Friday, 10th May 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

தீவிரவாதி சஜித் மிர்ரை பாகிஸ்தான் சிறையில் கொல்ல முயற்சி

டிசம்பர் 06, 2023 10:40

இஸ்லாமாபாத்: மும்பையில் நடைபெற்ற 26/11 தாக்குதலில் முக்கியக் குற்றவாளியான தீவிரவாதி சஜித் மிர்ரை பாகிஸ்தான் சிறையில் கொலை செய்ய முயற்சி நடந்துள்ளது.

மும்பை தாக்குதல் வழக்கில், கடந்த ஆண்டு பாகிஸ்தானில் உள்ள தீவிரவாத தடுப்பு நீதிமன்றத்தில் 8 ஆண்டுகள் சிறை தண்டனை சஜித் மிர்ருக்கு வழங்கப்பட்டது. அவர், அங்குள்ள கோட் லக்பத் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

சில நாட்களுக்கு முன்பு மிர் திடீரென, உடல் நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சிறையில் அவர் இருந்தபோது அவருக்கு விஷம் கொடுக்கப்பட்டதாகவும், மருத்துவமனையில் அவருக்கு செயற்கை சுவாசம் (வென்டிலேட்டர்) வழங்கி சிகிச்சை அளிக்கப்படுவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதைக் காரணமாகக் காட்டி, சஜித் மிர் வேறு சிறைக்கு மாற்றப்பட உள்ளதாகவும் கூறப்படுகிறது.

இந்நிலையில், மிர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டது பற்றிய அறிக்கைகள் பாகிஸ்தான் ராணுவம் மற்றும் பாகிஸ்தான் உளவு அமைப்பான ஐஎஸ்ஐ ஆகியவற்றின் தந்திரமாக இருக்கலாம் என்றும், லஷ்கர் தீவிரவாதிக்கு எதிராக சர்வதேச நிறுவனங்கள் எடுக்கும் நடவடிக்கையை மட்டுப்படுத்தும் முயற்சியாக இருக்கலாம் என்றும் சந்தேகிக்கப்படுகிறது.

பாகிஸ்தானிலிருந்து அவரை நாடு கடத்துவதைத் தடுக்கும் முயற்சியாக இது இருக்கலாம் என்றும் சந்தேகிக்கப்படுகிறது.

சஜித் மிர், ஐ.நா. சபையால் தேடப்படும் தீவிரவாதி என அறிவிக்கப்பட்டிருக்கிறார். அவரது தலைக்கு 5 மில்லியன் டாலர் பரிசு வழங்கப்படும் என்று அமெரிக்கா அறிவித்தது.

இச்சூழலில் அவரை அமெரிக்காவுக்கு நாடு கடத்துவதைத் தடுக்க ஐ.எஸ்.ஐ மேற்கொண்ட முயற்சியாக இருக்கலாம் என்று கூறப்படுகிறது.

40 வயது மதிக்கத்தக்க சஜித் மிர் 2008-ல் மும்பையில் நடந்த 26/11 கொடூர தாக்குதலின் முக்கிய சதிகாரர்களில் ஒருவர். தீவிரவாதிகளுக்கு உளவுத் தகவல்களை வழங்கி வந்தார் என்றும் கூறப்படுகிறது.

தலைப்புச்செய்திகள்