Sunday, 12th May 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

ஒன்றிய அரசு விளையாட்டு வீரர்களை ஊக்குவிக்கிறது கே.பி. ராமலிங்கம் பேச்சு

நவம்பர் 06, 2023 01:26

ராசிபுரம்: பிரதமர்  நரேந்திர மோடி, நமது நாட்டின் விளையாட்டு துறைக்கு உயர் முன்னுரிமை அளித்து,  விளையாட்டு வீரர்களை தொடர்ந்து ஊக்கப்படுத்தி வருகிறார் என்று, பா.ஜ.க., மாநிலத் துணைத் தலைவர் கே.பி. இராமலிங்கம் தெரிவித்துள்ளார்.

ராசிபுரம் அருகே நடைபெற்ற, 2ம் ஆண்டு மாநில அளவிலான உள்அரங்கு வில்வித்தை விளையாட்டு போட்டியில் 350க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.

நாமக்கல் மாவட்டம், இராசிபுரம் வட்டம், மசக்காளிப்பட்டி பகுதியில், தமிழ்நாடு உள்ளரங்கு வில்வித்தை சங்கம் சார்பில், 2-ம் ஆண்டு, தமிழ்நாடு மாநில அளவிலான உள்ளரங்கு வில்வித்தை போட்டிகள் - 2023  நடைபெற்றது.

சர்வதேச அளவில் உள்ளரங்கு வில்வித்தை போட்டிகள் முக்கிய போட்டிகளாக நோக்கப்படுகின்றன என்பதால் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து வில்வித்தை வீரர்- வீராங்கனைகள் இதில் ஆர்வத்துடன் பங்கேற்றனர். 

இதில், மாநில அளவிலான  வில்வித்தைப் போட்டிகளை,  மசக்காளிப்பட்டி தனியார் பள்ளியின் உள்ளரங்கத்தில், பாஜக மாநில துணைத் தலைவரும், Bare Bow India-வின் தலைவருமான கே.பி. இராமலிங்கம்,  அம்பு எய்து தொடங்கி வைத்தார்.

தொடர்ந்து, மசக்காளிப்பட்டி மகரிஷி வித்யா மந்திர் கல்வி நிறுவனங்களின் தலைவர் கே. சிதம்பரம் உள்ளிட்டோர் அம்புகள் எய்து, பல்வேறு பிரிவுகளில் போட்டிகளை தொடங்கி வைத்தனர்.  

இதில், INDIAN, RECURVE, COMPOUND, BARE BOW (வெற்று வில்) ஆகிய 4 முறைகளில் போட்டிகள் நடைபெற்றன. 5   பிரிவுகளில் போட்டிகள் நடைபெற்றன. 

தமிழகத்தின் நாமக்கல், சென்னை, ஈரோடு, சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி,  கோவை, மதுரை, விருதுநகர் உள்ளிட்ட 16 மாவட்டங்களில் இருந்து 350 வில்வித்தை வீரர்- வீராங்கனைகள் இதில் கலந்துகொண்டு, இலக்குகளை நோக்கி அம்புகளை எய்து, தங்கள் திறமைகளை வெளிப்படுத்தினர்.

அதனடிப்படையில் அவர்களுக்கு, வெற்றிப் புள்ளிகள் வழங்கப்பட்டன. முதல் இரண்டாம் மூன்றாம் இடங்கள் பிடித்தவர்களுக்கு தங்கம், வெள்ளி, வெண்கலம் பதக்கங்கள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. மேலும் அனைவருக்கும் பங்கேற்பு சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.

இதில் பல்வேறு வயது பிரிவுகளில், சிறந்த முறையில் விளையாடி, அதிக புள்ளிகள் பெற்று,  தேர்வு செய்யப்படும் 90 பேர் அடுத்த ஆண்டு சென்னையில் நடைபெறும் தேசிய அளவிலான வில்விதைப் போட்டியில் தமிழ்நாடு அணி சார்பில் பங்கேற்பார்கள். 

முன்னதாக போட்டிகள் துவக்க விழா நிகழ்ச்சியில் பேசிய, பா.ஜ.க., மாநிலத் துணைத் தலைவரும், Bare Bow India-வின் தலைவருமான Dr. K.P. இராமலிங்கம்,  நமது நாட்டின் பாரம்பரிய அமைக்க வில்வித்தை போன்ற கலைகளை இன்றைய இளம் தலைமுறையினர் அதிக ஆர்வம் செலுத்தி கற்று வருவது பாராட்டிற்குரியது.

வளர்ந்து வரும் நமது இந்தியாவில் இதைப் போன்ற விளையாட்டு  வீரர்களின் திறமைகள் போற்றப்பட வேண்டும். அப்போதுதான் அவர்கள் ஒரு வல்லரசு இந்தியாவை படைக்க முடியும். 

பிரதமர் நரேந்திர மோடி இதுபோன்ற விளையாட்டு வீரர்களின் திறமைகளை ஊக்குவித்து,  விளையாட்டு துறைக்கு உயர் முன்னுரிமை அளித்து, பல்வேறு திட்டங்களை அத்துறைக்கு சிறப்பாக செயல்படுத்தி வருகிறார். சாதனை புரியும் விளையாட்டு வீரர்களை தமது இல்லத்திற்கு வரவழைத்து அவர்களோடு அதிக நேரம் செலவழித்து, கலந்துபேசி ஊக்குவித்து வருகிறார்.

இதன்மூலம் அடுத்து வரும் பல்வேறு தேசிய, சர்வதேச போட்டிகளில் அவர்களால் தொடர்ந்து வெற்றி பெற முடிகிறது என்றும் பாஜக மாநில துணைத்தலைவர்  K.P. இராமலிங்கம் தெரிவித்தார். 

துவக்கவிழா நிகழ்ச்சியில், இராசிபுரம் மசக்காளிப்பட்டி மகரிஷி பள்ளி நிர்வாகிகள்,  தமிழ்நாடு உள்ளரங்கு வில்வித்தை சங்க நிர்வாகிகள், வில்வித்தை வீரர்கள், பெற்றோர் உள்பட பலரும் கலந்துகொண்டனர்.

தலைப்புச்செய்திகள்