Monday, 13th May 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

தொழில்நெறி வழிகாட்டும் கண்காட்சி மற்றும் கருத்தரங்கு ஆட்சியர் ச.உமா கையேடு வெளியிட்டார்

டிசம்பர் 21, 2023 02:14

நாமக்கல்: நாமக்கல், அறிஞர் அண்ணா அரசு கலைக்கல்லூரியில் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தின் சார்பில் நடைபெற்ற தொழில்நெறி வழிகாட்டும் கண்காட்சி மற்றும் கருத்தரங்கில், நாமக்கல் மாவட்ட ஆட்சித்தலைவர் மருத்துவர் ச.உமா தொழில்நெறி வழிகாட்டு கையேடு 2023-ஐ வெளியிட்டார்.

இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித் தலைவர் மருத்துவர் ச.உமா தெரிவித்ததாவது, கால முறையில் தொழில்நுட்பங்கள் விஞ்ஞான பூர்வமாக முன்னேற்றம் அடைந்துள்ளன.

இதனை மாணவ, மாணவிகள் ஆக்கப்பூர்வமான முறையில் பயன்படுத்திட வேண்டும். மாணவர்களை நல்வழிப்படுத்தவும், வேலைவாய்ப்புகள் குறித்த ஆலோசனைகள் வழங்கிடவும் இதுபோன்ற வழிகாட்டுதல் நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன.

இதுபோன்ற முகாம்களை இளைஞர்கள் அதிகளவில் பயன்படுத்தி கொள்ள வேண்டும். மாணவர்கள் தங்கள் தேர்ந்தெடுக்கும் துறையில் முழு ஈடுபாட்டுடன் கடின முயற்சி மேற்கொண்டால் மட்டுமே சாதிக்க இயலும். 

மாணவ, மாணவிகள் தங்களுக்கு உகந்த படிப்புகளை தேர்ந்தெடுத்து படித்து, வேலைவாய்ப்பு பெற்று தங்கள் வாழ்வாதாரத்தை திடப்படுத்திக் கொள்ளலாம்.

வேலைவாய்ப்புகள் அதிகம் உள்ள படிப்புகளை அறிந்து, அதை தேர்ந்தெடுத்து படிக்க வேண்டும். மேலும் தொழில்கள் தொடங்கிடவும் கடன் தொகை வழங்கவும் பல்வேறு திட்டங்கள் உள்ளன.

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் உட்பட பல்வேறு போட்டித் தேர்வுகளுக்கு நாமக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த படித்த மாணவ, மாணவிகளை தயார்படுத்தும் வகையில் நாமக்கல் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் வாயிலாக தகுதிவாய்ந்த பயிற்சியாளர்களைக் கொண்டு பயிற்சிகள் அளிக்கப்படுகிறது.

இந்த பயிற்சிகளை மாணவ, மாணவிகள் நல்ல முறையில் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என மாவட்ட ஆட்சித்  தலைவர் மருத்துவர் ச.உமா தெரிவித்தார்.

தொடர்ந்து, கருத்தரங்கம் தொடர்பாக ”இலட்சியத்தின் பாதையில் நான்” என்ற தலைப்பில் நடைபெற்ற கட்டுரை போட்டியில் வெற்றி பெற்ற 3 மாணவியர்களுக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் மருத்துவர் ச.உமா பரிசு மற்றும் சான்றிதழ்களை வழங்கினார். 

இந்நிகழ்ச்சியில் அறிஞர் அண்ணா அரசு கலைக்கல்லூரி முதல்வர் முனைவர் எ.ராஜா, மண்டல இணை இயக்குநர் (வேலைவாய்ப்பு) ஆ.லதா, மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் பொ.மா.ஷீலா, மாவட்ட தொழில் மைய மேலாளர் சகுந்தலா, பாரதியார் பல்கலைக்கழக ஆராய்ச்சி மற்றும் தொழில் நெறி வழிகாட்டல் பிரிவு பேராசிரியர் பி.செல்வபிரணாம் பிகா, இளநிலை வேலைவாய்ப்பு அலுவலர்  தி.மல்லிகா உட்பட துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

தலைப்புச்செய்திகள்