Friday, 10th May 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

உறுப்புகள் தானம் செய்த தூய்மை பணியாளர் அரசு மரியாதையுடன் உடல் அடக்கம்

ஏப்ரல் 25, 2024 05:54

உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைக்கு தேவைப்படும் உறுப்புகள் கிடைக்காமல் இறப்பவர்கள் எண்ணிக்கை நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. நாடு முழுவதும் உடல்உறுப்புகளை தானமாக பெறுவதற்காக 5 லட்சத்திற்கும் மேற்பட்டோர் பதிவு செய்து காத்திருக்கின்றனர். நம் நாட்டில் உடல் உறுப்பு தானம் குறித்து கடந்த சில ஆண்டுகளாக ஓரளவுக்கு விழிப்புணர்வு அதிகரித்து வந்தாலும், உறுப்பு தானம் செய்வோர் எண்ணிக்கை குறைவாகவே உள்ளது. இந்தியாவில் ஒரு லட்சம் பேரில் வெறும் 8 பேர் மட்டுமே உறுப்பு தானம் செய்ய முன்வருகின்றனர். இதனால் போதிய அளவு உடல் உறுப்புகள் கிடைக்காமல் உயிரிழப்போர் எண்ணிக்கை அதிகரித்தது. ஆனால் கடந்த சில ஆண்டுகளாக தமிழ்நாட்டில் உடல் உறுப்பு தானம் செய்பவர்கள் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதனால் பல உயிர்கள் காப்பாற்றப்பட்டு வருகிறது. இந்தியாவிலேயே தமிழ்நாடு முன் மாநிலமாக உடல் உறுப்பு தானத்தில் விளங்கி வருகிறது. மேலும், குடும்ப உறுப்பினர்கள் மூளைச்சாவு நிலையை அடைந்த துயரச் சூழலிலும், அவர்களின் உடல் உறுப்புகளைத் தானமாக அளித்திட முன்வரும் குடும்பங்களின் தன்னலமற்ற தியாகங்களால்தான் இந்தச் சாதனை சாத்தியமாகியுள்ளது. தம் உறுப்புகளை ஈந்து, பல உயிர்களைக் காப்போரின் தியாகத்தினைப் போற்றிடும் வகையில், இறக்கும் முன் உறுப்பு தானம் வழங்குவோரின் இறுதிச்சடங்குகள் இனி அரசு மரியாதையுடன் மேற்கொள்ளப்படும் என தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
இந்நிலையில் பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டை வட்டம் விசுவகுடி கிராமம் வடக்கு காலனியைச் சேர்ந்த ஸ்ரீரங்கன் மகன் கிருஷ்ணன் (58). தூய்மைப் பணியாளராக பணியாற்றி வந்த அவருக்கு 4 மகன்கள் மற்றும் 3 மகள்கள் உள்ளனர். இந்நிலையில், கிருஷ்ணன் கடந்த 19 ஆம் தேதி மாலை சுமார் 6 மணி அளவில் கீழே விழுந்து மயக்கமடைந்தார். இதனையடுத்து, உறவினர்கள் அவரை உடனடியாக மீட்டு பெரம்பலூர் அரசு தலைமை மருத்துவமனைக்கு 108 உதவியுடன் கொண்டு சென்றனர். பின்னர் அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக திருச்சி அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். திருச்சி அரசு மருத்துவர்கள் அவரை பரிசோதனை செய்ததில் அவர் மூளை சாவு அடைந்து விட்டார் என தெரிவித்தனர்.
அதனைத்தொடர்ந்து தனது கணவரின் உடல் உறுப்புகளை தானம் செய்ய அவரது மனைவி தனலட்சுமி (52) முன்வந்தார். உடல் உறுப்பு தானம் செய்த விசுவகுடியில் கிருஷ்ணன் உடலுக்கு அரசு மரியாதை செலுத்தப்பட்டு உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது. மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் சார் ஆட்சியர் சு.கோகுல் கலந்து கொண்டு கிருஷ்ணனின் உடலுக்கு அரசு மரியாதை செலுத்தினார்.

தலைப்புச்செய்திகள்