Friday, 10th May 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

பேருந்துகளில் தானியங்கி கதவுகள் பொருத்த வேண்டும் உயர் நீதிமன்றம் அறிவுறுத்தல்

ஏப்ரல் 25, 2024 05:53

மதுரை, ஏப்.25: தமிழகத்தில் பேருந்துப் படிக்கட்டுகளில் மாணவர்கள் தொங்கியபடி பயணம் செய்வதை தடுக்க, பள்ளி நேரங்களில் கூடுதல் பேருந்துகளை இயக்கக் கோரி 2013-ல் உயர் நீதிமன்ற கிளை தாமாக முன்வந்து எடுத்த வழக்கு, நீதிபதிகள் சுரேஷ்குமார், அருள்முருகன் அமர்வில் விசாரணைக்கு வந்தது.
அப்போது நீதிபதிகள், பள்ளி தொடங்கும் நேரத்தில் கூடுதல் பேருந்துகளை இயக்கினாலும், இளைஞர்களின் படிக்கட்டுப் பயணங்களும், விபத்தும் குறையவில்லை. இதை ஓட்டுநர்களும், நடத்துநர்களும் எப்படி சமாளிப்பார்கள்? பல இடங்களில், ஓட்டுநர்களும், நடத்துநர்களும் இளைஞர்களால் தாக்கப்படும் நிகழ்வுகள் நடக்கின்றன.
எனவே, இளைஞர்கள் மற்றும் மாணவர்களின் நலன் கருதியும், பேருந்துகளில் படிக்கட்டு பயணத்தைத் தவிர்க்கும் வகையிலும், அனைத்துப் பேருந்துகளிலும் தானியங்கி கதவுகளைப் பொருத்த வேண்டும்.
தமிழகத்தில் அரசு மற்றும் தனியார் பேருந்துகளில் எத்தனை பேருந்துகளில் தானியங்கி கதவுகள் பொருத்தப்பட்டுள்ளன? எத்தனை பேருந்துகளில் தானியங்கி கதவு பொருத்தப்படவில்லை? என்பது குறித்து தமிழக உள்துறைச்செயலர், போக்குவரத்து துறைச் செயலர் ஆகியோர் பதில் அளிக்க வேண்டும் என்று உத்தரவிட்டு, விசாரணையை தள்ளிவைத்தனர்.

தலைப்புச்செய்திகள்