Saturday, 11th May 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

3 புதிய குற்றவியல் மசோதாக்கல்: குரல் வாக்கெடுப்பு மூலம் மக்களவையில் நிறைவேற்றம்

டிசம்பர் 21, 2023 11:08

டெல்லி: பழைய குற்றவியல் சட்டங்களை மறுசீரமைக்கும் விதமாக மத்திய அரசு புதிதாக கொண்டு வந்த மூன்று குற்றவியல் சட்ட மசோதாக்களும் மக்களவையில் குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேற்றப்பட்டன.

பழைய காலனித்துவ கால இந்திய தண்டனைச் சட்டங்களை மாற்றும் வகையிலும், நவீன காலத்துக்கு ஏற்ற வகையிலும் மத்திய அரசு 3 புதிய குற்றவியல் மசோதாக்களை உருவாக்கியுள்ளது.

அதன்படி, பாரதிய நியாய சன்ஹிதா, பாரதிய நாகரிக் சுரக்‌ஷாசன்ஹிதா, பாரதிய சாக்‌ஷியா ஆகிய 3 மசோதாக்களையும் மக்களவையில் மத்திய உள்துறைஅமைச்சர் அமித் ஷா கடந்த 12-ம்தேதி அறிமுகம் செய்தார்.

இதன் மீதான விவாதம் மக்களவையில் நேற்று நடந்தது. அப்போது, அமித் ஷா பேசியதாவது:

புதிய குற்றவியல் சட்டங்கள் தொடர்பாக இதுவரை 158 ஆலோசனை கூட்டங்கள் நடத்தப்பட்டுள்ளன. தனிப்பட்ட முறையில் புதியகுற்றவியல் சட்டத்தின் ஒவ்வொரு புள்ளி, கமாவையும் நான் சரிபார்த்துள்ளேன்.

புதிய சட்டத்தின் ஒவ்வொரு அம்சமும் விரிவாக அலசி ஆராயப்பட்டு சரிபார்க்கப்பட்டுள்ளன. அவை, நமது அரசியல் அமைப்பின் உணர்வோடு முழுமையாக பொருந்திப் போகின்றன.

இந்த புதிய மூன்று குற்றவியல் சட்ட மசோதாக்கள் காலனித்துவ இந்திய தண்டனைச் சட்டத்துக்கு சரியான மாற்றாக அமையும் என்பதுடன், இந்தியத் தன்மை, அரசியலமைப்பு, மக்களின் நல்வாழ்வை உறுதி செய்வதாக இருக்கும். இவ்வாறு அவர் பேசினார்.

இதையடுத்து, மக்களவையில்3 புதிய குற்றவியல் மசோதாக்களும் குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேற்றப்பட்டன.

நாடாளுமன்ற மக்களவை, மாநிலங்களவையில் இருந்து எதிர்க்கட்சிகளை சேர்ந்த 140-க்கும் மேற்பட்ட எம்.பி.க்கள் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ள நிலையில் மத்திய அரசு இந்த மசோதாவை நிறைவேற்றியுள்ளது குறிப்பிடத்தக்கது.

தலைப்புச்செய்திகள்