Sunday, 12th May 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

சபரிமலையில் கேரள அரசு திறம்பட செயல்பட்டு வருகிறது: அமைச்சர் சேகர்பாபு பாராட்டு

ஜனவரி 11, 2024 03:36

சென்னை: திருவான்மியூரில் உள்ள பாம்பன் ஸ்ரீமத் குமரகுருதாசர் சுவாமிகள் திருக்கோவிலில் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் திரு.பி.கே.சேகர்பாபு கலந்துகொண்டு மயூர வாகன சேவன விழாவின் 100வது ஆண்டை முன்னிட்டு சண்முக கவசம் மற்றும் குமாரஸ்தவம் பாராயணத்தை தொடங்கி வைத்தார்.

தொடர்ந்து மறுபதிப்பு செய்யப்பட்ட “பாம்பன் சுவாமிகளின் சரித்திரம்” என்னும் நூலையும் அவர் வெளியிட்டார்.

அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர், திமுக ஆட்சிக்காலத்தில் தான் சித்தர்களுக்கு விழா எடுக்கப்பட்டுள்ளது. அதேபோல், திருநாவுக்கரசர், ஸ்ரீமத் நாதமுனிகள், ஆளவந்தோர் போன்றோருக்கு திமுக ஆட்சியில் விழா எடுக்கப்பட்டுள்ளது, அதன் செலவினங்களை தமிழக அரசே ஏற்றுள்ளது என்று தெரிவித்தார்.

மயிலாப்பூரில் உள்ள திருவள்ளூவர் கோவிலை கட்டுவதற்கு 13 கோடி ரூபாய் செலவிலும், நாகப்பட்டினத்தில் உள்ள அவ்வையாருக்கு கோவில் கட்டுவதற்கு 17 கோடி ரூபாய் செலவில் கோவில் கட்டுவதற்கும் ஒப்பந்தம் கோரப்பட்டுள்ளது.

திமுக ஆட்சிக்காலத்தில் இதுவரை 1274 கோவில்களில் குடமுழக்கும், 5,557 கோடி ரூபாய் மதிப்புள்ள கோவில் நிலங்கள் மீட்கப்பட்டுள்ளன. தற்போது 100 ஆவது ஆண்டாக நடைபெறும் பாம்பன் சுவாமிகளின் குருவிழாவைனை பெருவிழாவாக தமிழக அரசு கொண்டாடி வருகிறது.

சபரிமலை விவாகரத்தை பொறுத்தவரை, தமிழக பக்தர்களின் நலனுக்காக தமிழக முதல்வர் கேரள முதல்வருடனும், அமைச்சராகிய நானும், கேரள அமைச்சருடனும், தேவசம் அதிகாரிகளுடனும் பேசியுள்ளோம். வழக்கத்திற்கு மாறாக பக்தர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதால் தரிசனம் செய்வது காலதாமதம் ஏற்படுவது இயற்கை.

இருந்தாலும், இந்த கூட்ட நெரிசலை கேரள அரசு திறமையாக அசம்பாவிதங்கள் ஏதுமின்றி சமாளித்து வருகிறது. வருங்காலங்களில் அதிக எண்ணிக்கையிலான பக்தர்கள் தரிசனம் செய்யும் வகையில் கேரள அரசும், தேவசம் போர்டும் திட்டங்கங்களை வகுத்து வருகிறது என தெரிவித்தார்.
 

தலைப்புச்செய்திகள்