Friday, 10th May 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

தைவானில் நடைபெற்ற அதிபர் தேர்தலில் லாய் சிங் டி வெற்றி

ஜனவரி 14, 2024 12:25

தைவான்: தைவானில் அதிபர் தேர்தல் நடைபெற்றது. இதில் அமெரிக்க ஆதரவு கட்சியான ஜனநாயக முன்னேற்ற கட்சியின் வேட்பாளர் லாய் சிங் டி வெற்றி பெற்றார்.

சீனாவில் கடந்த 1911-ம் ஆண்டில் மன்னராட்சி ஒழிக்கப்பட்டு, சீன தேசிய கட்சி ஆட்சியை கைப்பற்றியது. கடந்த 1927-ம் ஆண்டில் சீன தேசிய கட்சிக்கு எதிராக, சீன கம்யூனிஸ்ட் கட்சி போர்க் கொடி உயர்த்தியது.

இதன் காரணமாக 1949-ம் ஆண்டு வரை சீனாவில் உள் நாட்டுப் போர் நீடித்தது. இந்த போரில் தோல்வியை தழுவிய சீன தேசிய கட்சியினர். 

தென் சீன கடலில் 168 தீவுகள் அடங்கிய தைவானில் குடியேறி ஆட்சி நடத்தினர். அந்த பகுதியை சீனா சொந்தம் கொண்டாடி வருகிறது.

சர்வதேச அரங்கில் தற்போது 14 நாடுகள் மட்டுமே தைவானை தனி நாடாக அங்கீகரித்துள்ளன. சீனாவின் நிர்ப்பந்தம் காரணமாக அமெரிக்கா, இந்தியா உள்ளிட்ட நாடுகள் கூட தைவானை தனி நாடாக அங்கீகரிக்கவில்லை.

எனினும் ராணுவ ரீதியாக தைவானுக்கு அமெரிக்கா பல்வேறு உதவிகளை வழங்கி வருகிறது.

இந்த சூழலில் தைவான் அதிபர் தேர்தல் நேற்று நடைபெற்றது. இதில் ஆளும் ஜனநாயக முற்போக்கு கட்சி சார்பில் தற்போதைய துணை அதிபர் லாய் சிங் டி, பிரதான எதிர்க் கட்சியான குவோமின்டாங் சார்பில் ஹவ் யூ, தைவான் மக்கள் கட்சி சார்பில் கோ வென் ஜி ஆகியோர் போட்டியிட்டனர்.

அந்த நாட்டின் 2.5 கோடி மக்கள் தொகையில் 1.9 கோடி பேர் வாக்குரிமை பெற்றுள்ளனர். காலை 8 மணி முதல் மாலை 4 மணி வரை வாக்குப் பதிவு நடைபெற்றது. ஒட்டுமொத்தமாக 70 சதவீத வாக்குகள் பதிவாகின.

வாக்குப் பதிவு நிறைவடைந்ததும் வாக்கு எண்ணிக்கை தொடங்கியது. ஆளும் ஜனநாயக முற்போக்கு கட்சி அமெரிக்க ஆதரவு கட்சியாகும். குவோமின்டாங் கட்சி சீன ஆதரவு கட்சியாகும்.

வாக்கு எண்ணிக்கை தொடங்கியது முதல் ஆளும் ஜனநாயக முற்போக்கு கட்சியின் வேட்பாளர் லாய் சிங் டி முன்னிலையில் இருந்தார்.

இறுதி சுற்று வாக்கு எண்ணிக்கையில் அவர் 53.74 லட்சத்துக்கும் அதிகமாக வாக்குகளைப் பெற்று வெற்றி பெற்றார்.

குவோமின்டாங் கட்சி வேட்பாளர் ஹவ் யூ-க்கு 44.59 லட்சம் வாக்குகள் கிடைத்தன. சீன பாதுகாப்புத் துறை நேற்று வெளியிட்ட அறிக்கையில், “தைவான் விவகாரத்தில் சீன மக்கள் விடுதலைப் படை எதற்கும் தயார் நிலையில் இருக்கிறது.

தைவானை சுதந்திர நாடாக அறிவிக்க முயன்றால், அந்த முயற்சியை நசுக்குவோம்" என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.

இதற்குப் பதிலடியாக பிலிப்பைன்ஸ் நாட்டில் உள்ள அமெரிக்க ராணுவ தளத்தில்அதிக அளவிலான ஆயுதங்கள், எரி பொருள் குவிக்கப்பட்டு வருகிறது.

அமெரிக்க போர்க்கப்பல்கள், விமானங்களும் தயார் நிலையில் வைக்கப்பட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

தலைப்புச்செய்திகள்