Monday, 20th May 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

அதிமுகவில் யாருக்கு ராஜ்ய சபை சீட் கிடைக்கும்?

ஜுன் 27, 2019 09:50

- சிறப்பு செய்தி

நாடாளுமன்ற தேர்தல் முடிந்த பிறகு தமிழ்நாட்டில் உள்ளாட்சித் தேர்தல் நடக்குமா என்று பொதுமக்கள் காத்திருக்கிறார்கள். ஆனால், அதிமுகவிலோ முக்கிய நிர்வாகிகள் பலர் 6 வருஷம் பதவியில் இருக்கக் கூடிய ராஜ்ய சபை சீட்டுக்கு குறி வைத்திருக்கிறார்கள். ராஜ்யசபை எனப்படும் மாநிலங்களவையில் அதிமுக உறுப்பினர்களின் எண்ணிக்கை 10. இதில் மைத்ரேயன் உள்ளிட்ட 4 உறுப்பினர்களின் பதவிக்காலம் நிறைவடைகிறது. 

திமுகவில் கனிமொழி மற்றும்  இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய செயலாளர் டி.ராஜா ஆகியோரின் மாநிலங்களவை உறுப்பினர் பதவிக்காலமும் முடிவடைகிறது. ஜூலை மாதம் மாறிலங்களவை உறுப்பினர்களை தேர்ந் தெடுக்க தேர்தல் நடத்துவதற்கு வாய்ப்புகள் உள்ளன.

இதனால் தமிழ்நாட்டில் இருந்து 6 மாநிலங்களவை உறுப்பினர்களை தேர்வு செய்ய முடியும். ஒரு உறுப்பினரை தேர்வு செய்ய தற்போதைய நிலவரப்படி 39 MLA க்கள் ஆதரவு தேவை. அதன்படி சட்டசபையில் உள்ள உறுப்பினர்கள் எண்ணிக்கையின் படி அதிமுக 3 பேரையும், திமுக 3 பேரையும் ராஜ்யசபா உறுப்பினர்களாக தேர்வு செய்ய முடியும். இதன்படி அதிமுகவில் இருந்து 3 பேர் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

 மக்களவைத் தேர்தலில் பாமகவுடன் கூட்டணி உடன்பாடு கையெழுத்தான போது, பாமகவுக்கு 7 மக்களவை தொகுதிகளும், ஒரு மாநிலங்களவை உறுப்பினர் பதவியும் வழங்குவதாக அறிவிக்கப்பட்டது. ஆகையால் அதிமுகவின் 3 இடங்களில் ஒன்று பாமகவுக்கு வழங்கப்பட உள்ளது. இதுபற்றி முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியும், துணை முதலமைச்சர் ஒ.பன்னீர்செல்வமும் மீண்டும் உறுதி அளித்ததால் தான் பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் சென்னையில் கடந்த 3.6.19 அன்று அதிமுகவின் இப்தார் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். 

அடுத்த இரண்டு இடங்களுக்கு அதிமுக முன்னணி நிர்வாகிகளிடையே கடும் போட்டி நிலவுகிறது. முன்னாள் அமைச்சர் கே.பி.முனுசாமி, நத்தம் விசுவநாதன், கோகுல இந்திரா ,மற்றும் மனோஜ் பாண்டியன், உள்ளிட்டோர் கேட்டு வருகிறார்கள். இதில் முன்னாள் எம்.பி. அன்வர் ராஜாவும் சீட் கேட்கிறார் .கடந்த மக்களவைத் தேர்தலில் அதிமுக மட்டுமல்ல அதிமுக கூட்டணியில் கூட இஸ்லாமியருக்கு சீட் வழங்கவில்லை என்று சுட்டிக்காட்டியுள்ள அன்வர் ராஜா , இஸ்லாமியரான ,தமக்கு இம்முறை சீட் வழங்க வேண்டும் என்கிறார். 

இதில் கோகுல இந்திராவுக்கு சீட் வழங்கும் படி, கூட்டணி கட்சித் தலைவர் ஒருவர் சிபாரிசு செய்திருககிறார். யார் என்று விசாரித்தால் அது தைலாபுரத் தோட்டத்தின் மருத்துவர். அதிமுகவில் யாதவர் சமூகத்துக்கு முக்கியத்துவம் இல்லாத நிலையை போக்க கோகுல இந்திராவுக்கு சீட் வழங்கலாம் என்றும் மருத்துவர் பரிந்துரைத்திருக்கிறார். 

உள் கட்சி சண்டையே இன்னும் முடியலை, இதுல இப்படி ஒரு சிபாரிசா என்று அதிமுகவினர் செம கடுப்பில் இருக்கிறார்கள். இதையெல்லாம் விட ஹைலைட் என்னவென்றால், ஒரு ராஜ்ய சபை சீட் தர முடியுமா என்று பாஜக தரப்பில் அதிமுகவிடம் கேட்பது தான். யாருக்காக கேட்கிறார்கள் என்று விசாரித்தால் அது மத்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கருக்காக என்று தகவல். ஒரு வேளை இவருக்கு சீட் வழங்க அதிமுக மறுத்து விட்டால் ஜெய்சங்கர் குஜராத்தில் இருந்தோ அல்லது அசாமில் இருந்தோ தேர்ந்தெடுக்கப்பட வாய்ப்புகள் உள்ளன. 

வலுவான தலைமை இல்லாததால், ஆளாளுக்கு துண்டு போட்டு சீட் கேட்கிறார்கள் என்று அதிமுகவினர் புலம்புகிறார்கள். வருங்காலங்களில்  அடிமட்ட அதிமுக தொண்டனுக்கு இனி உயர் பதவி கிடைக்காது என்றே அவர்கள் கவலை அடைந்துள்ளனர். ஆனால்  நித்ய கண்டம் பூரண ஆயுசு என்று முதல்வரும், துணை முதல்வரும் வழக்கம் போல இருக்கிறார்கள்.

தலைப்புச்செய்திகள்