Friday, 10th May 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

மாற்றுத்திறனாளிகள் பங்கேற்ற சிறப்பு விழிப்புணர்வு பேரணி

மார்ச் 25, 2024 03:00


சென்னை,மார்ச்.25:நாடாளுமன்ற பொதுத்தேர்தலை முன்னிட்டு, 100% வாக்களிப்பதன் அவசியம் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுத்துள்ளது. இதற்காக, சென்னை மெரினா கடற்கரையில் மாற்றுத்திறனாளிகள் கலந்து கொண்ட சிறப்பு விழிப்புணர்வு பேரணி மற்றும் தேர்தல் விழிப்புணர்வு பிரசாரம் நடைபெற்றது.

அனைத்து வாக்காளர்களையும் உள்ளடக்கிய தேர்தல் 2024 என்ற வகையில் 300-க்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளிகள் பங்கேற்ற பேரணியை சென்னை மாவட்ட தேர்தல் அலுவலரும், பெருநகர சென்னை மாநகராட்சி ஆணையருமான ராதாகிருஷ்ணன் மற்றும் சென்னை மாவட்ட ஆட்சியர் ராஷ்மி சித்தார்த் ஜகடே ஆகியோர் தொடங்கி வைத்தனர்.பின்னர் செய்தியாளர்களை சந்தித்த சென்னை மாவட்ட தேர்தல் அலுவலர் ராதாகிருஷ்ணன்,  நாடாளுமன்றத் தேர்தலில் வாக்களிப்பது தொடர்பாக பல்வேறு விழிப்புணர்வு பிரசாரங்களை மேற்கொண்டு வருகிறோம்.

அதன் ஒரு பகுதியாக  மெரினா கடற்கரையில் மாற்றுத்திறனாளிகளுக்கான பேரணி நடைபெற்றது. இந்திய தேர்தல் ஆணையம் மாற்றுத்திறனாளிகள் வாக்களிக்க ஏதுவாக பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. குறிப்பாக 21 வகையான மாற்றுத்திறனாளிகளுக்கு அவர்களுக்கு உகந்த ஏற்பாடுகளை செய்து வருகிறோம் என தெரிவித்தார்.

சென்னையில் 3,719 வாக்குச்சாவடிகளில் மாற்றுத்திறனாளிகள் வந்து செல்வதற்கு ஏதுவாக பாதை இருக்க வேண்டும் என்பது தான் அவர்களுடைய பிரதான கோரிக்கையாக உள்ளது. வாக்கு சாவடிக்கு வர இயலாத மாற்றுத்திறனாளிகள் மற்றும் முதியவர்களுக்கு சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. அத்துடன், 85 வயதுக்கு மேல் இருக்கும் முதியவர்கள் வீட்டில் இருந்தவாறு வாக்கு செலுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என தெரிவித்தார்.இங்கு 63,751 முதியர்கள் உள்ளனர். 10,370 மாற்றுத்திறனாளிகள் கண்டறியப்பட்டுள்ளனர்.

அவர்களுக்கும் வீட்டிலேயே வாக்களிக்கும் முறை கொண்டு வரப்படும் என கூறினார். மேலும் வாக்கு சாவடிகளுக்கு வந்து வாக்களிக்கும் மாற்றுத்திறனாளிகளுக்கு உரிய அடிப்படை வசதிகளும் செய்து தரப்படும்.

சென்னையை பொறுத்தவரை ஓட்டுப்பதிவு  60%  ஆகத் தான் எப்போதும் இருக்கும். சராசரியாக மாநிலத்தில் 72% இருக்கும்,  இதை அதிகரிக்க உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பாக  மாவட்ட தேர்தல் அலுவலர், மாவட்ட ஆட்சியர், தேர்தல் நடத்தும் அனைத்து பொறுப்பாளர்களுடன் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. அதில் கூட மாற்றுத்திறனாளிகளை சமமாக நடத்த வேண்டும் என்கின்ற கோரிக்கைகள் முன் வைக்கப்பட்டன. அதன்படி தொடர்ந்து நாங்கள் பணியாற்றி வருகிறோம் என அவர் தெரிவித்தார்.
 

தலைப்புச்செய்திகள்