Monday, 13th May 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

நாம் உழைத்தால் மட்டுமே உயர முடியும்: லெஜெண்ட் சரவணன்

நவம்பர் 20, 2023 01:46

சென்னை: காக்கா, கழுகு கதைகளால் யாருக்கும் எந்த பிரயோஜனமும் இல்லை. நாம் உழைத்தால் மட்டுமே உயர முடியும் என்று நடிகர் லெஜெண்ட் சரவணன் பேசியுள்ளார்.

தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு சார்பில் 5 அடுக்குகள் கொண்ட மாநில தலைமை அலுவலக கட்டிடம் சென்னை கே.கே.நகரில் கட்டப்பட்டுள்ளது.

அதன் திறப்பு விழா நேற்று (ஞாயிறு) நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் தெலங்கானா ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன், லெஜண்ட் சரவணன், தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு மாநிலத் தலைவர் ஏ.எம்.விக்கிரமராஜா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

இதில் நடிகர் லெஜெண்ட் சரவணன் பேசியதாவது: “எந்தவொரு நாட்டில் வியாபாரத் துறை செழிப்பாக உள்ளதோ அந்த நாட்டில்தான் பொருளாதாரமும் சிறப்பாக இருக்கும்.

ஏனெனில் அரசுக்கும் மக்களுக்கும் இடையிலான பொருளாதார சுழற்சியில் இந்த வியாபாரத் துறை மிகமுக்கிய பங்காற்றி வருகிறது. நம் நாட்டில் வியாபாரத் துறை செழிப்பாக இருந்தால், நம் நாட்டின் பொருளாதாரமும் பலமாக இருக்கும்.

இதற்கு நாம் அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும். ஒரு வெற்றிகரமான வியாபாரத்துக்கு அதில் இருக்கும் உண்மைத் தன்மையும், கடின உழைப்பும் தான் முக்கிய காரணமாக இருக்கும்.

இன்று மக்களின் பொழுதுபோக்கு அம்சங்களில் சினிமா மிக சிறப்பாக் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது.

ஆனால் அதில், காக்கா, கதைகள், இவருக்கு அந்த பட்டம், அவருக்கு இந்த பட்டம் இதில் எல்லாம் யாருக்கும் எந்த பிரயோஜனமும் கிடையாது. நாம் உழைத்தால் மட்டுமே உயரமுடியும். நாம் உயர்ந்தால் நம் நாடும் உயரும்.” இவ்வாறு லெஜண்ட் சரவணன் பேசினார்.

ஜெயிலர்’ படத்தின் ஆடியோ விழாவில் ரஜினி கூறிய காக்கா, கழுகு கதையால் விஜய் ரசிகர்களுக்கும், ரஜினி ரசிகர்களுக்கு சமூக வலைதளங்களில் மோதல் ஏற்பட்டது.

இதையடுத்து ‘லியோ’ படத்தில் வெற்றிவிழாவிலும் காக்கா, கழுகு என்ற வார்த்தையை விஜய் பயன்படுத்தியது விவாதமானது. இந்த சூழலில், இந்த சம்பவங்களைத்தான் லெஜெண்ட் மறைமுகமாக குறிப்பிடுவதாக நெட்டிசன்கள் பதிவிட்டு வருகின்றனர்.

தலைப்புச்செய்திகள்