Monday, 20th May 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

வணிகர்கள் ரோந்து போலீசாருடன் இணைந்து செயல்பட வேண்டும்: கிரண்பெடி

மே 18, 2019 09:56

புதுச்சேரி: புதுவை வில்லியனூரில் வாலிபர் ஒருவர் வியாபாரிகளை மிரட்டி மாமூல் வசூலித்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து தகவலறிந்து வந்த வில்லியனூர் போலீசார் அவரை பிடிக்க முயற்சி செய்தபோது அந்த நபர் போலீசாரை தாக்கியுள்ளார்.

இதுதொடர்பான வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் பரவி வியாபாரிகள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. சம்பந்தப்பட்ட நபரை கைது செய்யக்கோரி வியாபாரிகள் கடையடைப்பு போராட்டமும் நடத்தினார்கள்.

இந்த சம்பவம் தொடர்பாக கவர்னர் கிரண்பெடி சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:–

போலீசாரை தாக்கிய ரவுடி யார்? காவல்துறை ஆவணங்களில் அவரது பெயர் இல்லையா? போலீசாரின் ரோந்துபணி என்ன செய்து கொண்டிருக்கிறது? என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

ரவுடிகளை கண்காணிக்கவும், கட்டுப்படுத்தவும் வணிகர்கள் ஒன்று சேர்ந்து தங்கள் சொந்த முயற்சியில் ரோந்து குழு ஒன்றை ஏற்படுத்த வேண்டும். மேலும் தங்கள் இடங்களில் கண்காணிப்பு கேமராக்களை பொருத்தி அவற்றை முழு செயல்பாட்டில் வைக்கவேண்டும். அதேபோல் வணிகர்கள் ரோந்து போலீசாருடன் இணைந்து செயல்பட வேண்டும்.

மேலும் போலீசார் சுதந்திரமாக செயல்பட வேண்டும். கலெக்டருடன் இணைந்து சமூக விரோத கும்பலின் நடவடிக்கைகளை கட்டுப்படுத்த வேண்டும் என்று அதில் குறிப்பிட்டுள்ளார்.

தலைப்புச்செய்திகள்