடையூறுகளை களைவதே மத்திய அரசின் நோக்கம்: நிர்மலா சீதாராமன்

ஜுலை 05, 2019 11:59

புதுடெல்லி:  மத்திய பட்ஜெட்டை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மக்களவையில் இன்று தாக்கல் செய்தார். மத்தியில் பாஜ தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி அரசு தொடர்ந்து 2வது முறையாக ஆட்சி அமைத்துள்ளது. இந்நிலையில், முதல் பெண் நிதியமைச்சராக பொறுப்பேற்றுள்ள நிர்மலா சீதாராமன், தனது முதல் பட்ஜெட்டை தாக்கல் செய்தார். இதற்கு முன்பு முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி, 1970ல் கூடுதல் பொறுப்பாக நிதித்துறையை கவனித்துள்ளார். அப்போது அவர் பட்ஜெட் தாக்கல் செய்துள்ளார். 

பாராளுமன்றத்தில் மத்திய பட்ஜெட்டை நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் இன்று தாக்கல் செய்தார். அப்போது அவர் பேசியதாவது:- கடந்த 5 ஆண்டுகளில் உணவு பாதுகாப்பு திட்டத்திற்கு இருமடங்கு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. தேசிய பாதுகாப்பு, பொருளாதார வளர்ச்சிக்கு அரசு முன்னுரிமை அளிக்கும். புதிய இந்தியாவை உருவாக்கும் நோக்கில் அரசின் பணிகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளன.

2014ல் ஆட்சியமைக்கும்போது 1.55 லட்சம் கோடி டாலராக இருந்த பொருளாதாரம் கடந்த 5 ஆண்டுகளில் 2.7 லட்சம் கோடி டாலராக உயர்ந்துள்ளது.

சந்திராயன், ககன்யான் என விண்வெளித்துறையில் சாதனை படைத்துவருகிறது. அனைத்து துறைகளிலும் டிஜிட்டல் இந்தியா திட்டங்கள் கொண்டு செல்ல முனைப்பு காட்டப்படும். டிஜிட்டல் இந்தியாவின் பலனை நாட்டின் கடைக்கோடி கிராமம் வரை சென்றடையச் செய்வதே அரசின் நோக்கம். 

அனைவருக்கும் வீடு, கழிவறையை உறுதிபடுத்துவதில் அரசு முனைப்புடன் செயல்பட்டு வருகிறது. தொழில் தொடங்குவதற்கான இடையூறுகளை களைவதே மத்திய அரசின் நோக்கம். கடந்த 5 ஆண்டுகளில் மேற்கொள்ளப்பட்ட பொருளாதார சீர்திருத்தங்களில் ஏழை, எளிய மக்கள் பலனடைந்துள்ளனர். 

இந்திய பொருளாதாரம் உயர்வதற்கு தனியார் முதலீடுகளின் பங்களிப்பு இன்றியமையாதது. 5 ஆண்டுகளில் ஒரு லட்சம் கோடி டாலருக்கு பொருளாதாரத்தை உயர்த்த திட்டமிடப்பட்டுள்ளது. முத்ரா கடன் திட்டம் சாதாரண மக்களின் வாழ்க்கை தரத்தை மேம்படுத்தியுள்ளது.

மேக் இன் இந்தியா திட்டம் இந்தியாவின் சொத்தை அதிகரிக்கிறது; அந்த திட்டம் ஊக்குவிக்கப்படும். அந்நிய முதலீட்டை அதிகரிக்க மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.  உதான் திட்டங்கள் நாட்டின் சாதாரண மக்களுக்கு விமான சேவை கிடைப்பதை உறுதி செய்துள்ளன. 

பாதுகாப்பு துறையிலும் சிறு, குறு தொழில்முனைவோர்களின் பங்களிப்பை அதிகரிக்க வேண்டும் என்பதே நோக்கம். பொருளாதார அளவில் இந்தியா உலக அளவில் 6-வது இடத்தில் உள்ளது. கடந்த 5 ஆண்டுகளில் 657 கிமீ தொலைவுக்கு மெட்ரோ ரெயில் சேவை தொடங்கப்பட்டிருக்கிறது.

ரூபே கார்டுகள் மூலமாக போக்குவரத்து கட்டணங்கள் செலுத்தும் வசதி மேம்படுத்தப்பட்டுள்ளது. பேட்டரியில் இயங்கும் வாகனங்களின் தயாரிப்பை ஊக்குவிக்க அரசு நடவடிக்கை எடுக்கும். கங்கையாற்றில் நடைபெறும் படகு சரக்கு போக்குவரத்தை 4 மடங்கு அதிகரிக்க திட்டமிடப்பட்டுள்ளது.

மின்சார வாகனங்களுக்கு அதீத முக்கியத்துவம் வழங்கப்படும். 2018-30 ஆண்டுகளில் ரெயில்வே உள்கட்டமைப்பு பணிகளுக்காக ரூ.50 லட்சம் கோடி முதலீடு தேவை என்பதால் தனியார் பங்களிப்பு அவசியம். ஒரே நாடு, ஒரே மின்சாரம் விநியோக அமைப்புத்திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டு நாடு முழுவதும் சமஅளவில் மின் விநியோகம் செய்யப்படும்.

மின்கட்டண வரையறையில் மறுசீரமைப்பு தேவை.  வாடகைக்கு குடியிருப்போருக்கான புதிய சீர்திருத்தங்கள் கொண்டுவரப்படும். சிறு, குறு தொழில் நிறுவனங்களுக்கு ரூ.1 கோடி வரை கடன் வழங்கப்படும் என அவர் பேசினார்.

தலைப்புச்செய்திகள்