Sunday, 12th May 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

சிப்காட் தொழிற்பேட்டை அமைக்க  நிலம் தரமாட்டோம் மாவட்ட ஆட்சியரிடம் விவசாயிகள் பிரமாண பத்திரம் தாக்கல்

டிசம்பர் 05, 2023 03:57

நாமக்கல்: நாமக்கல் மாவட்டம் மோகனூர், தாலுக்கா வளையப்பட்டி பகுதியில் விவசாயிகள் மற்றும் பொதுமக்களை பாதிக்கும் வகையில், மாநில அரசு, சிப்காட் தொழிற்பேட்டை  அமைக்கக் கூடாது என்பதை வலியுறுத்தி, அப்பகுதியை சேர்ந்த சுமார் 220  விவசாயிகள், மாவட்ட கலெக்டரை சந்தித்து, சிப்காட் அமைக்க நிலம் தர மாட்டோம் எனக் கூறி, பிரமாண பத்திரங்களை அளித்தனர்.

வளையப்பட்டி அருகே 820 ஏக்கர் பரப்பளவில் பகுதியில் சிப்காட் தொழிற்பேட்டை அமைக்க தமிழ்நாடு அரசு நிலம் தேர்வு செய்து வருகிறது.

இந்த  நிலையில் அப்பகுதியில் சிப்காட் அமைக்க கூடாது என்பதை வலியுறுத்தி ஏராளமான விவசாயிகள் பல கட்ட போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.

இதன் ஒரு பகுதியாக, விவசாய முன்னேற்ற கழக நிறுவனர் தலைவர் செல்ல. ராசாமணி தலைமையில் வளையப்பட்டி சுற்றுவட்டார பகுதியில் சிப்காட் அமைப்பதாக கூறப்படும் பகுதியைச் சேர்ந்த 200-க்கும் மேற்பட்ட விவசாயிகள், தங்கள் நிலங்களில் சிப்காட் தொழிற்பேட்டை அமைக்க கூடாது.

அதற்கு நிலங்களை தரமாட்டோம் எனக் கூறியும் தங்கள் நிலைப்பாட்டை தெரிவித்து பிரமாண பத்திரங்களை நாமக்கல் மாவட்ட கலெக்டர் உமாவை நேரில் சந்தித்து தனித்தனியாக, பிரமாண பத்திரங்களை  தாக்கல் செய்தனர். 

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய விவசாய முன்னேற்ற கழக தலைவர் செல்ல. ராசாமணி கூறியதாவது: வளையப்பட்டி பகுதியில் சிப்காட்  தொழிற்பேட்டை அமைப்பதாக கூறப்படும் இடத்தைச் சேர்ந்த விவசாயிகள் தங்கள் நிலைப்பாட்டை தெரிவித்து சிப்காட் அமைக்க கூடாது என்பதை வலியுறுத்தி பிரமாண பத்திரங்களை மாவட்ட கலெக்டரிடம் தாக்கல் செய்துள்ளோம்.

இந்த பத்திரத்தில் சம்மந்தப்பட்ட நிலத்தின் உரிமையாளர்கள், தங்கள் நிலத்தின் சர்வே நம்பர் உள்ளிட்ட விவரங்களை தெரிவித்துள்ளனர்.

ஏற்கனவே, தமிழ்நாட்டில் சிப்காட் அமைந்துள்ள பகுதிகளில் நிலத்தடி நீர் மாசுபட்டு விவசாய நிலங்கள் பாழடைந்துவிட்டன. விவசாய தொழில் செய்ய முடியவில்லை. அதேபோல நிலத்தடி நீர்மட்டம் பாதிக்கப்பட்டு பல்வேறு நோய்களுக்கு அப்பகுதி மக்கள் ஆளாகி வருகின்றனர். 

எனவே இதை எல்லாம் கருத்தில் கொண்டு, நாமக்கல் வளையப்ட்டி பகுதியில் சிப்காட் அமைக்க கூடாது. மக்களை பாதிக்கும் எந்த ஒரு திட்டத்தையும் மாநில அரசு செயல்படுத்தாது என உறுதி அளித்திருந்த நிலையில் அதனை மீறி சிப்காட் அமைக்க முற்படுவது ஏற்புடையது அல்ல. எனவே தமிழ்நாடு முதலமைச்சர் விவசாயிகளின் பல கட்ட போராட்டங்களை கருத்தில் கொண்டு நாமக்கல் வளையப்பட்டி பகுதியில் சிப்காட் அமைக்க கூடாது என்றும் விமுக நிறுவனர் செல்ல. ராசா மணி தெரிவித்தார்.

இந்த பேட்டியின் போது, விவசாய முன்னேற்ற கழக பொதுச்செயலாளர் பாலசுப்பிரமணியன்,  கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி ஒருங்கிணைந்த மாவட்ட  விவசாய அணி அமைப்பாளர் ரவிச்சந்திரன் மற்றும் வளையப்பட்டி சுற்றுவட்டார விவசாயிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

தலைப்புச்செய்திகள்