Sunday, 12th May 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

மன்சூர் அலிகான் மீது நடவடிக்கை எடுக்குமாறு தமிழக டிஜிபிக்கு தேசிய மகளிர் ஆணையம் உத்தரவு

நவம்பர் 20, 2023 01:42

சென்னை: நடிகைகள் த்ரிஷா, குஷ்பு உள்ளிட்டோர் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசிய மன்சூர் அலிகான் மீது நடவடிக்கை எடுக்குமாறு தமிழக டிஜிபிக்கு தேசிய மகளிர் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

சமீபத்தில் வெளியான வீடியோ ஒன்றில் பத்திரிகையாளரின் கேள்விக்கு பதிலளித்த மன்சூர் அலிக்கான்  நடிகை த்ரிஷா குறித்து மிகவும் அருவருத்தக்க வகையில் பேசியிருந்தார்.

இந்தப் பேச்சுக்கு கடும் எதிர்ப்பு கிளம்பியது. மன்சூர் அலிகானின் இந்தப் பேச்சு குறித்து தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள த்ரிஷா, "இவரை போன்றவர்களால் தான் மனித குலத்துக்கே அவப்பெயர் என்றும், இனி தனது திரை வாழ்க்கையில் அவருடன் இணைந்து நடிக்க மாட்டேன்” என்றும் கூறியிருந்தார்.

த்ரிஷாவைத் தொடர்ந்து இயக்குநர் லோகேஷ், நடிகை மாளவிகா மோகனன், கார்த்திக் சுப்பராஜ், குஷ்பு உள்ளிட்டோர் மன்சூர் அலிகானுக்கு கண்டனம் தெரிவித்துள்ளனர்.

இந்த நிலையில், மன்சூர் அலிகான் மீது நடவடிக்கை எடுக்குமாறு தமிழக டிஜிபிக்கு தேசிய மகளிர் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

இது குறித்து தேசிய மகளிர் ஆணையத்தில் அதிகாரபூர்வ எக்ஸ் பக்கத்தில் கூறப்பட்டிருப்பதாவது: நடிகை த்ரிஷா குறித்து நடிகர் மன்சூர் அலிகான் பேசியது மிகுந்த கவலை அளிப்பதாக உள்ளது. இந்த விவகாரத்தில் நாங்கள் தாமாக முன்வந்து, ஐபிசி பிரிவு 509 பி மற்றும் பிற சட்டங்களின் அடிப்படையில் நடவடிக்கை எடுக்குமாறு டிஜிபிக்கு உத்தரவிடுகிறோம்.

இதுபோன்ற கருத்துகள் பெண்களுக்கு எதிரான வன்முறையை சாதாரணமாக கருதத் தூண்டுகிறது. இது வன்மையாக கண்டிக்கப் படவேண்டிய ஒன்று”. இவ்வாறு அப்பதிவில் கூறப்பட்டுள்ளது.

முன்னதாக இந்த விவகாரம் குறித்து ட்வீட் செய்திருந்த நடிகையும் தேசிய மகளிர் ஆணைய உறுப்பினருமான குஷ்பு, தேசிய மகளிர் ஆணையத்தின் மேலதிகாரிகளுக்கு இந்த விஷயத்தை கொண்டு சென்றுவிட்டதாகவும், இது குறித்து மன்சூர் அலிகான் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறியிருந்தார்.

தலைப்புச்செய்திகள்