Sunday, 12th May 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

பா.ஜ.க வேட்பாளரின் நாடகம் அம்பலம்!

ஏப்ரல் 23, 2024 04:21

நாட்டின் 18ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி வாக்குப்பதிவானது முதற்கட்டமாக கடந்த ஏப்.19 ஆம் தேதி தொடங்கி, வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக நடைபெறவுள்ளது. அதில் பதிவாகும் வாக்கு எண்ணிக்கையானது ஜூன் 4ஆம் தேதி நடைபெற்று அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட இருக்கின்றன. இதனிடையே, முதற்கட்டமாக தமிழ்நாடு உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு கடந்த ஏப்.19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது.
அதே வேளையில், மொத்தம் 20 மக்களவைத் தொகுதிகள் கொண்ட கேரளா மாநிலத்தில், இரண்டாம் கட்டமாக வருகிற ஏப்ரல் 26ஆம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறவிருக்கிறது. இங்கு நடைபெறும் தேர்தலை எதிர்கொள்ள கம்யூனிஸ்ட் கட்சி, காங்கிரஸ், பா.ஜ.க ஆகிய கட்சிகள் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றன. இதற்கான தேர்தல் பிரச்சாரம் இன்று (23-04-24) மாலையுடன் நிறைவடையவுள்ளது.

அந்த வகையில், கேரளா மாநிலம், கொல்லம் மக்களவைத் தொகுதியில் பா.ஜ.க சார்பில் பிரபல மலையாள நடிகர் கிருஷ்ணகுமார் போட்டியிடுகிறார். இந்த தேர்தலில் வெற்றி பெற்றே ஆக வேண்டும் என்ற ஒரே நோக்கத்தில் அந்த தொகுதி முழுவதும் கிருஷ்ணகுமார் தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டு வந்தார். அதன்படி, கொல்லம் மக்களவைத் தொகுதிக்குட்பட்ட குந்த்ரா பகுதியில் உள்ள சந்தையில் இரு தினங்களுக்கு முன்பு அங்குள்ள மக்களிடம் வாக்கு சேகரித்து கொண்டிருந்தார். அப்போது, அங்கு கிருஷ்ணகுமாரின் கண்ணில் கூர்மையான ஆயுதம் பட்டு பலத்த காயம் ஏற்பட்டது.
இதனையடுத்து, காயமடைந்த அவரை அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு கிருஷ்ணகுமாரின் கண்ணில் தையல் போட்டு சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. இதற்கிடையே, எதிர்க்கட்சியினர் தாக்கியதில் கண்ணில் காயம் ஏற்பட்டதாக பா.ஜ.க வேட்பாளர் கிருஷ்ணகுமார் புகார் கூறினார். இது தொடர்பாக கிருஷ்ணகுமார் தனது எக்ஸ் (ட்விட்டர்) பக்கத்தில் கூறியதாவது, “கேரளாவின் கொல்லம் குந்த்ராவில் எனது மக்களவைத் தொகுதியில் பிரச்சாரத்தின் போது எனக்கு எதிர்க்கட்சிகளின் தாக்குதலால் கண்ணில் காயம் ஏற்பட்டது. இந்த நேரத்தில் உங்கள் பிரார்த்தனைகள் மற்றும் ஆதரவு எனக்கு எப்போதும் இருக்கிறது. நன்றி” எனத் குறிப்பிட்டு கண்ணில் பிளாஸ்திரியுடன் எடுக்கப்பட்ட புகைப்படத்தை பதிவிட்டார்.

இது தொடர்பாக, குந்திரா போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். அதில், கிருஷ்ணகுமார் கலந்துகொண்ட தேர்தல் பிரச்சார கூட்டத்தில் கலந்து கொண்ட பா.ஜ.க தொண்டர் சனல் என்பவரை போலீசார் விசாரணை மேற்கொண்டனர். அப்போது அவர், தவறுதலாக பா.ஜ.க வேட்பாளர் கிருஷ்ணகுமாரின் கண்களை சாவியால் குத்திவிட்டதாக வாக்குமூலம் அளித்தார்.

தலைப்புச்செய்திகள்