Sunday, 12th May 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

மதுபான கொள்கை முறைகேட்டு வழக்கைக்கில் சிபிஐ, அமலாக்கத் துறை தனித்தனியாக விசாரனை

நவம்பர் 09, 2023 07:52

புதுடெல்லி: மதுபானக் கொள்கை முறைகேடு வழக்கில் அமலாக்கத் துறை கைது செய்தால் முதல்வர் கெஜ்ரிவால் தனது பதவியை ராஜினாமா செய்ய வேண்டுமா? அல்லது சிறையில் இருந்தபடி அரசு நிர்வாகத்தை நடத்த வேண்டுமா? என்று நாடு முழுவதும் பொதுமக்களிடம் கருத்து கேட்ட ஆம் ஆத்மி கட்சி முடிவு செய்துள்ளது. டெல்லி, பஞ்சாப் கட்சி மூத்த தலைவர்கள், நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்திய பிறகு இதில் இறுதி முடிவு எடுக்கப்பட உள்ளது.

டெல்லியில் நடந்த புதிய மதுபான கொள்கை முறைகேடு தொடர்பான வழக்கை சிபிஐ, அமலாக்கத் துறை தனித்தனியாக விசாரித்து வருகின்றன. இந்த முறைகேட்டில் நடைபெற்றதாக கூறப்படும் சட்ட விரோத பணப் பரிவர்த்தனை தொடர்பான வழக்கில், ஏற்கனவே துணை முதல்வராக இருந்த மணீஷ் சிசோடியா, ஆம் ஆத்மி எம்பி சஞ்சய் சிங் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டு உள்ளனர். இந்த வழக்கில் தற்போது முதல்வர் கெஜ்ரிவாலுக்கும் குறி வைக்கப்பட்டு உள்ளது.

சட்ட விரோத பணப் பரிமாற்றம் தொடர்பான விசாரணைக்கு ஆஜராகும்படி, முதல்வர் கெஜ்ரிவாலுக்கு அமலாக்கத் துறை கடந்த மாதம் 30ம் தேதி சம்மன் அளித்தது. அதில், நவம்பர் 2ம் தேதி விசாரணைக்கு ஆஜராகும்படி உத்தரவிட்டு இருந்தது. ஆனால், அவர் ஆஜராகவில்லை. 

மாறாக, சம்மனை திரும்பப் பெறும்படி கூறி அமலாக்கத் துறைக்கு கடிதம் எழுதினார். இதைத் தொடர்ந்து, இந்த வழக்கில் கெஜ்ரிவாலுக்கு மீண்டும் சம்மன் அனுப்ப அமலாக்கத்துறை பரிசீலனை செய்து வருகிறது.

இதனால், கெஜ்ரிவாலை கைது செய்ய அமலாக்கத் துறை மும்முரம் காட்டுவதாக ஆம் ஆத்மி கட்சியினர் கூறி வருகின்றனர். ஒருவேளை தான் கைது செய்யப்பட்டால் என்ன செய்வது? என்பது குறித்து தனது கட்சி எம்எல்ஏ.க்களிடம் கெஜ்ரிவால் கடந்த திங்களன்று ஆலோசனை நடத்தினார். 

இதன் தொடர்ச்சியாக, நேற்று முன்தினம் தனது கட்சியின் மாநகராட்சி கவுன்சிலர்களுடன் ஆலோசனை நடத்தினார். சட்டப்பேரவை வளாகத்தில் ஒன்றரை மணி நேரம் நடந்த இந்த ஆலோசனை கூட்டத்தில் கவுன்சிலர்களின் கருத்துகளை கெஜ்ரிவால் கேட்டறிந்தார்.

அதில், பெரும்பாலானவர்கள் கெஜ்ரிவால் கைது செய்யப்பட்டாலும் சிறையில் இருந்தவாறு ஆட்சி நடத்த வேண்டும் என்ற கருத்தை முன்வைத்தனர். அதோடு, கெஜ்ரிவால் அமலாக்கத் துறையால் கைது செய்யப்பட்டால் முதல்வர் பதவியை ராஜினாமா செய்ய வேண்டுமா? அல்லது சிறையில் இருந்தபடி ஆட்சியை நடத்த வேண்டுமா? என பொதுமக்களிடமே கருத்து கேட்டு பெறலாம் என மற்றொரு கருத்தும் முன்வைக்கப்பட்டது. 

இறுதியில் இந்த முடிவு ஏற்கப்பட்டது. நாடு முழுவதும் பொதுக்கூட்டங்கள் மூலமாக, மக்களிடம் இது பற்றி கருத்து கேட்க திட்டமிடப்பட்டு உள்ளது. இது குறித்து, டெல்லி மற்றும் பஞ்சாப் மாநிலங்கள் மற்றும் இதர மாநிலங்களை சேர்ந்த ஆம் ஆத்மி கட்சியின் மூத்த தலைவர்கள், நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தப்பட்டு இறுதி முடிவு எடுக்கப்பட உள்ளதாக கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன.

தலைப்புச்செய்திகள்