Sunday, 12th May 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

நயன்தாரா நடித்துள்ள ‘அன்னபூரணி’ திரைப்படம் நெட்ஃப்ளிக்ஸ் தளத்தில் இருந்து நீக்கம்

ஜனவரி 11, 2024 03:20

சென்னை: நிலேஷ் கிருஷ்ணா இயக்கத்தில் நயன்தாரா நடித்துள்ள ‘அன்னபூரணி’ திரைப்படம் நெட்ஃப்ளிக்ஸ் தளத்தில் இருந்து நீக்கப்பட்டுள்ளது. இப்படத்தில் மத உணர்வுகளை புண்படுத்தும் வசனங்கள் இடம்பெற்றது தொடர்பாக படத்தின் தயாரிப்பு நிறுவனம் இந்து அமைப்புகளிடம் மன்னிப்புக் கோரியுள்ளது.

நடிகை நயன்தாராவின் 75-வது திரைப்படம், ‘அன்னபூரணி’. ஜெய், சத்யராஜ், கே.எஸ்.ரவிக்குமார், கார்த்திக் குமார், ரெடின் கிங்ஸ்லி உட்பட பலர் நடித்த இந்தப் படம் கடந்த டிச. 1-ம் தேதி வெளியானது. அறிமுக இயக்குநர் நிலேஷ் கிருஷ்ணா இயக்கி இருந்தார். இந்தப் படம் சமீபத்தில் நெட்பிளிக்ஸ் தளத்திலும் வெளியானது.

இந்த படத்தில், இஸ்லாமிய மதத்தைச் சேர்ந்த ஃபர்ஜான் என்ற கதாபாத்திரம், கதாநாயகியை இறைச்சி சாப்பிட வைப்பதற்காக ராமர் இறைச்சி சாப்பிடுவார் என்று கூறுவது போலவும் அர்ச்சகர் மகளான கதாநாயகி ‘நமாஸ்’ செய்வது போலவும் காட்சிகள் அமைக்கப்பட்டுள்ளன. 

இந்து மத உணர்வுகளைப் புண்படுத்தும் வகையில் இந்தப் படம் வேண்டும் என்றே எடுக்கப்பட்டுள்ளது என்று மும்பையை சேர்ந்த, சிவசேனா முன்னாள் தலைவர் ரமேஷ் சோலங்கி என்பவர் மும்பை எல்டி மார்க் காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார். இதையடுத்து போலீஸார் எஃப்.ஐ.ஆர் பதிவு செய்துள்ளனர்.

இதனையடுத்து இப்படத்துக்கு எதிராக சமூக வலைதளங்களில் இந்து அமைப்புகள் போர்க்கொடி தூக்கின. பலரும் இப்படத்தை தடை செய்யவேண்டும் என்று பதிவிட்டு வந்தனர்.

இந்த நிலையில், தற்போது இந்த படம் நெட்ஃப்ளிக்ஸ் தளத்தில் இருந்து நீக்கப்பட்டுள்ளது. இப்படத்தில் மத உணர்வுகளை புண்படுத்தும் வசனங்கள் இடம்பெற்றது தொடர்பாக படத்தை இணைந்து தயாரித்த ஜீ நிறுவனம் விஷ்வ இந்து பரிஷர் அமைப்பிடம் மன்னிப்புக் கோரியுள்ளது. அக்கடிதத்தில் 'படத்தில் சம்பந்தப்பட்ட காட்சியை நீக்கும் வரை அப்படத்தை நெட்ஃப்ளிக்ஸிலிருந்து நீக்குவதாக உறுதியளிக்கிறோம்' என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

தலைப்புச்செய்திகள்