Saturday, 11th May 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

41 பேரும் மீட்கப்படுவது எப்படி?  என்டிஆர்எஃப் விவரிப்பு

நவம்பர் 23, 2023 11:07

டேராடூன்: உத்தராகண்டில் இடிந்து விழுந்த சுரங்கப் பாதையில் சிக்கியுள்ள 41 தொழிலாளர்களும் சக்கர ஸ்டிரெச்சர்களில் (wheeled stretchers) ஒரு பெரிய குழாய் மூலம் ஒவ்வொருவராக வெளியே இழுக்கப்படுவார்கள் என்று தேசிய பேரிடர் மீட்புப் படை (NDRF) விவரித்துள்ளது.

சுரங்கத்தினுள் சிக்கியுள்ள தொழிலாளர்களை மீட்கும் பணியானது கிட்டத்தட்ட இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. சில்க்யாரா சுரங்கப் பாதையில் சிக்கிய 41 தொழிலாளர்களை மீட்க சுரங்கப் பாதைக்குள் குழாய் பதிக்கப்பட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

41 தொழிலாளர்களை சக்கர ஸ்டிரெச்சர்களில் ஒரு பெரிய குழாய் மூலம் ஒவ்வொருவராக வெளியே இழுக்கப்படுவார்கள். என்.டி.ஆர்.எஃப் பணியாளர்கள் குழாய் வழியாக உள்ளே நுழைந்து, அவர்கள் தொழிலாளர்களை நெருங்கியதும், ஸ்ட்ரெச்சர்களைப் பயன்படுத்தி ஒவ்வொருவராக வெளியே அனுப்புவார்கள் என்று தேசிய பேரிடர் மீட்புப் படை (NDRF) தெரிவித்துள்ளது.

இதனிடையே, மத்திய அமைச்சர் வி.கே/சிங், சில மூத்த அதிகாரிகளுடன் சுரங்கப் பாதை இடிந்து விழுந்த இடத்துக்கு வந்து நிலைமையை ஆய்வு செய்தார்.

மீட்பு பணிகள் குறித்து கார்வால் ரேஞ் ஐஜி கே.எஸ்.நக்ன்யால் கூறும்போது, “ மீட்புப் படைமுன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. விரைவில் தொழிலாளர்கள் மீட்கப்படுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இது இயந்திர வேலை என்பதால் குறிப்பிட்ட நேரத்தை முடிவு செய்து, கூற முடியாது. மீட்பு பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இரவிலும் பணி தொடரலாம்” என்றார்.

மேலும், 41 தொழிலாளர்களும் மீட்கப்பட்ட பின்னர் அவர்களுக்கு உடனடியாக மருத்துவ உதவிகள் வழங்க அனைத்து ஏற்பாடுகளும் தயார் நிலையில் உள்ளன. 41 ஆம்புலன்ஸ்கள் மற்றும் மருத்துவர்கள் குழு தயார் நிலையில் உள்ளது.

தொழிலாளர்களுக்கு சிகிச்சை அளிக்க மருத்துவமனையும் தயார் நிலையில் உள்ளளது என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

உத்தராகண்ட் முதல்வர் புஷ்கர் சிங் தாமி, சுரங்கப் பாதையில் சிக்கியுள்ள தொழிலாளர்களான கப்பர் சிங் நேகி மற்றும் சபா அகமது ஆகியோரிடம் பேசினார். அவர்களின் நலம் குறித்து விசாரித்தார்.

ரிஷிகேஷ் எய்ம்ஸ் மருத்துவமனை நிர்வாகம் இது குறித்து கூறும்போது, "தேவைப்பட்டால் மீட்கப்பட்டவர்களை ரிஷிகேஷ் எய்ம்ஸ் மருத்துவமனைக்கு கொண்டுவரும் திட்டம் உள்ளது. அரசு உத்தரகாசியில் உள்ள மாவட்ட மருத்துவமனையில் முதலுதவி அளிக்க ஏற்பாடு செய்துள்ளது" என தெரிவித்துள்ளது.

சுரங்கப் பாதையில் சிக்கியுள்ள தொழிலாளர்களின் பாதுகாப்புக்காக பிரியங்கா காந்தி பிரார்த்தனை செய்தார்.

இது குறித்து தனது எக்ஸ் தளத்தில், "உத்தர்காஷியின் சில்க்யாராவில் உள்ள சுரங்கப் பாதையில் 41 தொழிலாளர்கள் 12 நாட்களாக சிக்கியுள்ளனர். அவர்களைக் காப்பாற்றும் நடவடிக்கை வெற்றியை நோக்கி நகர்கிறது, அவர்கள் அனைவரும் விரைவில் பத்திரமாக வெளியே வருவார்கள் என்ற நம்பிக்கை உள்ளது.

உழைக்கும் சகோதரர்கள் அனைவரும் விரைவில் வெளியே வந்து நலமுடன் வீடுகளை சென்றடைய இறைவனை பிரார்த்திக்கிறோம்.

ஒட்டுமொத்த தேசத்தின் பிரார்த்தனைகள் அவர்களுடன் உள்ளன. தேசத்துக்காக இரவு பகலாக தங்கள் உயிரைப் பணயம் வைத்து சேவை செய்யும் அவர்களுக்கு அரசாங்கம் உரிய இழப்பீடு மற்றும் உதவிகளை வழங்குமாறு கேட்டுக்கொள்கிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.

உத்தராகண்ட் மாநிலம் சார்தாம் நெடுஞ்சாலை திட்டத்தின் ஒரு பகுதியாக சில்க்யாரா-பர்கோட் இடையே 4.5 கி.மீ. தொலைவுக்கு சுரங்கப்பாதை அமைக்கப்பட்டு வருகிறது. கடந்த 12-ம் தேதி இந்த சுரங்கப் பாதையில் மண் சரிந்தது.

இதன்காரணமாக சுரங்கப் பாதைக்குள் 41 தொழிலாளர்கள் சிக்கி உள்ளனர். அவர்களை மீட்கும் பணிகள் கடந்த 12 நாட்களாக பல்வேறு சிக்கல்களுக்கு நடுவில் மிகவும் தீவிரமாக நடந்து வருகிறது.

சுரங்கப் பாதைக்குள் சிக்கி இருக்கும் தொழிலாளர்களை மீட்கும் பணியில் சுரங்கத்துக்குள் 45 மீட்டர் தூரம் தோண்டிய நிலையில் மீட்புக் குழுவினர் பல்வேறு தடைகளைச் சந்தித்தனர்.

புதன்கிழமை அமெக்காவின் ஆஜர் எந்திரம் ஒரு இரும்புக் கம்பியில் தட்டி நின்றது. பின்னர் அந்தக் கம்பி அகற்றப்பட்டது. அதற்கு அடுத்த நாள் துளையிடும் எந்திரத்தின் பாதையில் ஒரு இரும்பு ராடு தடையை ஏற்படுத்தியது. அதுவும் அகற்றப்பட்டு மீட்புப் பணிகள் தொடர்ந்து வருகிறது.

தலைப்புச்செய்திகள்