Monday, 3rd June 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

கொலை வழக்கு - சரவணபவன் ராஜகோபாலுக்கு 7-ந் தேதி முதல் ஆயுள் தண்டனை

ஜுலை 04, 2019 08:07

சென்னை:சரவணபவன் ஓட்டல் அதிபர் ராஜகோபால், தனது ஓட்டலில் பணிபுரிந்த ஊழியர் மகளான ஜீவஜோதியை 3-வது மனைவியாக திருமணம் செய்ய திட்டமிட்டார்.இதற்காக அவரது கணவர் பிரின்ஸ் சாந்தகுமாரை கூலிப்படையை வைத்து கொலை செய்த வழக்கில் ராஜகோபால் கைது செய்யப்பட்டார்.இந்த வழக்கில் விசாரணை கடந்த 19 ஆண்டுகளுக்கு முன்பு பெரும் பரபரப்பாக பேசப்பட்டது.

பூந்தமல்லி சிறப்பு கோர்ட்டில் இந்த வழக்கு விசாரணை முதலில் நடைபெற்றது. இதில் கடந்த 2004-ம் ஆண்டு தீர்ப்பு கூறப்பட்டது. வழக்கில் முக்கிய குற்றவாளியான ராஜகோபாலுக்கு 10 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது. கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட மற்ற 8 பேருக்கும் 9 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது.

இதனை எதிர்த்து ராஜகோபால் உள்பட 9 பேரும் சென்னை ஐகோர்ட்டில் அப்பீல் செய்தனர்.இந்த வழக்கு விசாரணை 5 ஆண்டுகளாக நடைபெற்றது. கடந்த 2009-ம் ஆண்டு நீதிபதிகள் பி.கே.மிஸ்ரா, பானுமதி ஆகியோர் அதிரடியாக தீர்ப்பு வழங்கினர்.கொலை வழக்கில் கீழமை நீதிமன்றம் (பூந்தமல்லி சிறப்பு கோர்ட்டு) தவறு இழைத்து விட்டது. குற்றவாளிகள், தெளிவான நோக்கத்துடன் மன்னிக்க முடியாத பயங்கர குற்றத்தை இழைத்துள்ளனர் என்று கூறினர்.

இதனை தொடர்ந்து சரவணபவன் ராஜகோபால் மற்றும் குற்றம் சாட்டப்பட்ட பட்டுராஜன், ஜனார்த்தனன், டேனியல், தமிழ், கார்மேகம் ஆகிய 6 பேருக்கும் ஐகோர்ட்டு ஆயுள் தண்டனை விதித்தது.இதனையும் எதிர்த்து ராஜகோபால் உள்ளிட்ட 6 பேரும் சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்தனர். இது தொடர்பாக விசாரணை 10 ஆண்டுகளாக நடந்தது.

கடந்த மார்ச் மாதம் ஐகோர்ட்டு அளித்த ஆயுள் தண்டனையை 6 பேருக்கும் சுப்ரீம் கோர்ட்டு உறுதி செய்தது.ஜூலை 7-ந் தேதிக்குள் ராஜகோபால் உள்பட 6 பேரும் பூந்தமல்லி சிறப்பு கோர்ட்டில் சரண் அடைந்து சிறைக்கு செல்ல வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டு கூறி இருந்தது.இதன்படி ராஜகோபாலன் ஆயுள் தண்டனை வருகிற 7-ந் தேதியில் இருந்து தொடங்குகிறது. ராஜகோபாலுக்கு இப்போது 71 வயது ஆகிறது. கடந்த 2000-ம் ஆண்டில் இருந்து கோர்ட்டுகளில் முடங்கி கிடந்த ஜீவஜோதி கணவர் கொலை வழக்கு இப்போதுதான் இறுதிக் கட்டத்தை எட்டி உள்ளது.

தலைப்புச்செய்திகள்