Friday, 10th May 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

இரண்டு குற்றவாளிகளுக்கு மரண தண்டனையை நிறைவேற்றிய தலிபான்

பிப்ரவரி 23, 2024 11:20

காபூல்: ஆப்கானிஸ்தான் நாட்டில் பொதுமக்கள் முன்னிலையில் கொலை குற்றவாளிகள் இருவருக்கு மரண தண்டனையை தலிபான் நிறைவேற்றியுள்ளது. அந்த நாட்டின் தென்கிழக்கு பகுதியில் உள்ள மைதானம் ஒன்றில் இந்த தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது. ஆயிரக் கணக்கான பேர் மைதானத்தில் குழுமியிருந்த நிலையில் குற்றவாளிகள் மீது துப்பாக்கிச்சூடு மேற்கொள்ளப்பட்டது.

ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்க படைகள் கடந்த 2021-ல் வெளியேறின. அதன் பின்னர் தலிபான்கள் ஆட்சியைக் கைப்பற்றினர். அதே நேரத்தில் கடந்த முறையைப் போல் தங்கள் ஆட்சி இருக்காது என்று அப்போது தெரிவித்தனர். இருந்தும் தங்களது அறிவிப்புக்கு மாறாக அவர்களது செயல்பாடு இருந்து வருகிறது. இந்நிலையில், இந்த மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது.

குற்றவாளிகள் இருவரும் தனித்தனி வழக்குகளில் கொலை செய்த காரணத்துக்காக கைது செய்யப்பட்டவர்கள். அவர்களது தண்டனையை நீதிமன்றம் உறுதி செய்துள்ளது. அதையடுத்து அவர்களது குடும்பத்தினர் முன்னிலையில் இருவருக்கும் மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது. அந்த நாட்டில் இஸ்லாமிய சட்டம் அமலில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

வியாழக்கிழமை மதியம் 1 மணி அளவில் காஸ்னி பகுதியில் உள்ள மைதானத்தில் மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது. குற்றவாளிகளில் ஒருவர் மீது 8 குண்டுகளும், மற்றொருவர் மீது 7 குண்டுகளும் பாய்ந்து உயிரிழந்ததாக தகவல். கடந்த 2021-ல் தலிபான் ஆட்சி அமைத்த பிறகு பொதுமக்கள் முன்னிலையில் மேற்கொள்ளப்படும் மூன்றாவது மற்றும் நான்காவது மரண தண்டனையாக இது அமைந்துள்ளது. தலிபானின் இந்த செயலுக்கு ஐ.நா கண்டனம் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

தலைப்புச்செய்திகள்