Monday, 20th May 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

உளறு வாய்களை ஓரங்கட்டிய மோடி

மே 31, 2019 12:25


புதுடில்லி : முந்தைய அமைச்சரவையில் முக்கிய துறைகளை கவனித்து வந்த பல அமைச்சர்களை இந்த முறை ஓரங்கட்டி உள்ளார் பிரதமர் மோடி. இதற்கு காரணம், தேர்தல் சமயத்தில் அவர்கள் பேசிய சர்ச்சை பேச்சு தான்.

மேனகா முதல் அனந்த்குமார் ஹெக்டே வரை பலரும் மத்திய அமைச்சரவையில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர். முந்தைய அமைச்சரவையில் பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு துறையை கவனித்து வந்த மேனகாவிற்கு இந்த முறை எந்த துறையும் ஒதுக்கப்படவில்லை. தற்காலிக சபாநாயகராக மட்டும் இருப்பார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
உ.பி.,யின் சுல்தான்புர் தொகுதியில் போட்டியிட்ட மேனகா, தேர்தல் பிரசாரத்தின் போது, தனக்கு ஓட்டு போடாவிட்டால் வெற்றி பெற்ற பிறகு இஸ்லாமியர்களுக்கு என எதுவும் செய்ய மாட்டேன் என பேசி இருந்தார். சர்ச்சைக்குரிய வகையில், பிரிவினையை ற்படுத்தும் விதமாக பேசிய மேனகாவிற்கு தேர்தல் கமிஷனும் தற்காலிக தடை விதித்திருந்தது. மேனகாவின் இந்த பேச்சை எதிர்க்கட்சிகளும் கடுமையாக விமர்சித்தன.

மேனகாவை போல் மோடியின் முந்தைய அமைச்சரவையில் திறன் மேம்பாட்டு துறை அமைச்சராக இருந்த அனந்த்குமார் ஹெக்டேவிற்கு இந்த முறை அமைச்சர் பதவி வழங்கப்படவில்லை. மகாத்மா காந்தியை கொன்ற கோட்சே தேசபக்தர் என்ற பா.ஜ., எம்.பி., பிரக்யா சிங் தாகூரின் பேச்சை சரி என ஆமோதித்து பேசியதுடன், கோட்சேவின் செயலை சரி என குறிப்பிட்டு டுவிட்டரில் கருத்து பதிவிட்டிருந்தார். 

இந்த விவகாரம் சர்ச்சை ஆனதை அடுத்து தனது டுவீட்டை அவர் நீக்கினார். இவர் காங்., தலைவர் ராகுல் குறித்தும் சர்ச்சை கருத்தை சமீபத்தில் தெரிவித்திருந்தார். இது போல் சர்ச்சைக்குரிய வகையில் பேசிய பலருக்கும் அமைச்சர் பதவி வழங்காமல் மோடி ஓரங்கட்டி உள்ளார்.
 

தலைப்புச்செய்திகள்