Monday, 20th May 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

கோலாலம்பூரில் இருந்து சென்னை திரும்ப உதவிய எடப்பாடி பழனிசாமிக்கு கராத்தே வீரர்கள் நேரில் நன்றி

மே 28, 2019 05:40

சென்னை: தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-
மலேசியா நாட்டின் செலாங்கூரில் மே 12 முதல் 19-ந்தேதி வரை நடைபெற்ற உலக கராத்தே சாம்பியன்ஷிப் போட்டியில் ஆவடியைச் சேர்ந்த மாணவர்கள் கலந்துகொண்டு பதக்கங்களை வென்றனர். 

கராத்தே போட்டியில் வெற்றி பெற்ற 16 மாணவர்கள், அவர்களது 2 பயிற்சியாளர்கள், அம்மாணவர்களின் பெற்றோர் உள்ளிட்ட 29 நபர்கள் தாயகம் திரும்ப முடியாமல், 22-5-2019 அன்று கோலாலம்பூர் விமான நிலையத்தில் தவிக்கும் செய்தியை அறிந்து, முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, அந்த 29 நபர்கள் சென்னை திரும்ப அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்குமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

அதன்படி, மலேசியாவில் உள்ள இந்திய தூதரகத்தின் உதவியுடன் தமிழ்நாடு அரசு அவர்களுக்கான இருப்பிட வசதி, உணவு, சென்னை திரும்ப விமான பயணச்சீட்டுகள் உள்ளிட்ட அனைத்து உதவிகளையும் துரிதமாக வழங்கிட நடவடிக்கை மேற்கொண்டது. தமிழ்நாடு அரசு மேற்கொண்ட துரித நடவடிக்கையின் காரணமாக 29 நபர்கள் பாதுகாப்பாக 23-5-2019 அன்று சென்னை திரும்பினர்.

பாதுகாப்பாக சென்னை திரும்ப, தமிழ்நாடு அரசு துரித நடவடிக்கை எடுத்தமைக்காக அங்கு கராத்தே போட்டியில் கலந்துகொண்ட மாணவர்கள், பயிற்சியாளர்கள், பெற்றோர் உள்ளிட்ட 29 நபர்கள் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியை 27-5-2019 அன்று (நேற்று) சென்னையில் உள்ள அவரது முகாம் அலுவலகத்தில் சந்தித்து தங்களது நெஞ்சார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொண்டார்கள்.

அ.தி.மு.க. அரசு கடந்த 2 ஆண்டுகளில் வெளிநாடுகளில் பணிபுரிந்த தமிழகத்தைச் சார்ந்த தொழிலாளர், மீனவர்கள் உள்ளிட்ட 221 நபர்களை மீட்டு பத்திரமாக தாயகம் அழைத்துவரப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிகழ்வின்போது, தமிழ் வளர்ச்சித் துறை அமைச்சர் கே.பாண்டியராஜன், தலைமைச்செயலாளர் கிரிஜா வைத்தியநாதன், பொதுத்துறை முதன்மைச் செயலாளர் ப.செந்தில்குமார் மற்றும் அகதிகள் மறுவாழ்வு மற்றும் தமிழகத்திற்கு வெளியே வாழும் தமிழர்கள் நல இயக்குனர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் ஆகியோர் உடனிருந்தனர். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

தலைப்புச்செய்திகள்