Tuesday, 21st May 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

ஆன்லைன் வியாபாரம் தற்கொலைக்கு சமமானது: தமிழ்நாடு மருந்து உற்பத்தி மற்றும் சந்தைபடுத்துவோர் சங்க கூட்டத்தில் தீர்மானம்

ஜுன் 17, 2019 09:37

கும்பகோணம்: ஆன்லைன் வியாபாரம் தற்கொலைக்கு சமமானது என  கும்பகோணத்தில்  நடந்த தமிழ்நாடு மருந்து உற்பத்தி மற்றும் சந்தைபடுத்துவோர் சங்க கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

திம்மக்குடியில் தமிழ்நாடு மருந்து உற்பத்தி மற்றும் சந்தைபடுத்துவோர் 12 வது மாநில மாநாடு நடைபெற்றது. இம்மாநாட்டிற்கு மாநாட்டு குழு தலைவர் ராமசாமி தலைமை வகித்தார், மாநில பெருந்தலைவர் சரவணன், மாநில தலைவர் கருணைகடல், மாநில செயலாளர் கோபி, மாநில பொருளாளர் பாலாஜி ஆகியோர் முன்னிலை வகித்தனர். 

மாநாட்டு குழு செயலாளர் ஆண்டனிஅப்பா வரவேற்றார். தமிழ்நாடு கட்டுப்பாட்டு துறை இயக்குனர் சிவபாலன் சிறப்புரையாற்றினார். இறுதியில் மாநாட்டு குழுபொருளாளர் கோபிநாத் நன்றி கூறினார்.

கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள், மருந்து பொருட்களுக்கு இந்தியா முழுவதும் ஒரே வரியை விதிக்க வேண்டும். மருந்துகளை சந்தைபடுத்துவோர்களுக்கு என்று தனி உரிமம் வழங்கவேண்டும். 

உற்பத்தி மற்றும் மருத்துவத்துறைக்கு என்று தனி அமைச்சகம் ஏற்படுத்த வேண்டும்.
சிறப்பு பொருளாதார மண்டலத்தில் சிறு மருந்து உற்பத்தி நிறுவனங்களுக்கு அனுமதியளிக்க வேண்டும். மருந்துகள் ஆன்லைன் வியாபாரத்தால் தவறாக நடக்க வாய்ப்புள்ளது. குறிப்பிட்ட மருந்து குறிப்பட்ட நபர்களுக்கு தேவையான அளவில் தேவைப்படும். 

ஆனால் ஆன்லைனில் மருந்துகளை வாங்கி, உபயோகித்தால், நோயாளிகளுக்கு அபாயகரமான செயல்களை ஏற்படுத்தும். எனவே மருந்துகளை ஆன்லைனில் விற்பனை செய்வது தற்கொலைக்கு சமமானதாகும். மருந்துகளை ஆன்லைன் விற்பனை செய்வதால், தன்னிலை மறந்த மருந்து உபயோகப்படுத்துவதற்கு வழிவகை செய்யவாய்ப்புள்ளது.

எனவே மருந்துகளை ஆன்லைனில் விற்பனை செய்வதை தடைசெய்ய வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. தொடர்ந்து மாநாட்டில் இறுதியில் தரமான மருந்துகள், உற்பத்தி மற்றும்  சந்தைபடுத்துதல் குறித்த சிறப்பு பயிற்சி நடைபெற்றது.

தலைப்புச்செய்திகள்