Monday, 20th May 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

இளம் வாக்காளர் பெயர் சேர்த்தல் விழிப்புணர்வு முகாம் 

நவம்பர் 08, 2023 08:10

நாமக்கல்: நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு வட்டம், கே.எஸ்.ஆர். பொறியியல் கல்லூரியில் இளம் வாக்காளர் பெயர் சேர்த்தல் விழிப்புணர்வு முகாம் மாவட்ட தேர்தல் அலுவலரும், மாவட்ட ஆட்சித்தலைவருமான ச.உமா தலைமையில் நடைபெற்றது. இது குறித்து ஆட்சியர் தெரிவித்ததாவது, 

தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி, திருச்செங்கோடு, கே.எஸ்.ஆர். பொறியியல் கல்லூரியில் இளம் வாக்காளர் பெயர் சேர்த்தல் விழிப்புணர்வு முகாம் சிறப்பாக நடைபெற்று வருகிறது.

இந்த முகாமானது நாமக்கல் மாவட்டத்திலுள்ள அனைத்து வட்டாரங்களிலும், அனைத்து கல்லூரி மற்றும் பள்ளிகளிலும் நடைபெற்று வருகிறது. 

01.01.2024 அன்று 18 வயது பூர்த்தியடைந்தவர்கள் அனைவரும் இந்த முகாமினை பயன்படுத்தி தங்களது பெயரை வாக்காளர் பட்டியலில் சேர்த்து கொள்ள வேண்டும்.

மேலும் கடந்த 27.10.2023 அன்று வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டதில், நாமக்கல் மாவட்டத்தின் மக்கள் தொகை சுமார் 
20 இலட்சமாகும். இதில் சுமார் 14,19,000 வாக்காளர்கள் உள்ளனர். 

இளம் வாக்காளர்களின் எண்ணிக்கை நாமக்கல் மாவட்டத்தின் மக்கள் தொகையில் ஒப்பீட்டு பார்த்தால் 55,000 ஆயிரம் இளம் வாக்காளர்கள் இருக்க வேண்டும். ஆனால் வரைவு வாக்காளர் பட்டியலின் படி, 16,000 இளம் வாக்காளர்கள் தான் உள்ளனர்.

இதனை கருத்தில் கொண்டு கல்லூரி மற்றும் பள்ளிகளில் உள்ள  18 வயது பூர்த்தியடைந்த இளம் வாக்காளர்கள் தங்களது பெயரை சேர்த்திடவும், விழிப்புணர்வு ஏற்படுத்திடவும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. 

அதன்படி, கடந்த 03.11.2023 அன்று இராசிபுரத்தில் உள்ள கல்லூரியில் இதே போன்று சிறப்பு முகாம் நடைபெற்றது.

மேலும், அனைத்து தலைமையாசிரியர்களுடனான ஆய்வு கூட்டத்தில் அனைத்து பள்ளிகளிலும் புதிய இளம் வாக்காளர்கள் சேர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று வலியுறுத்தப்பட்டுள்ளது. இக்கல்லூரியில் நடைபெறும் முகாமில் பதிவு செய்யும் அனைவருக்கும் அஞ்சல் மூலம் வாக்காளர் அடையாள அட்டை அனுப்பி வைக்கப்படும். இந்தியா ஒரு மிகப்பெரிய ஜனநாயக, வல்லரசு நாடு ஆகும்.

எனவே இன்றையதினம் பதிவு செய்யப்பட்ட வாக்காளர் அடையாள அட்டையை இளைஞர்கள் நல்ல முறையில் பயன்படுத்த வேண்டும். 

சுதந்திரமான, நியமான தேர்தலை நடத்த தேர்தல் ஆணையம் மேற்கொண்டு வரும் முன்னெடுப்பை நாம் சிறந்த முன்னுதாரணமாக எடுத்துக் கொள்ள வேண்டும்.

மேலும், நாமக்கல் மாவட்டத்தில் கடந்த 04.11.2023 (சனிக்கிழமை), 05.11.2023 (ஞாயிற்றுகிழமை) நடைபெற்றது. இதன் தொடர்ச்சியாக வருகின்ற 18.11.2023 (சனிக்கிழமை) மற்றும் 19.11.2023 (ஞாயிற்றுக்கிழமை) ஆகிய இரண்டு நாட்கள் அனைத்து வாக்குச் சாவடி மையங்களிலும் சிறப்பு முகாம்கள் நடைபெற உள்ளது.  

மேற்கண்ட நாட்களில் புதிய வாக்காளர் பெயர் சேர்த்தல், பெயர் நீக்கம் மற்றும் முகவரி திருத்தம் தொடர்பான மனுக்களை அந்தந்த வாக்குசாவடி மையங்களில் பொதுமக்கள் அளிக்கலாம். 

படித்த இளைஞர்களால் ஒரு நல்ல ஜனநாயகத்தை உருவாக்க முடியும். எனவே இன்று வருகை புரிந்துள்ள அனைத்து இளம் வாக்களர்களும் தங்கள் பகுதியில் உள்ள மற்ற இளம் வாக்காளர்களிடம் தெரிவித்து வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்கும் முகாமில் பங்கேற்க செய்ய வேண்டும் என ஆட்சியர் மருத்துவர் ச.உமா தெரிவித்தார். 

இந்நிகழ்ச்சியில், தனித்துணை ஆட்சியர் (சமூக பாதுகாப்புத் திட்டம்) ச.பிரபாகரன், கே.எஸ்.ஆர்.பொறியியல் கல்லூரி முதல்வர் முனைவர் ப.செந்தில்குமார், துறை சார்ந்த அலுவலர்கள் மற்றும் மாணவ, மாணவியர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

தலைப்புச்செய்திகள்