Monday, 3rd June 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

லாலு குடும்பத்துக்கும் வலுக்கும் எதிர்ப்பு

மே 27, 2019 11:44

பாட்னா : லோக்சபா தேர்தலில் ஏற்பட்ட தோல்வியை தொடர்ந்து, ராஷ்ட்ரிய ஜனதா தளத்திலும் லாலு குடும்பத்திற்கு எதிர்ப்பு கிளம்பியுள்ளது. அக்கட்சியின் முக்கிய நிர்வாகி மகேஷ்யாதவ், லாலு மகன் தேஜஸ்வி யாதவை பதவி விலகக் கோரியுள்ளார்.

சிறையில் லாலு :

பீகாரில் செயல்படும் முக்கிய எதிர்க்கட்சி ராஷ்ட்ரிய ஜனதா தளம். இக்கட்சியின் தலைவர் லாலு, மாட்டுத்தீவன ஊழல் வழக்கில், ராஞ்சி சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். எனவே, அவரது கட்சியை லாலுவின் மகன் தேஜஸ்வி யாதவ் தலைமை ஏற்று நடத்தி வருகிறார்.

கடும் தோல்வி :

இந்த நிலையில், நடந்து முடிந்த லோக்சபா தேர்தலில் பீகாரில் உள்ள 40 தொகுதிகளில் 39 ஐ, பா.ஜ., ஐக்கிய ஜனதா தளம் கூட்டணி கைப்பற்றியது. லாலுவின் கட்சி ஒன்றில் கூட வெற்றிபெறவில்லை. அதன் கூட்டணி கட்சியான காங்கிரஸ் மட்டும் ஒரு தொகுதியில் வென்றது.

மகேஷ் யாதவ் போர்க்கொடி :

இந்த நிலையில், லாலு கட்சியின் முக்கிய தலைவர்களில் ஒருவரான மகேஷ்யாதவ், 'பீகார் மக்கள் வாரிசு அரசியலை ஏற்கவில்லை. எனவே, தோல்விக்கு பொறுப்பேற்று தேஜஸ்வி யாதவ் பதவி விலகவேண்டும் என்று போர்க்கொடி துாக்கியுள்ளார். 'இதேபோன்று கட்சியில் உள்ள பல எம்.எல்.ஏ.,க்களும் அதிருப்தியில் உள்ளனர். ஆனால், என்னால் அவர்கள் பெயர்களை வெளியிட முடியாது,' என்றும் தெரிவித்துள்ளார்.

இதனால், லாலுவின் ராஷ்ட்ரிய ஜனதாதளம் கட்சி, தேர்தல் தோல்விக்குப் பின்னர் எழுந்துள்ள கலாட்டாவினால், கலகலத்துப் போயுள்ளது.

தலைப்புச்செய்திகள்