Friday, 10th May 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

பெண் பிள்ளைகள் பிறந்ததை கொண்டாடிய தந்தை ஒரு டன் தர்பூசணி தானம்! 

ஏப்ரல் 25, 2024 08:59

மதுரை, ஏப்.25: மதுரை மாவட்டம் தேனூர் பகுதியை சேர்ந்தவர்கள் சடையாண்டி மற்றும் ரேணுகா தேவி தம்பதி. சடையாண்டி கட்டிடங்களுக்கு ஷீலிங் தயாரிக்கும் வேலை பார்த்து வருகிறார்.  இந்நிலையில் இவர்களுக்கு முதலாவதாக ரித்திகா (எ) மீனாட்சி என்ற பெண் குழந்தை பிறந்த நிலையில், 5 வருடத்திற்கு பின்னர் 2வதாகவும் பெண் குழந்தை பிறக்கவேண்டும் என்ற ஆசையோடு இருந்த தம்பதியினருக்கு 2வதாகவும் பெண் குழந்தை பிறந்தது. அந்த குழந்தைக்கு தேஜாஸ்ரீ என பெயர் சூட்டியுள்ளனர். இதனால் ஈடில்லா மகிழ்ச்சி அடைந்தனர் அந்த தம்பதி.

இரண்டு பெண் குழந்தைகளை பெற்றெடுத்த மகிழ்வை வெளிப்படுத்த, தாங்கள் மக்களுக்கு ஏதாவது உதவி செய்ய வேண்டும் என எண்ணியுள்ளனர். மதுரை கள்ளழகர் சித்திரைத் திருவிழாவில் தேனூர் மண்டபத்திற்கு மண்டூக முனிவருக்கு சாப விமோசனம் அளிக்கும் நிகழ்வின் போது கள்ளழகரை தரிசனம் செய்ய வரும் பக்தர்களுக்கு தாகம் தீர்த்து பசிபோக்கும் வகையில் தனது சொந்த ஊரின் திருவிழாவாக நினைத்து தர்பூசணி வழங்க வேண்டும் என கடந்த 7 ஆண்டுகளுக்கு முன்பாக தர்பூசணி வழங்கி தொடங்கியுள்ளனர்.

இந்நிலையில் இந்த முறையும் தொடர்ந்து 7ஆவது ஆண்டாக கள்ளழகர் சித்திரை விழாவின் 6ம் நாள் நிகழ்வான தேனூர் மண்டபத்திற்கு மண்டூக முனிவருக்கு சாப விமோசனம் அளிக்கும் நிகழ்வின் போது, வருகை தந்த பக்தர்களுக்கு ஒரு டன் அளவிலான தர்பூசணிகளை வழங்கினர். கடும் வெயில் சுட்டெரித்த நிலையில் விழாவிற்கு வந்த ஏராளமான பெண்கள், முதியவர்கள் ,சிறுவர்கள், இளைஞர்கள் என கூட்டம் கூட்டமாக வந்து தர்பூசணி பழங்களை பெற்று ஆர்வமுடன் சாப்பிட்டு சென்றனர்.
ஆயிரக்கணக்கான பக்தர்களுக்கும் தர்பூசணியை சிரித்த முகத்தோடு சடையாண்டி தனது மனைவி, தாயார் மற்றும் அவரது பெண் குழந்தைகளோடு சேர்ந்து வழங்கினார்.

இதற்காக கடந்த மாதம் சம்பாதித்த பணம் முழுவதையும் மற்றும் தனது நண்பர்களிடம் பணம் வசூலித்து இதுபோன்று பக்தர்களுக்கான உதவியை செய்துவருகிறார். தனக்கு 2வதாக பெண் பிள்ளை பிறந்ததற்காக மகிழ்ச்சியை வெளிப்படுத்த 7ஆண்டுகளாக  பக்தர்களுக்கு டன் கணக்கில் தர்பூசணி வழங்கி மகிழ்ச்சியை வெளிப்படுத்தும் தந்தையின் செயல் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது. பல ஆண்டுகளுக்கு முன்பாக பெண் சிசுக்கொலைகள் அதிகரித்து வந்த பகுதியில் இது போன்ற பெண்மைய போற்றும் நிகழ்வு  அனைவரின் பாராட்டுதலையும் பெற்றுள்ளது.

மீனாட்சி ஆட்சி கொள்ளும் மதுரையில் எனக்கு இரண்டாவதாக பெண் குழந்தை பிறக்க வேண்டும் என நாங்கள் ஆசைப்பட்டு இரண்டாவதாக பெண் குழந்தை பிறந்தது மிக்க மகிழ்ச்சி என்பதால் ஏழு ஆண்டுகளாக இதுபோன்ற பக்தர்களுடைய தாகம் தீர்ப்பதற்காக தர்பூசணிகளை மகிழ்ச்சியோடு வழங்கி வருகிறோம்.

இந்த உலகில் பெண்கள் இல்லை என்றால் எதுவும் இல்லை,  பெண்களை போற்ற வேண்டும் பெண்கள் இந்த நாட்டின் கண்கள் எனவும்  எனக்கு எல்லாமும் என் பெண் குழந்தைகள் தான்,  என் மனைவியும் என் தாயாரும் பெண்கள் எனவே இந்த உலகம் பெண்கள் இன்றி எந்த அணுவும் அசையாது. இதனால் பெண்மையை போற்றும் விதமாக இரண்டு பெண் குழந்தைகளை பெற்ற மகிழ்ச்சியை வெளிப்படுத்தும் வகையில் இதுபோன்ற 7 ஆண்டுகளாக மகிழ்ச்சியுடன் வழங்கி வருகிறேன்” என தெரிவித்தார்.
 

தலைப்புச்செய்திகள்