Friday, 10th May 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

காசா பகுதி மக்களுக்கு, இந்தியா நிவாரணயுதவி

நவம்பர் 20, 2023 12:52

காஜியாபாத்: இஸ்ரேல் போரால் பாதிக்கப்பட்ட காசா பகுதி மக்களுக்கு உதவி, விமானப் படையின் சி-17 ரக சரக்கு விமானத்தில் 2-வது முறையாக இந்தியா நிவாரண பொருட்களை அனுப்பியது.

இஸ்ரேல்-ஹமாஸ் போரால் காசா பகுதியில் பாலஸ்தீன மக்கள் வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

காசாவின் தெற்கு பகுதியில் உள்ள நிவாரண முகாம்களில் தங்கியிருக்கும் பாலஸ்தீன மக்கள் கடந்த ஒரு மாதத்துக்கும் மேலாக மின்சாரம், தண்ணீர், எரிபொருள் இன்றி தவிக்கின்றனர்.

இஸ்ரேல் குண்டு வீச்சு காரணமாக ஏராளமானோர், பார்வை மற்றும் கேட்கும் திறன் இழந்து தவிக்கின்றனர். படு காயங்களுடன் மருத்துவ வசதியின்றி பலர் அவதிப்படு கின்றனர்.கடும் குளிர் வாட்டி வதைக்கிறது.

மின்சாரம், எரிபொருள் இல்லாததால் கடல்நீரை சுத்திகரிக்கும் ஆலைகள் எல்லாம் இயங்கவில்லை. உப்புத் தண்ணீர், மற்றும் அசுத்தமான நீரை பருகுவதால், பல குழந்தைகள் நோய்த் தொற்றுக்கு ஆளாகியுள்ளனர்.

நாள் ஒன்றுக்கு, ஒரு வேளை உணவுதான் கிடைக்கிறது. நிவாரண முகாம்களில் வழங்கப்படும் பேரீச்சம்பழம், பிஸ்கட், பாஸ்தா ஆகியவற்றை சாப்பிட்டு உயிர்வாழ்கின்றனர்.

தண்ணீர் தட்டுப்பாடு காரணமாக 15 நாட்களுக்கு ஒரு முறை குளிக்கின்றனர். குளிப்பதற்கு குறைவான தண்ணீர் கிடைப்பதால் பெண்கள் தங்கள் முடியை வெட்டிக் கொள்கின்றனர்.

காசா நிவாரண முகாம்களில் தங்கியுள்ள மக்களுக்கு, பல நாடுகள் நிவாண பொருட்களை அனுப்பி வருகின்றன.

இந்த பொருள்கள் எகிப்து நாட்டின் ரஃபா எல்லை வழியாக காசா பகுதிக்கு கொண்டு செல்லப் படுகிறது.

காசா பகுதி மக்களுக்கு உதவ இந்தியா ஏற்கனவே 38 டன் நிவாரண பொருட்களை விமானப்படையின் ஜம்போ விமானம் மூலம் அனுப்பியது.

இந்நிலையில் 2-வது முறையாக இந்தியா நேற்று 32 டன் நிவாரண பொருட்களையும், 6.5 டன் மருந்து பொருட்களையும் விமானப்படையின் சி-17 குளோப்மாஸ்டர் விமானத்தில் அனுப்பியது.

இந்த விமானம் எகிப்து நாட்டின் எல்-அரிஷ் விமான நிலையத்துக்கு சென்றது. அங்கிருந்து நிவாரண பொருட்கள் காசா பகுதிக்கு கொண்டு செல்லப்படும்.

இந்தியா அனுப்பியுள்ள நிவாரண பொருட்களில் வலி நிவாரண மாத்திரைகள், கூடாரங்கள், படுக்கை விரிப்புகள், தார்பாலின் ஷீட்டுகள், துப்புரவுக்கு தேவையான பொருட்கள், தண்ணீரை சுத்தப்படுத்தும் மாத்திரைகள், உயிர் காக்கும் மருந்துகள், அறுவை சிகிச்சை உபகரணங்கள் மற்றும் இதர தேவையான பொருட்கள் அனுப்பப்பட்டுள்ளன.

இது குறித்து வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் எக்ஸ் தளத்தில் விடுத்துள்ள செய்தியில், ‘‘ பாலஸ்தீன மக்களுக்கு இந்தியா தொடர்ந்து நிவாரண பொருட்களை மனிதாபிமான முறையில் அனுப்பும்’’ என தெரிவித்துள்ளார்.

வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் அரிந்தம் பாக்சி கூறுகையில், ‘‘பொது மக்களுக்கு ஏற்படும் பாதிப்பு தவிர்க்கப்பட வேண்டும், மனிதாபிமான சட்டங்கள் பின்பற்றப்பட வேண்டும், நிவாரண பொருட்கள் வழங்கும் முயற்சிகள் ஊக்குவிக்கப்பட வேண்டும் எனஇந்தியா எப்போதும் வலியுறுத்திவருகிறது’’ என்றார்.

இது குறித்து வாய்ஸ் ஆஃப் குளோபல் சவுத் உச்சி மாநாட்டில் கடந்த வெள்ளிக்கிழமை பேசிய பிரதமர் மோடி, ‘‘ உலகம் செழிப்புடன் இருக்க, அனைவருடனும், அனைவருக்குமான வளர்ச்சி முக்கியம்.

மேற்கு ஆசிய பகுதியில் புதிய சவால்கள் ஏற்பட்டு வருகின்றன. இஸ்ரேல் மீதான ஹமாஸ் தாக்குதலுக்கு இந்தியா கடந்த அக்டோபர்7-ம் தேதி கண்டனம் தெரிவித்தது.

அதேநேரத்தில் இஸ்ரேல்-ஹமாஸ் போரில் ஏற்பட்ட அப்பாவி மக்களின் உயிரிழப்புக்கும் இந்தியா கடும் கண்டனத்தை தெரிவித்தது.

பிரச்சினையை தீர்க்க கட்டுப்பாடுடன் செயல்பட்டு, பேச்சுவார்த்தை நடத்தும்படி இந்தியாவலியுறுத்துகிறது.

போரால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு மனிதாபிமான உதவியை இந்தியா அளித்து வருகிறது’’ என்றார்.

தலைப்புச்செய்திகள்