Monday, 20th May 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

ராஜினாமா முடிவில் உறுதியாக இருக்கிறார்: ராகுல் காந்தி

மே 28, 2019 05:27

புதுடெல்லி: நாடாளுமன்ற தேர்தலில் ஏற்பட்ட தோல்வி குறித்து விவாதிக்க கடந்த 25-ந் தேதி காங்கிரஸ் காரிய கமிட்டி கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் தோல்விக்கு பொறுப்பேற்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தனது தலைவர் பதவியை ராஜினாமா செய்வதாகவும், தனது குடும்பத்தை சேராத ஒருவரை தலைவராக நியமிக்க வேண்டும் என்றும் கூறினார்.

இதனை கட்சியின் நிர்வாகிகள் ஏற்க மறுத்தனர். கட்சியின் மூத்த நிர்வாகிகள் தங்கள் மகன்களுக்கு ‘சீட்’ கேட்டு தன்னை தொந்தரவு செய்ததாகவும் ராகுல் காந்தி கூறியதாக தகவல்கள் வெளியாகின. இந்நிலையில் இதுகுறித்து காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் ரந்தீப்சிங் சுர்ஜேவாலா நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

ஊடகங்கள் உள்பட ஒவ்வொருவரும் பூட்டிய அறைக்குள் நடைபெறும் காங்கிரஸ் காரிய கமிட்டி கூட்டத்தின் புனிதத்துக்கு உரிய மதிப்பு அளிக்க வேண்டும். காரிய கமிட்டி கூட்டத்தில் நடைபெற்றதாக சில ஊடகங்களில் வெளியான பல்வேறு கருத்துகள், யூகங்கள், அவதூறுகள், கிசுகிசுக்கள் மற்றும் வதந்திகள் அனைத்தும் தேவைப்படாத, உண்மையற்ற தகவல்கள்.

காரிய கமிட்டி, கட்சியின் தோல்விக்காக எந்த குறிப்பிட்ட தனிநபரின் நடத்தை அல்லது பங்கு பற்றி விவாதிப்பதற்கு பதிலாக, தோல்வி குறித்து அனைவரும் தங்கள் கருத்துகளை கூறுவதற்கும், சரிசெய்வதற்கான மற்றும் சவால்களை எதிர்கொண்டு முன்னேறி செல்வதற்கான நடவடிக்கைகளை எடுப்பதற்குமான ஒரு ஜனநாயக அமைப்பு.

காரிய கமிட்டி தீர்மானித்த ஆலோசனைகளின் முக்கிய சாராம்சம் ஊடகங்களுக்கு தெரியப்படுத்தப்பட்டது. கருத்துகள், யூகங்களை வெளியிடுவதை தவிர்த்து, காங்கிரஸ் கட்சி எடுக்க இருக்கும் சீரமைப்பு நடவடிக்கைகளுக்காக காத்திருக்க வேண்டும் என்று ஊடகங்கள் உள்பட அனைவரையும் கேட்டுக்கொள்கிறோம். இவ்வாறு அவர் கூறினார்.

ராகுல் காந்தி தனது பதவியை ராஜினாமா செய்ய முன்வந்ததாக கூறப்படுவது உள்பட காரிய கமிட்டி கூட்டத்தில் நடைபெற்றதாக கூறப்படும் அனைத்து தகவல்களையும் அவர் மறுத்தார்.

இந்நிலையில் கர்நாடகா மற்றும் ராஜஸ்தானில் உள்ள காங்கிரஸ் மாநில அரசுகளும் நெருக்கடியை சந்தித்து வருகின்றன. இந்த தகவலும் காங்கிரஸ் தலைவர்களை அதிர்ச்சி அடையச் செய்துள்ளது.

இதற்கிடையே சில மாநில காங்கிரஸ் தலைவர்கள் தங்கள் பதவியை ராஜினாமா செய்ய தொடங்கி உள்ளனர். பஞ்சாப் மாநில தலைவர் சுனில் ஜாகர், ஜார்கண்ட் அஜய்குமார், அசாம் ரிபுன் போரா, ராஜஸ்தான் அசோக் கெலாட், உத்தரபிரதேசம் ராஜ்பாப்பர், மராட்டியம் அசோக் சவாண் ஆகியோர் தலைவர் பதவியை ராஜினாமா செய்துள்ளனர்.

காரிய கமிட்டி கூட்டத்தில் காங்கிரஸ் தலைவர் பதவியை ராஜினாமா செய்வதாக கூறிய ராகுல் காந்தி தனது முடிவில் உறுதியாக இருப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. அவர் யாரையும் சந்திக்க மறுப்பதாகவும் கூறப்படுகிறது. தேர்தலில் வெற்றிபெற்ற புதிய எம்.பி.க்கள் அவரை சந்திக்க விரும்புவதாக கூறியும் ராகுல் காந்தி மறுத்துவிட்டார். தனது கூட்டங்கள், சந்திப்புகள் அனைத்தையும் அவர் ரத்து செய்துவிட்டார்.

கட்சியின் தூதுவர்களாக மூத்த தலைவர்கள் அகமது பட்டேல், கே.சி.வேணுகோபால் ஆகிய இருவர் மட்டும் நேற்று காலை ராகுல் காந்தியை சந்தித்து பேசினார்கள். அவர்கள் சமாதானத்தை ஏற்க மறுத்த ராகுல் காந்தி, தனது முடிவில் உறுதியாக இருப்பதாக கூறியுள்ளனர்.

சவாலான இந்த நேரத்தில் கட்சியை நடத்துவதற்கு தகுதியுள்ள, தனது குடும்பத்தை சேராத, அதேசமயம் போதிய அனுபவமும், தலைமைக்குரிய தகுதியும் கொண்ட ஒரு புதிய தலைவரை தேர்ந்தெடுக்கும்படியும் அவர்களிடம் ராகுல் காந்தி கூறினார். அதற்குரிய நேரத்தை வழங்கவும் தயாராக இருப்பதாக கூறினார்.

அதேசமயம் நேரு நினைவு நாளை முன்னிட்டு ராகுல் காந்தி நேற்று ‘டுவிட்டர்’ மூலம் அதனை நினைவு கூர்ந்தார்.

நேரு நினைவிடத்தில் நடைபெற்ற பிரார்த்தனையிலும் அவர் கலந்து கொண்டார். இதில் சோனியா காந்தி, முன்னாள் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி, முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங் ஆகியோரும் கலந்து கொண்டனர்.

ராகுல் காந்தியின் பதவி விலகும் முடிவு குறித்து மூத்த காங்கிரஸ் தலைவர் சல்மான் குர்ஷித் கூறியதாவது:-

நாம் பிரசாரம் செய்த அனைத்து குறைகளையும் தாண்டி நரேந்திர மோடி மக்களின் ஆதரவை பெற்றது எவ்வளவு உண்மையோ, அதேபோல நேரு-காந்தி குடும்பம் நம்மை ஒருங்கிணைத்து வைத்துள்ளது என்பதும் அவர்கள் தான் அதிகமான ஓட்டுகளை பெறுபவர்கள் என்பதும் உண்மையே. இந்த தேர்தலில் வெற்றிபெறும் அளவுக்கு ஓட்டுகளை பெறமுடியாமல் போயிருக்கலாம். ஆனால் கட்சியில் அவர்கள் தான் அதிக ஓட்டுகளை பெறுபவர்கள்.

நான் உள்பட காங்கிரஸ் தொண்டர்கள் அந்த குடும்பத்தை சார்ந்து தான் வளர்ந்தோம். தொண்டர்கள் கட்சி நன்றாக இருக்கும் சமயத்தில் மட்டும் அவர்களை சார்ந்து இருக்கும் அற்பத்தனமானவர்களோ, நன்றி கெட்டவர்களோ அல்ல. நெருக்கடியான நேரங்களிலும் அவர்களை நாங்கள் ஆதரிக்கிறோம். எங்கள் ஆதரவு அளவற்றது, அது தொடரும். நாங்கள் வெற்றிபெறலாம் அல்லது தோல்வி அடையலாம், ஆனால் ஆதரவு தொடரும். இவ்வாறு அவர் கூறினார்.

தலைப்புச்செய்திகள்