Sunday, 12th May 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

சாதிவாரி கணக்கெடுப்பை எதிர்க்கவில்லை: ஆர்.எஸ்.எஸ் ஊடகப்பிரிவு தலைவர் சுனில் அம்பேத்கர்

டிசம்பர் 22, 2023 12:28

டெல்லி: சாதிவாரி கணக்கெடுப்பை எதிர்க்கவில்லை அது வெறும் அரசியல் ஆதாயத்துக் கானதாக இருந்துவிடக் கூடாது என்றே கூறுகிறோம்” என ஆர்.எஸ்.எஸ் விளக்கமளித்துள்ளது.

முன்னதாக ஆர்எஸ்எஸ் அமைப்பின் முக்கிய நிர்வாகிகளுள் ஒருவரான ஸ்ரீதர் கட்கே கடந்த 19 ஆம் தேதி பேசுகையில், “சாதிவாரி கணக்கெடுப்பு சிலருக்கு அரசியல் ரீதியாக ஆதாயம் அளிக்கலாம்.

சாதிவாரி கணக்கெடுப்பின் மூலம் அரசியல் கட்சிகளால் தங்களுக்கு சாதகமான வாக்குவங்கி என்னவென்பதைத் தெரிந்துகொள்ள இயலும்.

ஆனால், இத்தகைய கணக்கெடுப்பு சமூகத்துக்கோ, தேசிய ஒருமைப்பாட்டுக்கோ எவ்வித நன்மையும் பயக்காது” எனக் கூறியிருந்தார்.

இது சர்ச்சையான நிலையில் தற்போது ஆர் எஸ் எஸ் ஒரு விளக்க அறிக்கை வெளியிட்டுள்ளது.

ஆர் எஸ் எஸ் அமைப்பின் ஊடகப் பிரிவு தலைவர் சுனில் அம்பேத்கர் வெளியிடப் பட்டுள்ள அந்த அறிக்கையில், “சாதிவாரி கணக்கெடுப்பை மேற்கொள்ளும்போது அது எந்தவிதத்திலும் சமூகத்தில் பிளவை ஏற்படுத்தாமல் இருப்பதை உறுதி செய்ய வேண்டும்.

எங்கள் அமைப்பு சாதிப் பாகுபாடுகளைக் கடந்து ஒற்றுமையான இந்து சமூகத்தை உருவாக்கவே விரும்புகிறது. நல்லிணக்கம், சமூக நீதியின் அடிப்படையில் எவ்வித பிரிவினையும், பேதமும் இல்லாமல் அதைக் கட்டமைக்க விரும்புகிறோம்.

அதனால் சாதிவாரி கணக்கெடுப்பு என்பது சமூகத்தின் ஒட்டுமொத்த வளர்ச்சிக்காகப் பயன்படுத்தப்படக் கூடியதாக இருக்க வேண்டும் என்பதே எங்களின் கருத்து.

பல்வேறு வரலாற்றுக் காரணங்களால் பல சமூகங்கள் பொருளாதார, கல்வி எனப் பல படிநிலைகளில் பின்தங்கிவிட்டன. அரசாங்கங்களும் அத்தகைய பின் தங்கிய சமூகத்தின் வளர்ச்சிக்காக அவர்களுக்கு அதிகாரமளித்தலுக்காக பல நன்மைகளை செய்துவருகின்றன.

அதனால், சாதிவாரி கணக்கெடுப்பின்போது எல்லா அரசியல் கட்சிகளும் சமூக நல்லிணக்கம், ஒற்றுமை உடையாமல் பார்த்துக் கொள்ள வேண்டும் என்பதையே நாங்கள் வலியுறுத்துகிறோம். மற்றபடி நாங்கள் சாதிவாரி கணக்கெடுப்பை எதிர்க்கவில்லை” என்றார்.

சமீபகாலமாகவே, காங்கிரஸ் உள்ளிட்ட சில எதிர்க்கட்சிகள் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்த வேண்டும் என்று வலியுறுத்தி எழுப்பும் குரல் வலுத்து வருகின்றன. பிஹாரைத் தொடர்ந்து கர்நாடகா அரசு சாதிவாரி கணக்கெடுப்பு விவரத்தை வெளியிட்டது.

நடந்துமுடிந்த ஐந்து மாநிலத் தேர்தலில் சாதிவாரி கணக்கெடுப்பு காங்கிரஸின் பிரச்சாரத்தின் முக்கிய அம்சமாக இருந்தது. ஐந்து மாநில தேர்தல் பிரச்சாரங்களில் பாஜக சார்பில் அமித் ஷா மேடையேறிய போதெல்லாம் சாதிவாரி கணக்கெடுப்பை தாங்கள் எதிர்க்கவில்லை என்றுமட்டும் கூறி வந்தார்.

இந்நிலையில் பாஜகவின் கொள்கை ஊற்றான ஆர்எஸ்எஸ் சாதிவாரி கணக்கெடுப்பை விமர்சித்தது சர்ச்சையானதால் தற்போது அதற்கு விளக்கம் கொடுக்கப்பட்டுள்ளது.

தலைப்புச்செய்திகள்