Monday, 20th May 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

மாரத்தான் போட்டி நடத்தி ரூ.30 லட்சம் மோசடி:  நிகழ்ச்சி ஏற்பாட்டாளர் உட்பட  நால்வர் மீது வழக்கு

பிப்ரவரி 06, 2024 04:07

தேனி: தனியார் விளையாட்டு நிறுவனம் சார்பில் பல்வேறு பிரிவுகளில் நேற்று முன்தினம்(பிப்.04) மாரத்தான் போட்டி நடத்தப்பட்டது.போட்டியில் பங்கேற்க நுழைவு கட்டணமாக ஒருவருக்கு தலா 300 ரூபாய் வசூலிக்கப்பட்டுள்ளது. சுமார் 3,000த்திற்கும் அதிகமானோர் நுழைவு கட்டணம் செலுத்தியதாக கூறப்படுகிறது.

இளைஞர்களே போதைப்பொருள் பழக்கத்தில் இருந்து விழித்துக் கொள் என்ற முழக்கங்களுடன் நடந்த விழிப்புணர்வு மாரத்தான் போட்டியில், போட்டியாளர்கள் செல்லும் வழியில் குடிநீர் வசதி, அவசர தேவைக்கான  ஆம்புலன்ஸ் மற்றும் மருத்துவ வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் எதுவும் செய்து தரவில்லை எனவும் போட்டியில் பங்கேற்றவர்களுக்கு சைக்கிள் மற்றும் ரொக்கப் பரிசு வழங்குவதிலும் குளறுபடி ஏற்பட்டதாக கூறி போட்டியில் பங்கேற்றவர்கள் தேனி பங்களாமேடு பகுதியில்  சுமார் ஒன்றரை மணி நேரத்திற்கும் மேலாக சாலை மறியல் நடந்தது. இதனால் போக்குவரத்து பாதிப்பும் ஏற்பட்டது.

இதையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த பெரியகுளம் ஆர்.டி.ஓ முத்துமாதவன், தேனி ஏ.டி.எஸ்.பி விவேகானந்தன் உள்ளிட்ட அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தியதை அடுத்து மறியலில் ஈடுபட்டவர்கள் கலைந்து சென்றனர்.இது தொடர்பாக  போடிநாயக்கனூர் அருகேயுள்ள காமராஜபுரத்தை சேர்ந்த வழக்கறிஞர் ராதாகிருஷ்ணன் அளித்த புகாரில், மாரத்தான் போட்டி நடத்தி 30 லட்சம் ரூபாய் மோசடி செய்ததாக நிகழ்ச்சி ஏற்பாட்டாளர் ஸ்டீபன் உள்ளிட்ட நால்வர் மீது  406 நம்பிக்கை மோசடி, 417 நம்பிக்கையூட்டி வஞ்சித்தல் ஆகிய பிரிவுகளின் கீழ் தேனி நகர் போலீசார் வழக்குப்பதிவு  செய்துள்ளனர்.

அதே போல் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டு போக்குவரத்துக்கும்,பொதுமக்களுக்கும் இடையூறு செய்ததாக தேனி அல்லிநகரம் கிராம நிர்வாக அலுவலர் (பொறுப்பு) மதுக்கண்ணன் புகாரில்,  போட்டியளர்களான சூர்யா, வீரமணி, சிவா, தமிழ்செல்வன் உள்ளிட்ட பலர் மீதும் தேனி நகர போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தலைப்புச்செய்திகள்