Friday, 10th May 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

காசா பகுதியில் 178 பேர் உயிரிழந்ததாக ஹமாஸ் சுகாதார அமைச்சகம் தகவல்

டிசம்பர் 05, 2023 04:27

காசா நகர்: ஒருவார கால தற்காலிக போர் நிறுத்தம் முடிந்த நிலையில் இஸ்ரேலிய தாக்குதலில் காசா பகுதியில் 178 பேர் உயிரிழந்ததாக ஹமாஸ் சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

ஆனால் இஸ்ரேல் ராணுவமோ ஹமாஸ் பதுங்கிடம் என அடையாளம் காணப்பட்ட 200 இடங்களை மட்டுமே குறிவைத்து தாங்கள் தாக்குதல் நடத்தியதாகத் தெரிவித்துள்ளது.

தெற்கு காசாவின் கான் யூனிஸ் பகுதியை ஒட்டிய இடங்களைக் குறிவைத்து இஸ்ரேல் தொடர் தாக்குதலில் ஈடுபட்டுள்ளதாக ஹமாஸ் தெரிவித்துள்ளது.

இந்நிலையில், போர் நிறுத்தம் நீட்டிப்பு சாத்திய்ப்படாமல் போனதற்கு இஸ்ரேல் தான் காரணம் என்று ஹமாஸ் தெரிவித்துள்ளது.

பிணைக் கைதிகளில் மேலும் சிலரை விடுவிப்பதாகவும், காசாவில் இறந்துபோன இஸ்ரேலியர்களின் உடல்களை ஒப்படைக்கவும் தாங்கள் முன்வந்தும் இஸ்ரேல் அதனை ஏற்றுக் கொள்ளவில்லை.

வயதானவர்களையும், போரில் இறந்த பிணைக் கைதிகளின் உடல்களையும் விடுவிக்கிறோம் என்றோம்.

இஸ்ரேல் தாக்குதலில் கொல்லப்பட்ட இஸ்ரேலிய பிணைக்கைதி யார்டன் பிபாஸின் மனைவி, இரு சிறு குழந்தைகளின் சடலங்களையும், பிபாஸையும் விடுவிக்கிறோம் என்றும் கூறினோம்.

ஆனால் அவர்கள் திடீரென தாக்குதலைத் தொடங்கிவிட்டனர் என்று ஹமாஸ் அறிக்கை மூலம் தெரிவித்துள்ளது.

ஆனால் ஹமாஸ் தாக்குதல்களால்தான் போர் நிறுத்த நீட்டிப்பு தடைபட்டுள்ளதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது. துபாயில் COP28 மாநாட்டுக்கு வந்திருந்த அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ஆண்டனி பிளின்கன் கூறுகையில், ”வியாழக்கிழமை ஜெருசலேமில் ஒரு பேருந்து நிலையத்தில் நடந்த துப்பாக்கிச் சூட்டால் தான் போர் நிறுத்த நீட்டிப்பு தடைபட்டுள்ளது.

அந்த துப்பாக்கிச் சூட்டில் 3 பேர் கொல்லப்பட்டனர். 8 பேர் காயமடைந்தனர். இந்தத் தாக்குதலுக்கு ஹமாஸ் பொறுப்பேற்றது.

வெள்ளிக்கிழமை இஸ்ரேல் எல்லையோர பகுதிகளைக் குறிவைத்து ஹமாஸ் 50 ராக்கெட்டுகளை ஏவியது. இதனால் தான் போர் நிறுத்த நீட்டிப்பு தடைபட்டது” என்று தெரிவித்தார்.

கடந்த மாதம் 7-ம் தேதி இஸ்ரேல் மீது ஹமாஸ் நடத்திய தாக்குதலை அடுத்து இரு தரப்புக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இதில், இஸ்ரேல் தரப்பில் 1,200 பேர் உயிரிழந்துள்ளனர்.

200-க்கும் மேற்பட்டோர் பிணைக் கைதிகளாக காசாவில் இருந்தனர். இஸ்ரேல் நடத்திய பதில் தாக்குதலில் 15,000-க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டுள்ளனர்.

கடந்த சில வாரங்களாக தொடர்ந்து நடந்து வந்த போர், கடந்த மாதம் 24-ம் தேதி தற்காலிகமாக நிறுத்தப்பட்டது. கத்தார், எகிப்து, அமெரிக்கா ஆகிய நாடுகளின் தொடர் முயற்சி காரணமாக ஒரு வார காலத்துக்கு போர் நிறுத்தம் மேற்கொள்ள இஸ்ரேல் ஒப்புக்கொண்டது.

இந்த ஒரு வார காலத்தில், இஸ்ரேல் தரப்பில் இருந்து கைதிகள் சிலர் விடுவிக்கப்பட, பதிலுக்கு ஹமாஸ் தன்னிடம் இருந்த பிணையக் கைதிகளில் சிலரை விடுவித்தது.

இந்நிலையில் கடந்த (வெள்ளிக்கிழமை) மீண்டும் தாக்குதல் தொடங்கியது.

தலைப்புச்செய்திகள்