Tuesday, 21st May 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

மேல்சபை எம்.பி. பதவியை பிடிக்க அ.தி.மு.க.வில் போட்டி

ஜுன் 08, 2019 06:28

சென்னை: டெல்லி மேல்-சபை உறுப்பினர்களில் தமிழகத்தைச் சேர்ந்த 6 பேர் பதவி காலம் ஜூலை 24-ந்தேதி முடிகிறது. அ.தி.மு.க.வில் மைத்ரேயன், கே.ஆர்.அர்ஜுன், டி.ரத்தினவேல், ஆர்.லட்சுமணன், தி.மு.க.வில் கனிமொழி, இந்திய கம்யூனிஸ்டு கட்சியில் டி.ராஜா ஆகியோரது பதவி காலம் முடிகிறது.

கனிமொழி பாராளுமன்ற எம்.பி.யாகி விட்டதால் அவரது மேல்-சபை எம்.பி. பதவி தாமாகவே முடிவுக்கு வந்து விட்டது. இதனால் தமிழ்நாட்டில் இருந்து புதிய 6 மேல்- சபை எம்.பி.க்களை தேர்வு செய்வதற்கான தேர்தல் அடுத்த மாதம் (ஜூலை) நடைபெறுகிறது. இந்த தேர்தலுக்கான அட்டவணையை தலைமை தேர்தல் ஆணையம் விரைவில் வெளியிட திட்டமிட்டுள்ளது.

தமிழ்நாட்டில் இருந்து 6 மேல்-சபை எம்.பி.க்களையும் எம்.எல்.ஏ.க்கள் ஓட்டு போட்டு தேர்ந்தெடுப்பார்கள். ஒரு எம்.பி. வெற்றி பெறுவதற்கு 39 எம்.எல்.ஏ.க்களின் வாக்குகள் தேவை. தமிழக சட்டசபையில் மொத்தம் 234 எம்.எல்.ஏ.க்கள் உள்ளனர். கட்சிகளுக்கு உள்ள எம்.எல்.ஏ.க்கள் அடிப்படையில் பார்த்தால் தி.மு.க. - அ.தி.மு.க. இரு கட்சி சார்பில் மட்டுமே மேல்-சபை எம்.பி.க்களை தேர்வு செய்ய முடியும்.

சமீபத்தில் நடந்த 22 சட்ட மன்ற தொகுதி இடைத்தேர்தலில் அ.தி.மு.க. 9 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றது. இதனால் அந்த கட்சி மேல்-சபையில் ஒரு இடத்தை இழக்கிறது. தி.மு.க. 13 இடங்களை கைப்பற்றியதால் கூடுதலாக ஒரு மேல்-சபை எம்.பி. பதவியை பெறுகிறது.

இதன் மூலம் மேல்- சபையில் அ.தி.மு.க., தி.மு.க.வுக்கு தலா 3 இடங்கள் கிடைக்க உள்ளது. பாராளுமன்ற தேர்தலின் போது பா.ம.க.வுக்கு ஒரு மேல்-சபை தொகுதி வழங்குவதாக அ.தி.மு.க. சார்பில் உறுதி அளிக்கப்பட்டது. இதன்படி பா.ம.க. இளைஞர் அணி தலைவர் அன்புமணி மேல்-சபை எம்.பி.யாக வாய்ப்பு உள்ளது.

ஆனால் தேர்தலில் பா.ம.க. படுதோல்வியை சந்தித்துள்ளதால் எம்.பி. பதவியை ஒப்பந்தப்படி கேட்டு வாங்குவார்களா? அல்லது உள்ளாட்சி தேர்தலை கருத்தில் கொண்டு வேண்டாம் என்று கூறுவார்களா? என்பது இனி மேல்தான் தெரிய வரும். இந்த நிலையில் அ.தி.மு.க.வில் மேல்-சபை எம்.பி. பதவியை பெற மூத்த தலைவர்கள் கட்சி மேலிடத்தில் கடிதம் கொடுத்து வருகிறார்கள்.

இந்த பட்டியலில் கட்சியின் துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி.முனுசாமி, அமைப்புச் செயலாளர் சி.பொன்னையன், முன்னாள் பாராளுமன்ற துணை சபாநாயகர் தம்பித்துரை, முன்னாள் அமைச்சர்கள் நத்தம் விசுவநாதன், கோகுல இந்திரா மற்றும் அன்வர் ராஜா ஆகிய 7 பேர் மேல்-சபை எம்.பி. பதவி கேட்டு உள்ளனர்.

இவர்களில் யாருக்கு எம்.பி. பதவியை வழங்குவது என்பது தொடர்பாக கட்சியின் ஒருங்கிணைப்பாளர் துணை முதல்- அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி இருவரும் ஆலோசனை நடத்தினார்கள். ஆனால் இன்னும் ஒருமித்த கருத்து எட்டப்படாததால் இறுதி முடிவு எடுக்காமல் உள்ளனர்.

கட்சியின் மூத்த நிர்வாகி என்ற அடிப்படையில் கே.பி. முனுசாமிக்கு எம்.பி. பதவி வழங்க எடப்பாடி பழனிசாமியும், ஓ.பன்னீர்செல்வமும் சம்மதம் தெரிவித்து விட்டதாக தெரிகிறது. இன்னொரு இடத்துக்கு பொன்னையன் அல்லது தம்பித்துரை இருவரில் யாரை தேர்ந்தெடுப்பது என்பதில் தான் முடிவெடுக்க முடியாமல் உள்ளனர்.

ஓ.பன்னீர்செல்வம், பொன்னையனுக்கு எம்.பி. பதவியை வாங்கி கொடுக்க ஆர்வம் காட்டுவதாக தெரிகிறது. ஆனால் எடப்பாடி பழனிசாமி அன்வர்ராஜா அல்லது கோகுலஇந்திரா இருவரில் ஒருவரை எம்.பி. யாக்க விரும்புவதாக தெரிகிறது.

இது தொடர்பாக கட்சியின் மற்றொரு துணை ஒருங்கிணைப்பாளரான வைத்திலிங்கத்துடன் எடப்பாடி பழனிசாமி கருத்து கேட்டுள்ளார். வைத்திலிங்கம் யார் பெயரை தேர்ந்தெடுக்கிறாரோ அவர் தான் எம்.பி.யாக வர முடியும் என்று கட்சி நிர்வாகிகள் தெரிவித்து வருகின்றனர்.

அடுத்த வாரம் டெல்லி மேல்- சபை எம்.பி. பதவிக்கான தேர்தல் அறிவிப்பை தலைமை தேர்தல் ஆணையம் வெளியிட உள்ளது. அதன் பிறகுதான் அ.தி.மு.க.வில் கடும் பலப்பரீட்சை மோதல் ஏற்படும். இதை எடப்பாடி பழனிசாமியும், ஓ.பன்னீர்செல்வமும் எப்படி கையாள போகிறார்கள் என்பதுதான் கேள்விக்குறியாக உள்ளது.

தலைப்புச்செய்திகள்