Saturday, 11th May 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

டெல்லியில் காற்று மாசை கட்டுப்படுத்த அனைவரும் ஒத்துழைப்பு தர வேண்டும்: அமைச்சர் வேண்டுகோள்

நவம்பர் 09, 2023 08:00

புதுடெல்லி: டெல்லியில் காற்று மாசு கடுமையாக அதிகரித்துள்ளது. பொதுவாக காற்றில் மாசு 201-300 வரை இருந்தால் அது மோசமான, சுவாசிக்க ஏற்றதக்க காற்று அல்ல. ஆனால் டெல்லியில் கடந்த வாரம் முழுவதும் 400ஐ தாண்டி காற்று மாசு பதிவாகியிருந்தது. 

இதனால் மருத்துவமனையை நோக்கி படையெடுப்போரின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது. நிலைமையை சமாளிக்க லோதி சாலை பகுதியில் டெல்லி மாநகராட்சி சார்பில் தண்ணீர் தெளிக்கப்பட்டு வருகிறது.

மாசு அதிகரிக்காமல் இருக்க பிஎஸ் 3 மற்றும் பிஎஸ் 4 வாகனங்கள் டெல்லிக்குள் இயக்க அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. சிஎன்ஜி எனப்படும் கேஸ் மூலமாக இயங்கும் வாகனங்களுக்கு மட்டுமே அனுமதியளிக்கப்பட்டிருக்கிறது. 

அதேபோல சாலையில் செல்லும் தனியார் வாகனங்களின் எண்ணிக்கையை 50 சதவீதம் குறைக்கவும் திட்டமிடப்பட்டிருக்கிறது. இதுதொடர்பாக முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையில் நடந்த உயர்மட்ட ஆலோசனை கூட்டத்தில், பதிவெண் அடிப்படையில் ஒற்றைப்படை, இரட்டைப்படை என வாகனங்கள் இயங்க புதிய கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. இந்த விதிகளை மீறும் வாகன உரிமையாளர்களுக்கு ரூ.10,000 அபராதம் விதிக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.

ஆனால் இது தொடர்பான வழக்கில், இந்த ஒற்றைப்படை, இரட்டைப்படை வாகன இயக்கம் என்பது காற்று மாசை குறைக்கும் என்பதற்கு எந்தவித அறிவியல் ஆதாரமும் இல்லை என்று உச்சநீதிமன்றம் கூறியிருந்தது. அதேபோல டெல்லியை சுற்றியுள்ள மாநிலங்களான ராஜஸ்தான், பஞ்சாப் மற்றும் உத்தரபிரதேசங்களில் பயிர் கழிவுகளை எரிக்க தடையும் விதிக்கப்பட்டது. 

இதன் காரணமாக கடந்த ஒரு வாரமாக தர குறியீட்டில் 400ஐ தாண்டி பதிவாகியிருந்த காற்று மாசு நேற்று 356 என குறைந்திருக்கிறது. இருப்பினும் 50-100 என இருந்தால் மட்டுமே அது சுவாசிக்க ஏற்ற காற்று என ஆய்வாளர்கள் கூறியுள்ளனர்.

இந்நிலையில், காற்று மாசை கட்டுப்படுத்துவது தொடர்பான உச்சநீதிமன்ற வழிகாட்டுதல்களை பின்பற்றுவது குறித்து, சம்பந்தப்பட்ட துறைகளின் அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளுடன், டெல்லி சுற்றுச்சூழல் துறை அமைச்சர் கோபால் ராய் ஆலோசனை நடத்தினார். 

பின்னர் அவர் நிருபர்களிடம் கூறுகையில், ‘காற்றின் தரம் தொடர்ந்து மோசமடைந்து வருவதால் பிற மாநிலங்களை சேர்ந்த ஆப் டாக்சிகள் டெல்லிக்குள் நுழைய தடை விதிக்கப்பட்டுள்ளது.

காற்று மாசை கட்டுப்படுத்த அனைத்து தரப்பினரும் நடவடிக்கைகளை எடுக்க வேண்டியது அவசியம். பாஜ, காங்கிரஸ், ஆம் ஆத்மி என எந்த கட்சியானாலும் சரி, அனைவரும் இதில் ஒத்துழைப்பு நல்கவேண்டும். 

உச்ச நீதிமன்றம் வழங்கியுள்ள வழிகாட்டுதல்களை டெல்லி அரசு பின்பற்றி நடக்கும். டெல்லியில் புகை கோபுரங்களை மீண்டும் செயல்பாட்டிற்கு கொண்டுவர அறிவுறுத்தி இருக்கும் உச்ச நீதிமன்றத்திற்கு நன்றியை தெரிவித்து கொள்கிறேன்’ என்றார்.

விடுமுறை நீட்டிப்பு: காற்று மாசிலிருந்து மாணவர்களை பாதுகாக்கும் விதமாக தொடக்க பள்ளி முதல் 11ம் வகுப்பு வரை 11ம் தேதி வரை விடுமுறை அறிவிக்கப்பட்டிருந்தது. தற்போது 19ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டிருக்கிறது. 

தீபாவளியை முன்னிட்டு டெல்லியில் பட்டாசுகளை வெடிக்க கடும் கட்டுப்பாடுகள் பின்பற்றப்பட்டாலும் காற்று மாசின் அளவு கணிசமான அளவில் மீண்டும் உயரக்கூடும். இதிலிருந்து மாணவர்களை காக்கும் விதமாக இந்த விடுமுறை அறிவிக்கப்பட்டிருக்கிறது. 

காற்று மாசு காரணமாக சுமார் 2 கோடி மக்கள் கண் எரிச்சல் உள்ளிட்ட பிரச்னையால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதேபோல 50 சதவீதம் பேரை வீட்டில் இருந்தே பணியாற்ற வேண்டும் என மாசு கட்டுப்பாட்டு வாரியம் அறிவுறுத்தியுள்ளது.

தலைப்புச்செய்திகள்