Friday, 10th May 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

ஹவுதிகளின் 12-க்கும் மேற்பட்ட இடங்களில் தாக்குதல்

ஜனவரி 13, 2024 01:19

வாஷிங்டன்: செங்கடல் வணிகப் பாதையை பாதுகாப்பதாக அமெரிக்க அதிபர் ஜோ பைடனின் நிர்வாகம் உறுதி அளித்ததைத் தொடர்ந்து ஹவுதிகள் மீது அமெரிக்கா வெள்ளிக்கிழமை புதிய தாக்குதல் நடத்தியுள்ளது என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 

இந்த முறை ஹவுதிகளின் ராடார் தளங்களை குறிவைத்து தாக்குதல் நடத்தப்பட்டுள்ளன. இதுகுறித்து பெயர் வெளியிட விரும்பாத அமெரிக்க அதிகாரிகள் கூறுகையில், “செங்கடலில் ஹவுதிகளின் தாக்குதல்களைத் தடுக்கும் அமெரிக்க முயற்சியின் முக்கிய இலக்காக ராடார் தளங்கள் உள்ளன" என்று தெரிவித்தனர். 

இந்தத் தாக்குதல்கள் குறித்து வெள்ளை மாளிகை செய்தித் தொடர்பாளர் ஜான் கிர்பி, “சமீப காலங்களில் செங்கடல் பிராந்தியங்களில் நடந்த தாக்குதல்களைத் தொடர்ந்து, ஹவுதிகளின் திறன்களை குறைக்கும் வகையில் அவர்கள் ஏவுகணைகள் மற்றும் ஆளில்லா விமானங்களை வைத்து தாக்குதலுக்கு ஏவும் தளங்களைக் குறிவைத்து தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளது” என்றார். 

ஏமன் நேரப்படி வெள்ளிக்கிழமை, தலைநகர் சனாவிலுள்ள விமான நிலையம் அருகே உள்ள ராணுவத் தளம், ஏமனின் மூன்றாவது நகரமான டைஸ், செங்கடலில் உள்ள ஏமனின் முக்கிய துறைமுக தளமான ஹொடைடா, ஹஜ்ஜாவில் உள்ள கடல் தளம் ஆகியவைகள் மீது தாக்குதல் நடத்தப்படுத்தப்பட்டது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


இதனிடையே, ஹவுதிகளின் தொலைக்காட்சியான அல்-மசிரா, ஏமன் தலைநகர் சனாவை குறிவைத்து அமெரிக்கா, பிரிட்டன் படைகள் தாக்குதல் நடத்தின என்று செய்தி வெளியிட்டுள்ளன. ஹவுதிகளின் உயர் அரசியல் கவுன்சில் உறுப்பினரான அலி அல் ஹவுதி, “ஏமன் மீதான உங்களின் தாக்குதல் பயங்கரவாதம் என்று தெரிவித்தார். மேலும் அவர் அமெரிக்காவை பிசாசு” என்று வர்ணித்தார்.

ஏமன் உள்நாட்டுப் போரில் பெரும் பகுதியை கைப்பற்றிய ஹவுதிகள் ஹமாஸ்களுக்கு ஆதரவாக இஸ்ரேஸ் துறைமுகத்துக்கு செல்லும் அந்நாட்டுடன் தொடர்புடைய கப்பல்கள் மீது தாக்குதல் நடத்துவதாக தெரிவித்திருந்தனர் என்றாலும் தாக்கப்பட்ட கப்பல்களில் பெரும்பாலானவை இஸ்ரேலுடன் தொடர்பு இல்லாதவை.

இந்நிலையில், செங்கடல் சர்வதேச பாதையில் வணிக கப்பல்கள் மீது ஹவுதிகள் நடத்திய தாக்குதல்களுக்கு எதிராக வியாழக்கிழமை அமெரிக்கா, பிரிட்டிஷ் படைகள் தாக்குதல் நடத்தின. 

விமானம், கப்பல் மற்றும் நீர்முழ்கி மூலமாக தாக்குதல் நடத்தப்பட்டன. 12-க்கும் மேற்பட்ட இடங்களில் தாக்குதல்கள் நடத்தப்பட்டன.

முன்னதாக, அமெரிக்க அதிபர் ஜோ பைடன், “ஹவுதிகள் தங்களின் மூர்க்கத்தனத்தை தொடர்ந்தால் அவர்களுக்கு தக்க பதிலடி கொடுப்போம் என்று உறுதியளிக்கிறோம்” என்று தெரிவித்திருந்தார். இந்தச் சூழலில் 2வது முறையாக தாக்குதல் தொடர்கிறது.

தலைப்புச்செய்திகள்