Monday, 13th May 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

பூண்டு விலை மீண்டும் உயர்வு: கிலோ ரூ.380-க்கு விற்பனை

ஏப்ரல் 22, 2024 04:27

திருச்சி: பூண்டு வரத்து குறையத் தொடங்கியதால், அதன் விலை மீண்டும் உயரத் தொடங்கி உள்ளது.

அன்றாட சமையலில் பயன்படுத்தப்படும் முக்கியப் பொருளாக பூண்டு உள்ளது. மத்திய பிரதேசம், ராஜஸ்தான் மாநிலங்கள் பூண்டு உற்பத்தியில் முன்னணியில் உள்ளன. நாடு முழுவதும் பூண்டு தேவையை நிறைவு செய்வதில் இந்த 2 மாநிலங்கள் முக்கியத்துவம் வகிக்கின்றன. தேனி மாவட்டம் வடுகப்பட்டியில் பூண்டு சந்தை உள்ளது. நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து வியாபாரிகள் மூலம் கொள்முதல் செய்யப்படும் பூண்டுக்கு, இந்த சந்தையில் வைத்துதான் விலை நிர்ணயம் செய்யப்படும்.

அதன் பிறகு மாநிலம் முழுவதும் மொத்தம், சில்லறை விற்பனைக்கு வியாபாரிகள் மூலம் அனுப்பப்படும். இந்நிலையில், கடந்த பிப்ரவரி மாதம் வரத்து குறைந்ததால் கிலோ பூண்டு ரூ.550 வரை விற்பனை செய்யப்பட்டது. பின்னர், விலை குறையத் தொடங்கி கிலோ ரூ.200 வரை விற்பனை செய்யப்பட்டு வந்தது. இந்நிலையில், ‘சீடு’ பூண்டு எனக் கூறப்படும் பெரிய பல் பூண்டின் விலை தற்போது உயர்ந்துள்ளது.

இந்த பூண்டு கிலோ மொத்த விலையில் ரூ.330-க்கும், சில்லறை விலையில் ரூ.380-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. இதில், சிறிய ரகமாக இருந்தால் மொத்த விலையில் ரூ.150-க்கும், சில்லறை விலையில் ரூ.250-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. மேலும், தரை பூண்டு கிலோ ரூ.200-க்கு விற்கப்படுகிறது.

இது குறித்து பூண்டு வியாபாரி வெங்கடேஷ் கூறியது: கடந்த பிப்ரவரி மாதம் பூண்டு விலை உயர்ந்தபோது, வட மாநில வியாபாரிகள் தங்களிடம் இருப்பில் இருந்த பெரிய ரக பூண்டுகளை விற்பனை செய்துவிட்டனர். தற்போது பெரிய ரக பூண்டு இருப்பு குறைந்து, விலை உயர்ந்துள்ளது. புதிய ரக பூண்டு வந்தால் விலை குறைய வாய்ப்பு உள்ளது.

தேர்தல் வரை சில உணவுப் பொருட்களின் ஏற்றுமதிக்கு மத்திய அரசு தடை விதித்துள்ளது. தேர்தல் முடிந்த பிறகு தடையை நீக்க வாய்ப்புள்ளதாக வட மாநில வியாபாரிகள் தெரிவிக்கின்றனர். அப்போது, பூண்டு, வெங்காயம் போன்றவற்றின் விலை இன்னும் அதிகரிக்கும் என்றார்.

தலைப்புச்செய்திகள்