Friday, 10th May 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

7 தொகுதிகளுக்கான முதற்கட்ட வேட்பாளர்களை அறிவித்துள்ளது காங்கிரஸ்

மார்ச் 25, 2024 02:53

காங்கிரஸ் சென்னை,மார்ச்.25: திமுக கூட்டணியில் தமிழ்நாட்டில் 9 தொகுதிகளை காங்கிரஸ் கட்சி பெற்றது. பிற கட்சிகள் வேட்பாளர்களை அறிவித்துவிட்ட நிலையில், காங்கிரஸ் சார்பில் போட்டியிடுவோரை இறுதி செய்வதில் இறுபறி நீடித்தது.திமுக கூட்டணி கட்சிகள் வேட்பாளர்களுடன் தேர்தல் பரப்புரையை தொடங்கிவிட்ட நிலையில், 7 தொகுதிகளுக்கான முதல் கட்ட வேட்பாளர் பட்டியலை காங்கிரஸ் கட்சி வெளியிட்டுள்ளது. இதில், தற்போது, எம்பியாக உள்ள 4 பேருக்கு அதே தொகுதியிலும், ஒருவருக்கு வேறு தொகுதியிலும் என 5 பேருக்கு மீண்டும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. 

சிவகங்கை தொகுதி வேட்பாளராக மீண்டும் கார்த்தி சிதம்பரம் களமிறக்கப்பட்டுள்ளார்.விருதுநகர் தொகுதியில் 3 முறை எம்பியாக இருந்த மாணிக்கம் தாக்கூருக்கு மீண்டும் அதே தொகுதியில் வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது. கடந்த முறை ஆரணி தொகுதி எம்பியாக இருந்த விஷ்ணு பிரசாத்திற்கு, இந்த முறை கடலூரில் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. ஆரணி தொகுதி திமுக வசம் சென்றதையடுத்து, தொகுதி மாறி அவர் போட்டியிடுகிறார். 

திருவள்ளூர் தொகுதியில், எம்பியாக இருந்த ஜெயக்குமாருக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டு, காங்கிரஸ் வார் ரூம் குழு தலைவரான சசிகாந்த் செந்தில் வேட்பாளராக களமிறக்கப்பட்டுள்ளார். விருப்ப ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அதிகாரி சசிகாந்த் செந்தில், கர்நாடகா மற்றும் தெலங்கானா மாநில சட்டப்பேரவைத் தேர்தல்களில் போது வார் ரூம் பணிகளை மேற்கொண்டவர்.இதே போல, கிருஷ்ணகிரியில் செல்லக்குமார் எம்பிக்குப் பதிலாக, இந்த முறை முன்னாள் எம்.எல்.ஏ கோபிநாத்திற்கு வாய்ப்பு கிடைத்துள்ளது. 7 தொகுதிகளுக்கு வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், இந்த முறை புதிதாக கிடைத்த மயிலாடுதுறை மற்றும் நெல்லை தொகுதிகளுக்கான வேட்பாளர்களை தேர்வு செய்வதில் இழுபறி நீடிப்பதாக கூறப்படுகிறது.மயிலாடுதுறையில் களமிறங்க, ராகுல் காந்திக்கு நெருக்கமான பிரவீன் சக்கரவர்த்தி முயற்சி செய்வது வருகிறார்.

ஆனால், ஏற்கனவே வெளியூர் நபரான மணிசங்கர் ஐயர் முன்பு எம்பியாக இருந்ததை சுட்டிக்காட்டும் மயிலாடுதுறை காங்கிரஸ் நிர்வாகிகள், மண்ணின் மைந்தர்களுக்கே வாய்ப்பு வழங்க வேண்டும் என மேலிடத்திற்கு தொடர்ந்து அழுத்தம் கொடுப்பதால் இழுபறி நீடிப்பதாக கூறப்படுகிறது. கடலூர் வேட்பாளராவார் என எதிர்பார்க்கப்பட்ட நாசே ராமச்சந்திரன் மயிலாடுதுறையில் களமிறங்க வாய்ப்புள்ளாகவும் தெரிகிறது.

இதே போல, நெல்லையில் புதியவர்களுக்கே வாய்ப்பு இருக்கும் எனவும், குறிப்பாக ராபர்ட் புரூஸ் மற்றும் பால்ராஜ் ஆகியோர் தேர்வு பட்டியலில் முன்னணியில் இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

தலைப்புச்செய்திகள்