Monday, 20th May 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

ரூ. 2.5 லட்சம் லஞ்சம் : 2 அதிகாரிகள் கைது

மே 30, 2019 08:13

கோவை : வீட்டுமனை பிரிப்பதற்கான அனுமதி வழங்க, இரண்டரை லட்சம் ரூபாய் லஞ்சம் பெற்றதாக, கோவை மாநகராட்சி உதவி நகரமைப்பு அலுவலர் உள்பட 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கோவை ஆர்.எஸ்.புரம் பகுதியை சேர்ந்த ரியல் எஸ்டேட் அதிபர் சோமசுந்தரம், புதிதாக வாங்கிய நிலத்தை வீட்டுமனைகளாக பிரிப்பதற்கு அனுமதி வழங்க கோரி மாநகராட்சி தெற்கு மண்டல அலுவலகத்தில் விண்ணப்பித்திருந்தார். இதனை பரிசீலனை செய்த தெற்கு மண்டல உதவி நகரமைப்பு அலுவலர் சரவணன், தனது அலுவலர் ஆனந்தகுமார் மூலம் 6 லட்சம் ரூபாய் லஞ்சம் கேட்டுள்ளார்.

ஆனால், 5 லட்சம் ரூபாய் தர ஒப்புக்கொண்ட சோமசுந்தரம், முதற்கட்டமாக இரண்டரை லட்சம் தருவதாக கூறியதோடு, லஞ்சம் ஒழிப்பு துறை போலீசாரிடம் புகார் அளித்துள்ளார். போலீசாரின் அறிவுறுத்தலின்படி செயல்பட்ட சோமசுந்தரம், ரசாயனம் தடவிய ரூபாய் நோட்டுகளை ஆனந்தகுமாரிடம் வழங்கியபோது, அங்கு மறைந்திருந்த லஞ்சஒழிப்புத்துறை அதிகாரிகள் ஆனந்தகுமார் மற்றும் சரவணன் ஆகிய 2 பேரையும் கைது செய்தனர்.

கோவையில் கடந்த வாரத்தில், வீட்டுவரி புத்தகம் வழங்க லஞ்சம் பெற்ற வழக்கில் வழக்கு மண்டல உதவி கமிஷனர் ஒருவர் கைதுசெய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

தலைப்புச்செய்திகள்