Monday, 20th May 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

மும்மொழி கொள்கைக்கு எடப்பாடி ஆதரவு: மற்ற மாநிலங்களில் தமிழை பாடமாக்க கோரிக்கை

ஜுன் 05, 2019 03:45

சென்னை: கல்வியில் மும்மொழி திட்டத்தை அமல்படுத்த மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருவதற்கு 20 மாநிலங்களில் எதிர்ப்பு எழுந்துள்ள நிலையில், மும்மொழி திட்டத்துக்கு எடப்பாடி பழனிச்சாமி திடீரென்று ஆதரவு தெரிவித்துள்ளார். மற்ற மாநிலங்களில் தமிழை ஒரு விருப்ப பாடமாக கொண்டு வர வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடிக்கு தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கோரிக்கை விடுத்திருப்பதன் மூலம் தமிழகத்தில் இந்தி திணிப்புக்கு மறைமுகமாக ஆதரவு தெரிவித்துள்ளது தெரியவந்துள்ளது. 

நாடு முழுவதும் 6ம் வகுப்பு முதல் இந்தியை கட்டாய பாடமாக படிக்க வேண்டும் என்று கஸ்தூரிரங்கன் குழு சமீபத்தில் மத்திய அரசுக்கு ஒரு பரிந்துரையை கொடுத்தது. இதன் மூலம் இந்தியை அனைத்து மாநிலங்களிலும் மாணவர்கள் 3வது மொழியாக கட்டாயம் படிக்க வேண்டிய சூழல் உருவாகியது. மறைமுகமாக இந்தி பேசாத தென் மாநிலங்களில் இந்தி மொழியை திணிக்க மத்திய பாஜக அரசு முடிவு செய்துள்ளதாக குற்றச்சாட்டுகள் எழுந்தன.

இந்த மும்மொழி கொள்கை முடிவுக்கு தமிழகம், ஆந்திரா, கேரளா, கர்நாடகா, மகாராஷ்டிரா, மேற்கு வங்காளம் உள்ளிட்ட பல மாநிலங்களில் உள்ள அரசியல் கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன. தமிழகத்தில் திமுக தலைவரும் சட்டப்பேரவை எதிர்கட்சி தலைவருமான மு.க.ஸ்டாலின் கடும் எதிர்ப்பு தெரிவித்தார். இந்தி திணிப்பை எதிர்த்து மீண்டும் மிகப்பெரிய போராட்டம் நடத்தப்படும் என்றும் அறிவித்தார். இதேபோல், மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, மார்க்சிஸ்ட் மாநில செயலாளர் பாலகிருஷ்ணன், இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் முத்தரசன், பாமக நிறுவனர் ராமதாஸ், விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் உள்ளிட்ட பல்வேறு கட்சி தலைவர்களும் இந்த மும்மொழி கொள்கைக்கு எதிர்ப்பு தெரிவித்தனர். 

ஆனால், இந்தி திணிப்புக்கு எதிராகவோ, மும்மொழிக் கொள்கை தொடர்பாகவோ தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி எந்த கருத்தையும் சொல்லவில்லை. ஆதரவா அல்லது எதிர்ப்பா என்ற எந்த நிலைப்பாட்டையும் முதல்வர் தெரிவிக்கவில்லை. ஆனால் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், தமிழக கல்வி அமைச்சர் செங்கோட்டையன் ஆகியோர் இரு மொழி கொள்கையில் எந்த மாற்றமும் இல்லை என்றனர்.

இந்நிலையில், பிரதமர் நரேந்திர மோடிக்கு முதல்வர் எடப்பாடி இன்று காலையில் டுவிட்டர் மூலம் ஒரு கோரிக்கை அனுப்பியுள்ளார். அதில் ‘‘மற்ற மாநிலங்களில் தமிழ் மொழியை விருப்பப் பாடமாக கொண்டு வர வேண்டும். உலகத்தின் மிகப் பழமையான தமிழ்மொழிக்கு தரப்படும் பெருமையாக கருதப்படும்’’ என்று கோரிக்கை விடுத்துள்ளார். 

தலைப்புச்செய்திகள்