Monday, 20th May 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

5 ஆயிரம் ஏரிகள் தமிழகம் முழுவதும் மாயம்: நல்லகண்ணு

ஜுன் 13, 2019 06:09

நாகர்கோவில்: நாகர்கோவிலில் இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மூத்த தலைவர் நல்லக்கண்ணு இன்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- மேகதாதுவில் அணை கட்டியே தீருவோம் என கர்நாடக அரசு கூறுகிறது. இது காவிரி ஆணையத்திற்கு எதிரானது. பிரிட்டிஷ் ஆட்சி காலத்தில் இருந்தே மரபு வழியாக இரு மாநிலங்களும் ஒத்து கொண்டால் மட்டுமே அணை கட்ட வேண்டும் என உள்ளது.

ஆணையம் என்று வந்த பிறகு கர்நாடக அரசு தன்னிச்சையாக அணை கட்டுவோம் என கூறுவது தவறு. இதற்கு மத்திய அரசு ஒத்துக்கொண்டுள்ளது தமிழகத்திற்கு செய்யும் துரோகம் ஆகும். இதனை எதிர்த்து அனைத்து கட்சிகளும் போராட வேண்டும். டெல்டா பாசனத்திற்காக ஜூன் 12-ந்தேதி மேட்டூர் அணை திறக்கப்பட வேண்டும். ஆனால் அதை பற்றி தமிழக அரசு கவலைப்படவில்லை. கூடங்குளம் அணுஉலை கழிவை அங்கேயே புதைப்பது ஆபத்தானது. இதை கைவிட வேண்டும். இது தொடர்பாக மக்களுக்கு கருத்து சொல்ல கூட அரசு அனுமதி மறுத்து நெருக்கடி கொடுக்கிறது.

தமிழ்நாடு முழுவதும் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. சென்னையில் குடிநீர் தட்டுப்பட்டால் மக்கள் கடும் அவதிக்கு ஆளாகி உள்ளனர். மாதம் 3 ஆயிரம் ரூபாய் குடிநீருக்காக செலவு செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. தமிழகத்தில் 37,500 ஏரிகள் இருந்தன. இதில் தற்போது 5 ஆயிரம் ஏரிகள் காணாமல் போய் விட்டது. ஆறுகள், குளங்களை பாதுகாக்க அரசு நடவடிக்கை எடுக்கவில்லை. இதனால் நிலத்தடி நீர்மட்டம் குறைந்து வருகிறது. ஆற்றுப்படுகையில் மணல் கொள்ளையடிக்கப்படுகிறது. இயற்கைகளும் அழிக்கப்பட்டு வருகின்றன. தமிழகத்தில் தண்ணீர் வியாபாரமாகி விட்டது.

ஸ்டெர்லைட் பிரச்சினை தொடர்பாக குறும்படத்தை வெளியிட்ட முகிலன் காணாமல் போய் 100 நாட்களை கடந்து விட்டது. அவர் இருக்கிறார் என்று கூறுகிறார்கள். ஆனால் எங்கே? என்பதுதான் தெரியவில்லை. அவரை உயிருடன் கொண்டு வர காவல் துறை நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழக அரசின் நிர்வாகம் திறம்பட நடைபெறவில்லை. 8 வழிச்சாலை பிரச்சினை, ஸ்டெர்லைட் பிரச்சினைகளில் மக்களுக்கு எதிராகவே செயல்படுகிறது. ஆட்சியை காப்பாற்ற நினைக்கிறார்களே தவிர மக்களை பற்றி அவர்கள் கவலைப்பட வில்லை என அவர் கூறினார்.

தலைப்புச்செய்திகள்