Saturday, 11th May 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

ராசிபுரம் அருகே 100 ஆண்டுகளுக்கு மேலாகத் தொடரும் சாட்டையடித் திருவிழா

நவம்பர் 08, 2023 06:39

ராசிபுரம்: உலகம் எவ்வளவு தான் நவீன மயமாகிக் கொண்டிருந்தாலும், தமிழகத்தின் பல பகுதிகளில் தம் முன்னோர்கள் பின்பற்றி வந்த விநோத திருவிழாக்களை பயபக்தியுடன், எவ்வளவு கடினமானதாக இருந்தாலும் கூட அவற்றை இன்றளவும் கடைபிடித்து வருகின்றனர். 

அந்தவகையில், 100 ஆண்டுகளுக்கு மேலாக சாட்டையடி விநோத திருவிழாவை ராசிபுரம் அருகேயுள்ள கிராமத்தினர் நடத்தி வருகின்றனர்.  

நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் அருகேயுள்ள அத்திப்பலகானூரில் மாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவில் திருவிழா கடந்த மாதம் 26ம் தேதி பூச்சாட்டுதல் மற்றும் கம்பம் நடுதல் நிகழ்ச்சியுடன் தொடங்கியது. இதைத்தொடர்ந்து தினந்தோறும் அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டன. பூவோடு எடுத்தல் நிகழ்ச்சி நடைபெற்றது. 

இதில் பக்தர்கள் பூவோடு எடுத்து கோவிலை சுற்றி வந்தனர்.
பின்னர் பக்தர்களுக்கு சாட்டையடி வழங்கும் நிகழ்ச்சி கோவில் அருகே நடந்தது. அப்போது கோவில் பூசாரிகள், பக்தர்கள் மீது சாட்டையால் அடித்தனர்.

வேண்டுதலை நிறைவேற்ற நூற்றுக்கணக்கான பக்தர்கள் சாட்டையடி வாங்கினர். சிலர் தங்களின் கைக்குழந்தைகளுடன் நின்று சாட்டையடி வாங்கினர்.

சாட்டையடி வாங்கினால் பில்லி, சூனியம் மற்றும் நோய்கள் நீங்கும், திருமணம் ஆகாத பெண்களுக்கு திருமணம் நடைபெறும், குழந்தை பாக்கியம் கிடைக்கும் என்பது ஐதீகமாக இருந்து வருவதும், 100 ஆண்டுகளுக்கு மேலாக நடைபெற்று வருவதாகவும் பக்தர்கள் தெரிவிக்கின்றனர். 

இந்த விநோத நிகழ்ச்சியை பார்ப்பதற்காக அத்திப்பலகானூர், கட்டனாச்சம்பட்டி, ராசிபுரத்தைச் சேர்ந்த பக்தர்கள் திரளாக வந்திருந்தனர். அதன்பிறகு பக்தர்கள் மாரியம்மனுக்கு பூஜை செய்து வழிபட்டனர்.

விழாவையொட்டி அம்மன் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

திருவிழாவையொட்டி 8ம் தேதி காலையில் அம்மை அழைத்தல், பொங்கல் வைத்தல், வெட்டுதல் நிகழ்ச்சியும், மாலையில் அலகு குத்துதல்,  9ம் தேதி உடற்கூறு வண்டி வேடிக்கை, எருதாட்டம் நிகழ்ச்சிகளும், 10ம் தேதி இரவு கம்பம் எடுத்தலும், 11ம் தேதி மஞ்சள் நீராடல் நிகழ்ச்சியுடன் திருவிழா நிறைவு பெறுகிறது.

தலைப்புச்செய்திகள்