Saturday, 11th May 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

க்ருஹ லட்சுமி திட்டத்தில் சாமூண்டீஸ்வரி அம்மன்

நவம்பர் 19, 2023 06:03

பெங்களூரு: கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தலின்போது காங்கிரஸ் வெற்றி பெற்றால் க்ருஹ லட்சுமி திட்டத்தின் கீழ் குடும்ப தலைவிகளுக்கு மாதம் ரூ.2,000 உதவித் தொகை வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது.

தேர்தலில் காங்கிரஸ் வென்றதை தொடர்ந்து கடந்த 30-ம் தேதி குடும்ப தலைவிகளுக்கு மாதம் ரூ.2,000 வழங்கும் திட்டம் தொடங்கப்பட்டது.

இந்நிலையில் மைசூருவை சேர்ந்த காங்கிரஸ் எம்.எல்.சி.தினேஷ் கோலிகவுடா அண்மையில் கர்நாடக துணை முதல்வர் டி.கே.சிவகுமாரை சந்தித்து மனு ஒன்றை அளித்தார்.

அதில்,‘‘குடும்ப தலைவிகளுக்கு மாதந்தோறும் வழங்கப்படும் ரூ.2,000 உதவித் தொகையை பெண் தெய்வமான சாமுண்டீஸ்வரி அம்மனுக்கும் வழங்க வேண்டும். அவர் கர்நாடகாவில் உள்ள அனைத்து குடும்பங்களின் தலைவியாக இருக்கிறார். எனவே, அவரையும் க்ருஹ லட்சுமி திட்டத்தில் இணைத்துக் கொள்ள வேண்டும்'' என்று கோரிக்கை விடுத்தார்.

இதை ஏற்றுக் கொண்ட டி.கே.சிவகுமார், சாமுண்டீஸ்வரி அம்மனுக்கும் நிதி வழங்குமாறு அந்த திட்டத்தை செயல்படுத்தும் மகளிர் மற்றும் குழந்தைகள் நலத்துறை அமைச்சர் லட்சுமி ஹெம்பல்கருக்கு உத்தரவிட்டார். இதையடுத்து க்ருஹ லட்சுமி திட்டத்தில் சாமூண்டீஸ்வரி அம்மன் பெயரும் சேர்க்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து காங்கிரஸ் எம்எல்சி தினேஷ் கோலிகவுடா கூறுகையில், ‘‘எனது கோரிக்கையை ஏற்று சாமுண்டீஸ்வரி அம்மனுக்கு மகளிர் உதவித் தொகை வழங்க ஒப்புதல் அளித்த துணை முதல்வர் டி.கே.சிவகுமாருக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

இனி மாதந்தோறும் சாமுண்டீஸ்வரி அம்மன் கோயில் நிர்வாகத்தின் வங்கி கணக்கில் ரூ.2,000 வரவு வைக்கப்படும் என மகளிர் மற்றும் குழந்தைகள் நலத்துறை தெரிவித்துள்ளது’’ என்றார்.

தலைப்புச்செய்திகள்