Sunday, 12th May 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

மதுரா மசூதி கள ஆய்வுக்கு தடை விதிக்க உச்ச நீதிமன்றம் மறுப்பு

டிசம்பர் 15, 2023 05:55

புதுடெல்லி: உத்தரப் பிரதேசம் மதுராவில் கிருஷ்ணஜென்மபூமி கோயில் உள்ளது. இதற்கு முன்பிருந்த கோயிலை இடித்து ஒரு பகுதி நிலத்தில் முகலாய மன்னர் அவுரங்கசீப், ஷாயி ஈத்கா மசூதியை கட்டியதாகப் புகார் உள்ளது. மதுராவின் கோயில் மற்றும் மசூதியின் அறக்கட்டளைகள் இடையே 1969-ல் ஏற்படுத்தப்பட்ட சமாதான ஒப்பந்தம் மீது தற்போது பல இந்துத்துவ அமைப்பினர் கேள்வி எழுப்பி வருகின்றனர். உத்தரப் பிரதேசத்தின் அயோத்தி வழக்கின் 2019 தீர்ப்புக்குப் பின் இந்தப் போக்கு அதிகரித்துள்ளது.

இந்நிலையில், மதுரா மசூதியில் கள ஆய்வு நடத்தி கோயிலின் நிலத்தை மீட்க முயற்சிக்கப்படுகிறது. இதற்காக, உத்தரப் பிரதேசத்தின் அலகாபாத் உயர் நீதிமன்றத்தில் 18 மனுக்கள் ஒன்றாக விசாரிக்கப்பட்டன. வியாழக்கிழமை நடந்த விசாரணையில் நீதிபதி மயாங் குமார், மதுரா மசூதியில் களஆய்வு நடத்த உத்தரவிட்டுள்ளார். இதை மத்திய அரசின் இந்திய தொல்லியல் ஆய்வகம் செய்யவும் என்று உத்தரவிடப்பட்டது, இந்த வழக்குகள் அடுத்து டிச.19-ல் விசாரிக்கப்பட உள்ளன.

இந்த கள ஆய்வு உத்தரவை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் இஸ்லாமியர்கள் தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. உச்ச நீதிமன்ற நீதிபதிகள் அமர்வின் முன் இம்மனு, வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வந்தது. இம்மனு சன்னி மத்திய வஃக்பு வாரியம் மற்றும் ஷாயி ஈத்கா மசூதி அறக்கட்டளை ஆகியவற்றின் சார்பில் தாக்கல் செய்யப்பட்டிருந்தன. இந்தநிலையில், மனுவில் கோரப்பட்டிருந்த கள ஆய்வுக்கு உடனடி தடைக்கு உச்ச நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது. இவர்களின் மனுவை ஜனவரி 9-இல் விசாரிப்பதாகவும் உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

முன்னதாக, உத்தரப் பிரதேசத்தின் வாரணாசியிலுள்ள காசி விஸ்வநாதர் கோயில் நிலத்தின் ஒரு பகுதியிலும் கியான்வாபி மசூதி கட்டப்பட்டிருப்பதாக புகார் உள்ளது. இந்த புகாரும் முகலாய மன்னர் அவுரங்கசீப் மீது சுமத்தப்பட்டுள்ளது. இதனால், அது தொடர்பான மனுக்களும் வாரணாசி நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டு, கள ஆய்வுக்கு உத்தரவிடப்பட்டன. இந்திய தொல்லியல் ஆய்வகத்தினரால் மேற்கொள்ளப்பட்ட இந்தக் கள ஆய்வு முடிந்து, அதன் அறிக்கை சமர்ப்பிக்கும் நிலையில் உள்ளது. இதேபோல், மதுராவின் மசூதி மீதும் தற்போது கள ஆய்வு நடைபெற இருப்பது குறிப்பிடத்தக்கது.

தலைப்புச்செய்திகள்