Monday, 13th May 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

சட்டமன்றத்தில் நீட் தேர்வு விலக்கு தீர்மானத்தை நிறைவேற்ற வேண்டும்: செங்கம் கு.ராஜாராம்

ஜுன் 07, 2019 11:03

திருவண்ணாமலை: நீட் தேர்வால் தமிழகத்தில் மாணவர்கள் உயிர் இழப்பு அதிகரித்து வருகிறது அதிர்ச்சியும் வேதனையும் தருகிறது. இதை தடுக்க தமிழக அரசு உடனடியாக சட்டமன்றத்தில் நீட் தேர்வு விலக்கு தீர்மானத்தை நிறைவேற்ற வேண்டும் என கோகுல மக்கள் கட்சி மாநில இளைஞரணி செயலாளர் செங்கம் கு.ராஜாராம் தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளார். இதுகுறித்து மேலும் அவர் கூறும்போது,


தமிழகத்தில் நீட் தேர்வில் தோல்வி அடைந்ததால் திருப்பூர் சேர்ந்த மாணவி ரித்துஸ்ரீ, பட்டுக்கோட்டை மாணவி வைஷியா இருவரும் தற்கொலை செய்து கொண்டனர். இந்த செய்தி துயரத்தை ஏற்படுத்தி உள்ளது. ஏற்கனவே அனிதா மறைந்த சோகமே மனதை வாட்டி வதைக்கும்போது, தற்போது மீண்டும் இரண்டு சகோதரிகளும் இறந்து துயரம் தாங்க முடியவில்லை.

பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளை பெற்று வளர்த்து நன்றாக படிக்க வைதக்கிறார்கள். ஆரம்பத்தில் இருந்தே படிக்கும்போது டாக்டராக வேண்டும் என்கிற எண்ணத்தில் படித்து, திடீரென நீட் தேர்வால் அந்த எண்ணம் நிறைவேறாமல் போய் விடுகிறது. அதுவே அவர்களை மீளாத்துயரத்தில் ஆழ்த்துகிறது. 

கண் முன்னே நடக்கும் இந்த அநீதியை தடுக்க முடியாத நிலையில் இருக்கிறோம் என்று நினைக்கும் ஒவ்வொருவருக்கும் வரும் கோபம் நெஞ்சில் வன்மத்தை தூண்டுமளவிற்கு உள்ளது. எனவே தமிழக அரசு உடனடியாக முறையாக சட்டமன்றத்தில் நீட் தேர்வு விலக்கு மசோதாவை நிறைவேற்ற முதல்வர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மத்திய அரசு உடனடியாக தமிழக மாணவர்களின் நலன் கருதி அந்த மசோதாக்கு ஒப்புதல் அளிக்க வேண்டும் என கோகுல மக்கள் கட்சி சார்பில் கேட்டுக் கொள்கிறோம். உடனடியாக நடவடிக்கை எடுக்க மத்திய, மாநில அரசு தவறும் பட்சத்தில் தமிழக மக்களின் கோபத்திற்கு ஆளாக நேரிடும்.

அது மட்டுமல்ல நாடாளுமன்ற தேர்தலின் தோல்வியை விட, சட்டமன்ற தேர்தலில் மிக பெரிய தோல்வியை சந்திக்க நேரிடும். மக்கள் நலனுக்காக, பாதுகாப்புகாக தான் எந்த திட்டமும். அது மக்களை பாதிக்கும் பட்சத்தில் அப்படி ஒரு திட்டம் தமிழகத்திற்கு தேவையில்லை என்பதே கோகுல மக்கள் கட்சியின் கோரிக்கையாக உள்ளது என செங்கம் கு.ராஜாராம் கூறினார்.

தலைப்புச்செய்திகள்