Monday, 13th May 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

அதிநவீன பால் பதப்படுத்தும் மையம் ஜனவரியில் துவக்கம்: கே.ஆர்.என்.ராஜேஸ்குமார் எம்.பி. தகவல்

நவம்பர் 21, 2023 11:56

ராசிபுரம்: மத்திய அரசின் உணவு பதப்படுத்துதல் துறை அமைச்சகம்,  மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் ஒன்றியம் ஆகியவற்றின் சார்பில், நாமக்கல் மாவட்ட பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு ஒன்றியத்திற்கான அதிநவீன பால் பதப்படுத்தும் ஆலை அமைக்கும் பணிகள், விரைவில் தொடங்கும் என்றும் இப்பணிகளை தேசிய பால்வள வாரியம் மேற்கொள்ளும் என்றும் மாநில வனத்துறை அமைச்சர் டாக்டர் மா.மதிவேந்தன் முன்னிலையில்  மாநிலங்களவை உறுப்பினர்  கே. ஆர். என். இராஜேஸ்குமார் அளித்த பேட்டியின் போது தெரிவித்துள்ளளார்.

நாமக்கல் மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் ஒன்றியத்திற்குட்பட்ட ஆவின் அலுவலகத்தில் மாநில வனத்துறை அமைச்சர் மா.மதிவேந்தன்,  நாமக்கல் மாவட்ட ஆட்சியர் டாக்டர் ச.உமா, முன்னிலையில் பாராளுமன்ற மாநிலங்களவை உறுப்பினர் கே. ஆர்.என்.இராஜேஸ்குமார் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.  

முன்னதாக  நாமக்கல் கூட்டுறவு பால் உற்பத்தி ஒன்றியத்திற்கு அதிநவீன பால் பதப்படுத்தும் மையம் அமைப்பதற்கான அரசாணை நகல்களை அமைச்சர் மா.மதிவேந்தன் மற்றும் பாராளுமன்ற  உறுப்பினர் கே.ஆர்.என்.இராஜேஸ்குமார் ஆகியோர் பால் உற்பத்தியாளர்களிடம்  வழங்கினர்.

அப்போது செய்தியாளர்களுக்கு பேட்டி  அளித்த  மாநிலங்களவை உறுப்பினரும், நாமக்கல் கிழக்கு மாவட்ட திமுக செயலாளருமான  கே. ஆர். என். இராஜேஸ்குமார் கூறியதாவது:-

தமிழகத்தில் அதிக அளவில் பால் உற்பத்தி செய்யப்படும் ஒன்றியங்களில் நாமக்கல் மாவட்டம் ஒன்றாக உள்ளது. மாவட்ட பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு ஒன்றியமானது, ஏற்கனவே சேலம் மாவட்டத்தில் இருந்து பிரிக்கப்பட்டு தற்போது நாமக்கல்லில் இயங்குகிறது.

தற்போது, நாமக்கல் மாவட்டத்தில் தினந்தோறும் சேகரிக்கப்படும் சுமார் 1.70 லட்சம் லிட்டர் பால், சேலம் ஆவினுக்கு கொண்டு செல்லப்பட்டு, அங்கு பதப்படுத்தி, பேக்கிங் செய்து, உப பொருள் தயாரிக்கப்பட்டு விற்பனைக்கு அனுப்பப்பட்டு வருகிறது.

இதனால் நாமக்கல் ஒன்றியத்திற்கு லிட்டர் ஒன்றுக்கு 3 ரூபாய் 80  காசுகள் வரை கூடுதல் செலவாகிறது.  எனவே, நாமக்கல் மாவட்ட பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு ஒன்றியத்திற்கு என தனியாக பால் பதப்படுத்தும் ஆலை அமைக்க வேண்டும் என பால் உற்பத்தியாளர்கள், மக்கள் பிரதிநிதிகள் உள்ளிட்டோர் தொடர்ந்து அரசுக்கு கோரிக்கை வைத்தனர். 

இதனடிப்படையில் நாமக்கல்லில் நவீன பால் பதப்படுத்தும் ஆலை ரூ. 90 கோடி  மதிப்பீட்டில் அமைப்பதற்கு தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

இதற்கு அனைவர் சார்பிலும் தமிழ்நாடு அரசுக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம். 

இந்த நவீன பால் பதப்படுத்தும் ஆலை நாமக்கல்லில் அமையும்போது இங்கேயே தினந்தோறும் சுமார் 2 இலட்சம் லிட்டர் பால் கொள்முதல் செய்து,  அதனை பதப்படுத்தி, பேக்கிங் செய்து, உபபொருட்கள் தயாரித்து, விற்பனைக்கு அனுப்ப முடியும்.  

இதனால், லாபத்தை கொண்டு, நாமக்கல் மாவட்ட பால் உற்பத்தியாளர்களுக்கும் விவசாயிகளுக்கும் ஊக்கத்தொகை வழங்க முடியும். 

பாராளுமன்ற மாநிலங்களவையில் சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானத்தில் இதுகுறித்து கோரிக்கை வைத்ததன் அடிப்படையில், மத்திய அரசின் உணவு பதப்படுத்துதல் அமைச்சகம், நாமக்கல்லில் புதிதாக அமைய உள்ள அதிநவீன பால் பதப்படுத்தும் ஆலைக்கு ரூ.8 கோடி மானிய உதவியை அளித்துள்ளது. 

இந்த அதிநவீன பால் பதப்படுத்தும் ஆலையானது, நாமக்கல் மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் ஒன்றிய உறுப்பினர்கள், தமிழ்நாடு அரசு,  மத்திய உணவு பதப்படுத்தும் அமைச்சகம் ஆகியவற்றின் சார்பில் அமைய உள்ளது.

மத்திய, மாநில அரசுகளின் நிதி உதவியோடு இந்த அதிநவீன பால் பதப்படுத்தும் ஆலை வரும் ஜனவரி மாதத்தில் கட்டுமான பணிகள் தொடங்கும். 

இப்பணிகளை தேசிய பால்வள வாரியம் மேற்கொள்ளும் என்றும்   மாநிலங்களவை உறுப்பினரும், நாமக்கல் கிழக்கு மாவட்ட திமுக செயலாளருமான கே.ஆர்.என். இராஜேஸ்குமார் செய்தியாளர்களிடம் தெரிவித்தனர். 

இந்த செய்தியாளர் சந்திப்பின்போது நாமக்கல் மாவட்ட ஆட்சித் தலைவர்  மருத்துவர். ச. உமா, சட்டமன்ற உறுப்பினர்கள் பெ. இராமலிங்கம், கு.பொன்னுசாமி, மாவட்ட பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு ஒன்றியத்தின் ஆவின் பொதுமேலாளர் ஆர்.சண்முகம், பால் உற்பத்தியாளர்கள், ஆவின் அலுவலர்கள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

தலைப்புச்செய்திகள்