Saturday, 11th May 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

மோடியின் ராஜஸ்தான் பேச்சு - தேர்தல் ஆணையம் மீது பினராயி விஜயன் கடும் விமர்சனம்

ஏப்ரல் 23, 2024 04:26

கேரளா: “கட்சி சார்பற்ற முறையில் தேர்தல் ஆணையம் செயல்படவில்லை. இது துரதிர்ஷ்டவசமானது” என்று முஸ்லிம்கள் தொடர்பான பிரதமர் மோடியின் கருத்துக்கு கேரள முதல்வர் பினராயி விஜயன் தனது அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளார்.

இது தொடர்பாக அவர் செவ்வாய்கிழமை பேசுகையில், “முஸ்லிம்கள் தொடர்பான பிரதமர் மோடியின் கருத்துக்கு தேர்தல் ஆணையம் கட்சி சார்பற்ற முறையில் செயல்படாதது துரதிர்ஷ்டவசமானது. தேர்தல் ஆணையம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. ஆனால், தேர்தல் ஆணையம் இதுவரை மவுனம் காத்து வருகிறது.
இது உச்ச நீதிமன்றத்தில் எழுப்பப்பட வேண்டிய பிரச்சினை. தேர்தல் ஆணையம் எந்த ஒரு கட்சிக்கும் சார்பற்றது என்று காட்டியிருக்க வேண்டும். பிரதமர் மோடியின் இத்தகைய பேச்சால், நாட்டில் பாஜகவுக்கு எதிரான கருத்து வலுப்பெற்று வருகிறது அதோடு வரும் காலத்தில் பாஜக மேலும் தனிமைப்படுத்தப்படும்” என்றார்.
பிரதமர் மோடி பேசியது என்ன?: - ராஜஸ்தான் மாநிலம் பன்ஸ்வாராவில் நடந்த பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டு பேசிய பிரதமர் மோடி, “காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால், மக்களிடம் உள்ள தங்கம் மற்றும் சொத்துகள் எல்லாவற்றையும் பறித்து ஊடுருவல்காரர்களுக்கு கொடுத்துவிடும். காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால், ஒவ்வொருவரின் சொத்துகள் கணக்கிடப்படும் என்று அக்கட்சியின் தேர்தல் அறிக்கையில் சொல்லப்பட்டுள்ளது. காங்கிரஸ் கட்சி சார்பில் பிரதமராக இருந்த மன்மோகன் சிங் என்ன சொன்னார்... “நாட்டின் சொத்துகளில் முஸ்லிம்களுக்கே முதல் உரிமை” என்றார். அப்படியானால் யாருடைய சொத்துகளை பறித்து யாரிடம் கொடுப்பீர்கள்?! சொத்துகள் ஊடுருவல்காரர்களுக்குப் பகிர்ந்தளிக்கப்படும் என்பதே அதன் பொருள்.

நீங்கள் கஷ்டப்பட்டு சம்பாதித்த பணம், ஊடுருவல்காரர்களுக்கே போக வேண்டுமா? இதை நீங்கள் அங்கீகரிக்கிறீர்களா? நம் பெண்கள் எவ்வளவு தங்கம் மற்றும் வெள்ளி வைத்திருக்கிறார்கள் என்பதை காங்கிரஸ் கணக்கிடும். தங்கம் ஒரு பெண்ணின் சுயமரியாதை. ஒரு பெண்ணின் தாலியின் மதிப்பு தங்கத்தின் விலையில் மட்டுமல்ல, அவர்களின் கனவுகளுடன் தொடர்புடையது. ஒரு பெண்ணின் தாலியை பறிப்பதற்கு எந்த அரசுக்கும் அதிகாரம் கிடையாது" என்று ஆவேசமாக கூறினார். இதற்கு எதிர்க்கட்சிகள் கடுமையாக எதிர்வினை ஆற்றி வருகின்றன.

தலைப்புச்செய்திகள்