Saturday, 11th May 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

மகளிர் உரிமைகள், மகளிர் மேம்பாடு பணிகள் ஆய்வுக் கூட்டம்   

நவம்பர் 11, 2023 10:11

நாமக்கல்: நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் மகளிர் உரிமைகள், மகளிர் மேம்பாடு பணிகள் குறித்து அனைத்து துறை அதிகாரிகளுடன் ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. 

மாவட்ட ஆட்சித்தலைவர் மருத்துவர் ச.உமா, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ்.ராஜேஸ்கண்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இக்கூட்டத்தில் தமிழ்நாடு மகளிர் ஆணையத் தலைவர் ஏ.எஸ்.குமாரி தலைமை தாங்கி, தெரிவித்ததாவது, பெண்கள், சிறுவர், சிறுமிகளுக்கு பாதுகாப்பு, சுகாதாரம், கல்வி, பாலியல் துன்புறுத்தலில் இருந்து பாதுகாத்தல் உட்பட பல்வேறு பாதுகாப்பு அம்சங்கள் குறித்து பல்வேறு நடவடிக்கைகள் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.

நாமக்கல் மாவட்டத்தில் பெண்கள் உதவி எண் 181 மூலம் வரும் அழைப்புகள் முறையாக பரிசீலனை செய்யப்பட்டு, முடிவு காணப்பட்டு வருகிறது. அதேபோல் சிறுவர், சிறுமிகளுக்கு ஏதேனும் பாலியல் தொந்தரவுகள் இருக்குமாயின் 1098 என்ற தொலைப்பேசியில் தொடர்பு கொண்டு புகார் தெரிவிக்கலாம்.

குழந்தை திருமணம், இளம் வயது கர்ப்பம் தடுப்பது குறித்து தொடர்பாக பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகளிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.

எந்த ஒரு சூழ்நிலையிலும் குழந்தைத் தொழிலாளர் முறை அனுமதிக்க கூடாது. குழந்தைகளை பணிக்கு அமர்த்தும் நிறுவனங்கள் மீது சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

மேலும், குழந்தைகள் பாதுகாப்பு, வரதட்சணை புகார்கள், ஒருங்கிணைந்த சேவை மையங்கள், குழந்தைகள் தொழிலாளர் முறை ஒழிப்பு குறித்து அதிகளவில் விழிப்புணர்வு ஏற்படுத்தும் பணிகளை மாவட்ட சமூக நலத்துறை மேற்கொள்ள வேண்டும்.

மகளிர் திட்டம் மூலம் மகளிர் சுயஉதவிக்குழுக்களுக்கு அதிக அளவில் கடனுதவி வழங்கிட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும். மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் அவர்கள் தொடர்ந்து விழிப்புணர்வு பணிகளை மேற்கொள்ள வேண்டும்.

போதை தடுப்பு குறித்து பள்ளிகளில் தொடர் ஆய்வுகளை மேற்கொள்ள வேண்டும்.

அனைத்து காவல் நிலையங்களிலும் கண்காணிப்பு கேமாரக்கள் பொருத்தப்பட வேண்டும். கல்வி தான் ஒரு பெண்ணுக்கு அடிப்படை தேவை. பெண்கள் அனைவருக்கும் கல்வி கிடைப்பதை உறுதி செய்திட அனைத்து அரசுத் துறை அலுவலர்களும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் என தமிழ்நாடு மகளிர் ஆணையத்தலைவர் ஏ.எஸ்.குமாரி தெரிவித்தார்.

இக்கூட்டத்தில் தமிழ்நாடு மகளிர் ஆணையத்தில் பெறப்பட்டுள்ள மனுக்கள் குறித்தும் பெண்கள், குழந்தைகள் மற்றும் மூத்த குடிமக்களின் பாதுகாப்பு, மேம்பாட்டு வழிமுறைகள் மற்றும் விழிப்புணர்வு குறித்தும், அவற்றினை பொதுமக்களிடம் எடுத்து செல்வதற்கான விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட வேண்டியவை குறித்தும், உள்ளூர் புகார் குழு (Local Complaints Committee) அமைத்து பணிபுரியும் இடத்தில் பெண்களுக்கெதிரான பாலியல் துன்புறுத்தல் தடை சட்டம் குறித்த விவதங்கள் மற்றும் விழிப்புணர்வுகள் நடத்தப்பட வேண்டுமெனவும், ஒவ்வொரு அலுவலகத்திலும் உள்ளக புகார் குழுக்கள் (Internal Complants Committee) அமைத்து பெண்களுக்கெதிராக நடக்கும் பாலியல் துன்புறுத்தல்கள் கலையப்பட நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டுமெனவும் விவாதிக்கப்பட்டன.

இக்கூட்டத்தில், மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளர் ஏ.கனகேஸ்வரி, மாவட்ட சமூக நல அலுவலர் (பொறுப்பு) பிரபா, இணை இயக்குநர் (மருத்துவபணிகள்) மரு.ராஜ்மோகன் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் சதிஸ்குமார், உதவி ஆணையர் (தொழிலாளர் நலன்) எல்.திருநந்தன், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) த.மாதவன், மாவட்ட ஆட்சியரின் கூடுதல் நேர்முக உதவியாளர் (நிலம்) ப.சந்திரசேகர் மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

தலைப்புச்செய்திகள்